ஈர உடை அணிந்து பூஜை செய்வது,மந்திரம் ஜபிப்பது கூடாது என்கிறார்களே... ஏன்?

நமது சாஸ்திரங்களில், குளித்து விட்டு, தண்ணீர் சொட்டச் சொட்ட பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது, பிதுர் காரியங்களுக்குதான்! தேவ காரியங்கள் என்று வரும் போது அவ்வாறு செய்யக் கூடாது! நமக்கு அப்போது உடுக்க வேறு துணியில்லை என்றால், அதை நனைத்து நன்றாகப் பிழிந்து ஏழு முறை உதறி கட்டிக்கொண்டு பின்னர் பூஜை செய்யலாம். ஆனால், நம் முன்னோர் காட்டிய வழிப்படி ஈரத் துணியைக் கட்டிக் கொண்டு, பூஜை, ஜபங்களை செய்வதில்லை.
காவிரி போன்ற நதிகளில், புனித தீர்த்தங்களில், குளங்களில் நீராடுகிறோம். குளித்து முடித்து அங்கேயே கரையில் அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும் என்று நினைக்கும்போது, மேலே சொன்னபடி அந்தத் துணியையே உடுத்திக் கொண்டு ஜபம், பாராயணம் செய்யலாம். வீட்டுக்கு வந்தால் ஈரம் இல்லாத, உலர்ந்த துணியை உடுத்திக் கொண்டுதான் பூஜை செய்ய வேண்டும் என்பது நம் தமிழர்களின் வழக்கம். கேரளா, கர்நாடகாவில் ஈரத் துணியைக் கட்டிக் கொண்டுதான் பூஜை செய்வார்கள். காரணம், வீட்டில் இப்படி உலர வைத்து, மடியாகக் கட்டிக் கொள்ளும் சுத்தம் போதாது என்பதால் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள். ஆனால், அதையும் நன்றாகப் பிழிந்து உதறித்தான் கட்டிக் கொள்கிறார்கள். எப்படி இருப்பினும், ஈரம் சொட்டச் சொட்ட துணியைக் கட்டிக் கொண்டு பூஜை செய்யக் கூடாது!
குத்து விளக்கு பூஜையில் விளக்கின் பாதத்தில் வைக்கும் அரிசியை மறுநாள் சுவாமி நைய்வேத்தியத்துக்குப் பயன்படுத்தலாமா?

அதைக் கூடியவரையில் தானம் செய்வதுதான் சிறப்பானது. காரணம், அதில் ஸ்வாமியை வைத்து ஆவாஹனம் செய்து பூஜை செய்திருக்கிறோம். சில பூஜைகளில் அதில் வைத்த திரவியத்தில் உள்ளதை நாம் எடுத்துக் கொள்ளலாம். சில பூஜைகளில் அவ்வாறு பயன்படுத்தியதை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆசார்யனுக்கு, குருவுக்கு, அதாவது பூஜை செய்து வைத்தவருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெரும்பாலும், நாம் பூஜைகளில் பயன்படுத்தியதை தானம் செய்வது விசேஷம்!
வீட்டு வாசலில் சிலர் இருபுறமும் அகல் விளக்கு ஏற்றுகிறார்களே ஏன்?

ஒரு முகமாகவும், இரு முகமாகவும் விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டு; ஐந்து முகமாகவும்கூட விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டு. சம்பிரதாயங்களில் பகவான், சக்தியை விளக்கக் கூடிய விஷயம். பகவான் ஒருவனே என்று காட்டுவதை விளக்குவது ஒருமுக தீபம். பகவான் சக்தியுடன் கூடியவன் என்பதை காட்டுவது இருமுக தீபம். அந்த தாத்பரியத்தில் இரு புறங்களிலும் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுவது என்பது சில இடங்களில் சம்பிரதாயமாக உள்ளது. அது அவர வர்களின் குடும்பப் பழக்கங்களை அனுசரித்துச் செய்யலாம்.
சுபகாரிய முடிவில், ‘ சாந்தி... சாந்தி’ என மும்முறை கூறுவது ஏன்?

நம் பூஜை, ஜப ஹோமங்களில் இந்த பூஜைக்கு, இந்த ஹோமத்துக்கு இந்தந்த வேதத்துக்குள் உள்ள பாகத்தில் ஜபம் செய்ய வேண்டும் என்று நம் ரிஷிகள் எழுதி வைத்துள்ளனர். ஸ்ரீசூக் தம், விஷ்ணு சூக்தம், பிரும்ம சூக்தம், பூ சூக்தம், துர்கா சூக்தம் முதலிய எத்தனையோ மந்திரங்கள் உள்ளன. ஆனால், எந்த வேத மந்திரங்களை ஜபம் செய்தாலும், கடைசியில் கோஷ சாந்தி என்று ஒரு மந்திரம், அந்த மந்திரம் சொல்லிதான் அந்தப் பாராயணத்தை நிறைவு செய்ய வேண்டும். இது நம் முன்னோர்கள் எழுதி வைத்த சாஸ்திரம்.
அந்த கோஷ சாந்தி என்பது, உலகத்தில் இருக்கும் அனைத்துவித, பஞ்ச பூதங்கள், தெய்வங்கள், நதிகள், விருட்சங்கள், அக்னி முதலிய எத்தனையோ தெய்வங்கள் சாந்தி அடையணும்,
சாந்தி அடையணும் என்று மந்திரத்தில் வரும். ப்ருத்வீ சாந்தி, அந்தரிக்ஷஸ் சாந்தி, திசசாந்தி என்று வரும். அந்த மந்திரம் முடியும்போது ‘ஓம் சாந்தி...
சாந்தி... சாந்தி...’ என்று மும்முறை சாந்தி மந்திரம் சொல்லி முடிப்பது வழக்கம். கோஷ சாந்தியின் முடிவில் மும்முறை சாந்தி சாந்தி சாந்தி: என்று முடிவதால், இவ்வாறு சுப காரிய முடிவில் சாந்தி மந்திரத்தை மும்முறை சொல்வது ஒரு வழக்கம் ஆனது!

Comments