ஹோலி கொண்டாடுவது ஏன்?

ஹோலி பண்டிகை’ நம் நாட்டில் பல காலமாக மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். முற்காலத்தில் இந்த ஹோலி பண்டிகை ‘வசந்த உற்ஸவம்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இந்த ஹோலி பண்டிகையின் பின்னணியில் ஹிரண்யகசிபுவின் தங்கை ஹோலிகா என்பவள் அக்னி பகவானால் தகனம் செய்யப்பட்ட ஒரு புராண சம்பவம் சொல்லப்படுகிறது.

 ஹிரண்யகசிபுவின் சகோதரியான ஹோலிகா என்பவள் அக்னியால் தான் எரிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்று வரம் பெற்றவள். ஆனால், தர்மத்துக்கு விரோதமான செயலில் ஈடுபடும்போது அவள் பெற்றிருந்த வரம் பயன் இல்லாமல் போய்விடும்.
அரக்கன் ஹிரண்யகசிபு  தன்னுடைய எதிரியான பரந்தாமனிடம் மகன் பிரகலாதன் வைத்திருந்த பக்தியைக் கண்டு கோபம் கொண்டான், மகனைக் கொல்ல முடிவு செய்து, தங்கை ஹோலிகாவிடம், பிரகலாதனைக் கொல்லும்படி கட்டளை இட்டான். அவளும் பிரகலாதனைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, அக்னி குண்டத்தில் இறங்கினாள். ஆனால், ஹோலிகாவின் தர்மத்துக்கு விரோதமான செயல் கண்டு கோபம் கொண்ட அக்னி பகவான் ஹோலிகாவை சுட்டுப் பொசுக்கிவிட்டு பிரகலாதனைக் காப்பாற்றி தர்மத்தை நிலைநாட்டினார். ஹோலிகா அக்னிபகவானால் அழிக்கப்பட்ட நாளையே மக்கள் ஹோலி பண்டிகையாகக் கொண்டாடி வருகிறார்கள்.

-
 
         லாடன் சித்தர் வழிபட்ட முருகன்!
 

   துரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஒத்தக்கடை. இங்குள்ள யானைமலையின் ஒரு பகுதியில் குடைவரையாகத் திகழ்கிறது லாடன் முருகன் கோயில். கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. லாட தேசத்திலிருந்து வந்த லாடன் சித்தர் தங்கியிருந்து வழிபட்ட தலமாதலால் அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இன்றைய குஜராத் பகுதியே அன்றைய லாட தேசமெனவும் குறிப்பிடுகின்றனர்.

மதுரையை ஆண்ட பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பிரான் பட்டர் சோமாசியார் செய்வித்த குடைவரைக் கோயில் இது என கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. மேலும், இந்த யானை மலையில் சமண முனிவர்களின் கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.
இந்த லாடன் கோயில் கருவறையில் தெய்வானை மட்டுமே உடனிருக்க, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் முருகப்பெருமான். முருகனுக்கான பிரத்யேக குடைவரைக் கோயில் இது மட்டுமே என்கிறார்கள் பக்தர்கள். இங்கு முருகப்பெருமான் முப்புரி நூலும், போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் எனும் அணிகலனும் அணிந்துள்ளார். ஆக, சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானையை மணமுடித்த பிறகான கோலத்தில் அருள்கிறார் எனலாம். தெய்வானை கையில் மலர்ச் செண்டு தாங்கி வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் சேவற் கொடியும், மயில் வாகனமும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. அதன் அருகிலேயே நம்பிரான் பட்டர் சிலையும், பாண்டிய மன்னர் சிலையும் காணப்படுகின்றன.

புடைப்புச்சிற்பங்களுக்கு உரிய வழிபாட்டு முறைகள் வித்தியாசமானவை. இவ்வகையான சிற்பங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. இவ்வகையான கோயில்களில் உற்சவ மூர்த்திகளுக்கே அபிஷேக ஆராதனைகளைச் செய்வர். இந்த லாடன் கோயிலில் உற்சவ மூர்த்திகள் இல்லாத காரணத்தால், இங்கு பூஜை, திருவிழாக்கள் இல்லை. பக்தர்கள் கோயிலின் வெளி மண்டபத்தில் நெய் விளக்கு ஏற்றியும், கோயில் வாயிற்கதவுக்கு பூமாலை அணிவித்தும் வழிபடுகின்றனர்.

சித்தர்கள் வழிபட்ட கோயில் சிந்தைக்கலக்கத்தை தீர்க்கும் என்பதில் சந்தேகமென்ன

Comments