ஆழ்வார்களின் வாழ்வினிலே

கண்ணன் தாங்கிய ஐந்து படைகளில் ஒன்றான ‘நரந்தகம்’ என்னும் வாளின் அம்சமாக செவ்வல்லி மலரில் தேஜசொடு கூடிய தெய்வக் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த அடுத்த கணமே புன்முறுவல் பூத்த அந்தக் குழந்தையைச் சுற்றிப் பேரொளி பொங்கியது. குருகுலத்தில் சேர்ப்பதற்கு முன்னமே கொஞ்சும் தமிழ் அதன் நாக்கினில் பெருக ஆரம்பித்தது. நெகிழவைக்கும் தமிழ்ப் பாசுரங் களை, நினைத்த நேரத்தில் பாடி வியக்கவைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா எம் பெருமான் நாமத்தை ஜபிக்கத் தொடங்கியது.
எந்தப் பருவத்திலும் எம்பெருமானைப் பற்றிய பிதற்றலைத் தவிர வேறு எதையும் செயாமல் இப்படிப் பித்தனாக வாழ்கிறானே என்று ஊரார் வியந்தனர். அதனால் அவரைப் ‘பேயன்’ என்று அழைத்தனர் பக்தர்கள். அடியார்களும் பக்தர்களும் அவரைப் ‘பேயாழ்வார்’ என்று போற்றிக் கொண்டாடினர்.
மயிலையில்பிறந்து வளர்ந்த பேயாழ்வார் அன்று திருக்கோவலூரில் - ஏற்கெனவே சென்ற இதழில் நாம் குறிப்பிட்டிருந்தோமே - அந்த வீட்டின் இடைகழியில் மழை பெயும் ஒரு நாள் இரவில் வந்தார். உள் ளேயும் மழைதான்! அங்கே முதல் ஆழ்வார்கள் இருவரும் அண்ணலைப் பற்றி அமுதமழையாப் பேசிக்கொண்டிருந்தனர்.
உள்ளே வரலாமா?" எனப் பேயாழ்வார் கேட்டார்.
மங்கலான வெளிச்சத்திலும் வந்தவர் திருமால் அடியார் என அந்த இருஆழ்வார்களுக்கும் தெரிந்துவிட்டது.
வாருங்கள் வாருங்கள்! சிறு இடம்தான்... ஒருவர் படுக்கலாம்; இருவர் அமரலாம்; மூவர் நிற்கலாம்" என்றனர் உற்சாகமாக.
நிற்போம்" எனப் பேயாழ்வார் அந்த இரு ஆழ்வார் களோடு நெருங்கி நின்றார்.
மூவரும் இறைவனின் பெருமையைச் சொல்லியும் கேட்டும் மகிழ்ந்தனர். இந்த சந்தோஷ சூழ்நிலையில் எம்பெருமானும் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்தச் சிறிய இடத்தில் அவர் வந்து அவரும் நெருக்க ஆரம்பித்ததும், யார் தங்களை நெருக்குவது என்ற கேள்வி ஆழ்வார்கள் மூவர் மனதிலும் எழுந்தது. இரவு நேரம்; வெளிச்சம் துளியும் இல்லை; எப்படித்தான் காண்பது?
விளக்கு ஏற்ற முயற்சி நடக்கிறது. சாதாரண விளக்கில்லை... ஞான விளக்கு!
ஞானச் சுடர்விளக்கை ஏற்றுவதாக ஓர் ஆழ்வார் பாடி முடித்தார் அல்லவா? உடனேயே அந்த ஒளியில் வந்தவர்யாரென முதலில் பேயாழ்வாருக்குத் தெரிந்துவிட்டது. தன் பக்தர்களைக் காணத் திருமால் தேடிவந்தாலும் அவன் திருமார்பிலிருந்துஅந்தத் திருமகள் தாக்கே உரிய பாசத்தில் முதலில் எட்டிப் பார்த்தார்.
பேயாழ்வார்,
திருக் கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று"
என்று உரக்கப்பாடுகிறார். ஆம் பரிந்துரை கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியின் பொன்மேனி யைக்கண்ட ஆனந்தம்!
‘கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்’ என்ற கூற்றைப் பொயாக்கி அவர்கள் இறைவனைக் கண்டு அதனை நம்முடன் பகிர்ந்ததே அவர்களின் அளப்பறியா அன்புக்குச் சான்று.
திருப்பாற்கடலும் திருவேங்கடமும் பெருமானின் இருப்பிடங்களாக இருந்தாலும் பக்தர்களின் இடம் பார்த்துத் தேடிவந்து அவர்கள் மனத்தில் குடிகொள்வதைத்தான் இறைவன் விரும்புகிறான் என்பதை இந்த முதலாழ்வார்கள் என்னும் மூன்று ஆழ்வார் பெருமான்களின் ஆழ்ந்த பக்தி நமக்கு எடுத்துரைக்கிறது அல்லவா?

Comments