எதையும் மன ஈடுபாட்டுடன் செய்தால்தான் வெற்றி பெறமுடியும்’ என்கிறார் என் தாத்தா. இன்றைய அவசர யுகத்தில் எல்லா காரியங்களிலும் மன ஒட்டுதல் என்பது சாத்தியமா?

முதல் கோணம்
கடவுளின் பெயரைக் காதால் கேட்டாலோ, நாம் படைத்த இறைவனின் திருவடிவைப் பார்த்தாலோ, அவருடைய பெயரைச் சொன்னாலோ, அவரது நிவேதனத்தை உட்கொண்டாலோ போதும், வாழ்வில் இன்னல்கள் யாவும் நீங்கி, முழு மகிழ்ச்சியைப் பெறுவோம்; இவ்வுலகில் மட்டுமல்ல, மறு உலகிலும் மகிழ்ச்சி பொங்கும் எனச் சொல்லும் மகான்கள் உண்டு. இவை அத்தனையும்
வெளிப்புற உடல் உறுப்புகளோடும், நலன்களோடும் இணைந்து மகிழவைப்பவை; மனதுக்கும் புலன்களுக்கும் தொடர்பு இருக்காது. மனதின் தொடர்பு இல்லாத எந்தச் செயலும் பயனளிக்காது.

‘மணல் பரப்பில் தண்ணீர் விட்டால், அது மணலுடன் நின்று விடும்; பூமிக்கு அடியில் போகாது. அதேபோன்றுதான் காதில் கேட்ட பாட்டு காதுடன் நின்றுவிடும்; மனதில் பதியாது’ என்றார் நீலகண்ட தீக்ஷிதர் (கர்ணம் ததம் சுஷ்யதிகர்ண ஏவ ஸங்கீதகம் ஸைத்த வாரி நீத்யா). ‘உணவை வாய் உட்கொள்கிறது. ஆனாலும் மனதுடன் இணைந்து உட்கொள்ளும்போதுதான் உணவின் சாரம் உடலுக்கு உதவும்’ என்றார் சரகர் (தன்மனாபுஜ்ஜீத).

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் கொலை செய்துவிட்டான்; அந்தக் கொலையானது மனமுவந்து செய்யப்பட வில்லை; ஆகவே அவனுக்கு விடுதலை என்ற தீர்ப்புகளும் உண்டு. வீட்டுக்குள் நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டிய திருடனை, வேறு வழியின்றிக் கொன்றுவிட்டான் வீட்டுக்காரன். இங்கேயும், கொலையானது மனமுவந்து நிகழவில்லை; தற்காப்புக்காகவே நிகழ்ந்தது. ஆகவே, வீட்டுக்காரனை விடுவித்துத் தீர்ப்பு வரும். தனது சொத்துக்கு அடுத்த வாரிசை நிர்ணயிப்பதற்காக எழுதப்படும் உயிலில், ‘சுய நினைவுடன், வேறு எவருடைய தூண்டுதலும் இல்லாமல் மனமுவந்து இதை எழுதியிருக்கிறேன்’ என்ற வரிகள் இருக்கும்.

‘மனமே முரரிபுவை வணங்கு’ என்றார் குலசேகரப் பெருமாள் (சேதோபஜ...). ‘மஹாகணபதியை மனதில் இருத்தி வழிபடுகிறேன்’ என்றார் தீக்ஷிதர் (மஹாகணபதிம் மனஸா ஸ்மராமி). ‘மனமே நீ பரப்ரம்மத்தில் வளைய வர வேண்டும் (மானஸ ஸந்சரரேப்ரம்மணி).

கண்கள் பார்த்தாலும் மனதில் பதிந்தால்தான் காதலாகும். அஷ்டாங்க நமஸ்காரத்தில் மனமும் இணையவேண்டும்’ எனச் சொல்லும் (உரஸாமனஸா...). இவையெல்லாம் மனதின் தொடர்பு இருந்தால் மட்டுமே பயனளிக்கும் என்றும் விளக்கும்.

 இரண்டாவது கோணம்

அஜாமிளன் தன் மகனை ‘நாராயணா’ என்று கூப்பிட்டார். ஆனால், வந்தது மந் நாராயணன். அத்துடன் நிற்காமல் அவருக்கு மோட்சமும் அளித்தார் என்று புராணம் மிகைப்படுத்திச் சொல்லும்.
‘நாராயணா’ என்று எவரைக் கூப்பிட்டாலும், சாட்சாத் நாராயணன் வந்தருள்வார் என்பது புராணத்தின் விளக்கம். இங்கு, மனம் நாராயணனை நினைக்கவில்லை. மனம் செயல்படாமல், புலன்கள் செயல்பட்டாலே அருள் கிடைத்துவிடும் என்கிறது புராணம்.

அப்படித்தான், பழநிக்கும் திருப்பதிக்கும் செல்லாமலேயே பஞ்சாமிர்தமும் லட்டும் கிடைத்துவிடும். காசிக்குப் போகாமலேயே கங்கை ஜலமும் கிடைத்துவிடும். கோயில்களுக்குப் போகாமல், சின்னத்திரையிலேயே அந்த தெய்வங்களைப் பார்க்கமுடியும். பஜனையில் கலந்துகொள்ளாமல், ஒலி நாடாவில் நாராயணனின் பெயரைக் கேட்டுவிடலாம். சங்கீத சபாவில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கச்சேரியை ரசிப்பது போல்... அங்கு தரப்படும் உணவைச் சாப்பிட்டபடியே சொற்பொழிவைக் கேட்கலாம். சொற்பொழிவாளர் உதிர்க்கும் நகைச்சுவையை ரசிக்கலாம். விருப்பத்துக்கு ஏற்ப அங்குமிங்கும் அலைந்து கொண்டும் இருக்கலாம். சிற்றுண்டியை ஏற்கும்போது, அதன் ருசியில்தான் மனம் இருக்குமே தவிர, கடவுளை மனம் நினைக்காது. அதேபோல், நகைச்சுவையை ரசிக்கும்போதும் கடவுளை நினைக்க இயலாது.
தற்காலச் சூழலில், தொலைபேசியில் (கைபேசி) பேசிக்கொண்டே பகவான் நாமாவைக் கேட்க இயலாது. அக்கம்பக்கம் நாற்காலி யில் இருப்பவருடன் உரையாடும்போது மனம் கடவுளை நினைக்காது. இங்கெல்லாம் மனம் ஈடுபடாமலேயே ஒரு யந்திரம் போன்று செயல்படுவோம். அப்படியிருந்தும், அவற்றில் கலந்துகொள்பவர்களுக்குக் கடவுள் அருள் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை மக்களின் மனதில்  சொற்பொழிவாளர்கள் ஏற்படுத்திவிடுவார்கள்.

 மூன்றாவது கோணம்

முடியரசு காலத்தில் குருகுலத்தில் கல்வி பயின்று, அரசாட்சி குறித்த சிறப்பு அறிவைப் பெற்று, குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு இளவரசனாகப் பதவி ஏற்பார்கள். தனது வாரிசு அரசாட்சியை ஏற்கும் தகுதியைப் பெற்றவுடன், அவனிடம் அரசை ஒப்படைத்துவிட்டு, குடும்பத்துடன் கானகம் சென்று, வானப்ரஸ்தத்தை ஏற்பார்கள். உலகவியல் சுகத்தை அறவே துறந்து, கடவுளை நெஞ்சில் இருத்தி வழிபடுவார்கள்.

முடியரசில், மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் பொறுப்பு அரசனுக்கு இருக்கும். அரசனின் பாதுகாப்பில், மக்கள் அனைவரும் பொறுப்பில்லாத சுதந்திரத்தில் மகிழ்ச்சி பெறு வார்கள். நாட்டுக்குக் காவல்காரன் போல் அரசன் எப்போதும் விழிப்புடன் செயல்படுவான். அவனுக்குப் பொறுப்பு உண்டு. சுதந்திரம் இல்லை. மக்களைக் காப்பதைக் கடமையாக ஏற்பான். அதற்கு வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். மக்களிடமிருந்து சிறுதொகையை வரியாக ஏற்பான். அதைப் பன்மடங்காக்கி மக்களுக்கான நன்மைகளை விரிவாக்குவான். மக்களுக்குக் கல்வி அளித்து, அதன் மூலம் ஒழுக்கத்தை ஊட்டி, வேலைவாய்ப்பு அளித்து, உயர்ந்த குடிமக்களாக வளரச் செய்வான். ‘வாரிசுகளை ஈன்றெடுப்பது தாய்-தந்தையர்தான். ஆனால், அவர்களை வளர்த்து ஆளாக்குவது அரசனின் கடமை’ என்பார் காளிதாசன் (ப்ரஜானாம்வினயாதானாத்ரஷணாத்பரணாதபி.ஸபிதாபிதர; தாஸம் கேவலம் ஜன்மஹேதவ:).

தற்போது, குடியரசு மலர்ந்திருக்கிறது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். பிறப்பி லேயே மன்னராகும் உரிமையுடன் பிறக்கிறார் கள். ஆட்சி செலுத்த எந்தத் தகுதியும் தேவை யில்லை. இறக்கும் வரையிலும் ஆட்சியில் அமர்ந்திருக்கலாம். வயது நிர்ணயம், இனப் பாகுபாடு எதுவும் இல்லை. ஆண் - பெண் பாகுபாடும் இல்லை. ஆட்சியில் அமர்ந்த பிறகும் எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால் அவனது கட்டளைக்கு, மெத்தப் படித்தவர்கள் அத்தனைப்பேரும் அடங்கவேண்டும். இங்கு படித்தவர்களுக்குப் பொறுப்பு உண்டு; சுதந்திரம் இல்லை. படித்தவர்கள் குழாம் அரசு யந்திரத்தை
இயக்குவார்கள். ஆனால், பதவி ஏற்றவனுக்குப் பொறுப்பும் இல்லை; வேலையும் இல்லை. குடியரசில் பதவி ஏற்பவனே உண்மையான சுதந்திரத்தை முழுமையாகச் சுவைப்பவன் ஆவான்.

கல்வியற்ற பாமரர்களுக்கும், பக்குவ வயதை அடையாதவர்களுக்கும், முதியோர்களுக்கும் அரசியல் கல்வியில் தேர்ச்சி இருக்காது. அவர்களது சிபாரிசில் தேர்தலில் வென்று பதவியில் அமர்ந்து விடுவார்கள். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பார்கள். அதை மக்கள் சேவையாக பிரகடனப்படுத்துவார்கள். மெத்தப் படித்தவர்களின் உழைப்பில் தயாரான முன்னேற்றத்தை ஆரம்பித்து வைத்து, அதைத் தங்களது சாதனையாகப் பறைசாற்றுவார்கள்.

அரசு யந்திரம் அவருக்கு அடிபணிந்து உழைக்கும். இவரோ உழைக்காமல் ஊதியம் பெறுவார். கல்வியறிவும், அனுபவமும் அரசாட்சியின் அறிவும் இல்லாததால், மக்களை வழி நடத்தும் வழிமுறை தெரியாது. தானாகப் படித்துப் பட்டம் பெற்று உழைத்து முன்னேறிய மக்களை, தான் உருவாக்கியதாகச் சொல்வார். தகுதி இல்லாதவர்கள் ஆட்சி யில் அமர்கிறார்கள். தகுதி இருப்பவர்கள் அவர்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை நடத்துகிறார்கள். முடியரசில் கற்றவனுக்கு எங்கு சென்றாலும் பெருமை; குடியரசிலோ அவன் எங்கு சென்றாலும் அடிமைதான். எதை ஏற்பது என்பதில் குழப்பம்!

இனி, அந்தக் காலத்து முடியரசு திரும்பாது. ருசி கண்ட பூனை இழக்கத் துணியாது. முடியரசில் ஓர் அரச குடும்பம் சுகமாக வாழ்ந்தது. குடியரசில் ஒரு கும்பல் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. அன்று ஓர் அரசன் மட்டும் இருப்பான். தற்பொழுது ஒவ்வொரு மாகாணத்துக்குத் தனித்தனி அரசர் குழாம் உண்டு (மந்திரிகள் குழாம்). சாதி, மதம், இனம் என்கிற பாகுபாடுகள் இல்லை. ஆனால், அரசியல்வாதி என்கிற தனி சாதி உயர்ந்து வளர்ந்திருக்கிறது. அவர்களே இன்று மேட்டுக் குடிமக்களாக மதிக்கப்படுகிறார்கள். தற்போது அரசியல்வாதியாக மாறுவதுதான் சிறந்த வழி. கல்வி வேண்டாம்; தகுதி வேண்டாம். வேலையில் இருந்து ஓய்வு இருக்காது. தங்களது வாரிசுகளையும்கூட அரசியலில் இணைத்து விடலாம். வாழ்விலும் எந்தப் பிரச்னையும் தலைதூக்காது. படித்தவர்கள் மானத்தோடு, வாழ குடியரசில் வழி பிறக்குமா என்று தெரியவில்லை.

ஒழுக்கம் அடக்கம், ஈவு - இரக்கம் எல்லாம் மறைந்துவிட்டது. சுயநலம், ஆசை, பகை போன்றவை வளர்ந்துவிட்டன. நல்லவர்கள் பலர் கவலையில் ஆழ்ந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு எதைச் சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. இப்படி  இருக்கும்போது, எந்த விஷயத்திலும் மனம் ஈடுபாட்டுடன் செயலாற்ற முடியுமா என நீங்களே யோசித்து முடிவெடுங்கள்.

 தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

அன்றைய அறவழி இன்று இல்லை. அன்றைக்கு ஆள்பவர்கள் எந்த விஷயத்தை யும் மனதாரச் செய்தார்கள். அவர்கள் வழியில் மக்களும் செயல்பட்டார்கள் சிறப்பான வாழ்வைப் பெற்றார்கள். அப்படியொரு பொற்காலத்தை மீட்க வேண்டும் எனில், மனம் சார்ந்து செயல்படவேண்டும். இறைவனை வழிபடுவது முதற்கொண்டு ஒவ்வொரு செயலையும் மன ஈடுபாட்டுடன் செய்தால் மகத் தான வெற்றியைப் பெறமுடியும்.

Comments