பல்லவன் வழிபட்ட பரமேஸ்வரன்!

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ வம்சத்தில், கி.பி.672 முதல் 701 வரை அரசாண்டவன் முதலாம் பரமேஸ்வரவர்மன். புகழ்பெற்ற கூரம் செப்பேடுகள் இவனுடைய புகழ் பேசுகின்றன. இவன் காலத்திய செப்பேடுகள் ஏழு கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடுகளில் சிவனாரின் பெருமைகளை முதல் இரண்டு பாடல்களில் சொல்லிவிட்டு, அடுத்து பல்லவ வம்சம் எப்படித் தோன்றியது என்பதையும், அவர்களின் வம்சாவளியைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது.

படைப்புக் கடவுளான பிரம்மனுக்கு இந்த வம்சாவளியில் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவுக்கு ஆங்கிரஸ முனிவர் புத்திரனாகப் பிறந்தார். அவருடைய மகன் நவகிரகங்களில் ஒருவரான பிரஹஸ்பதி என்னும் குரு பகவான். இவருக்கு பரத்வாஜர் என்னும் மகரிஷி மகனாகப் பிறந்தார். பரத்வாஜரின் மகன் துரோணர். துரோணருக்கு அஸ்வத்தாமன் மகனாகப் பிறந்தார். அஸ்வத்தாமனுக்குப் பல்லவன் என்று ஒரு மகன் இருந்தானாம். அவன் வழியில் தோன்றியவர்களே காஞ்சியை ஆண்ட பல்லவர்கள் என்ற செய்தியை இந்தச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இந்த செப்பேட்டில் தன்னைப் பற்றியும், தன் மூதாதையர்களின் சிறப்புகளையும் விரிவாகக் குறிப்பிட்டிருக் கிறான் பரமேஸ்வரவர்மன்.

தொண்டை மண்டலத்தின் கோயில் நகரமான காஞ்சியில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கூரம். இந்த கிராமத்தில் பரமேஸ்வர வர்மன் கட்டிய சிவாலயம் குறித்த தகவலும் மேற்சொன்ன செப்பேடுகளில் உண்டு. ‘ஊற்றுக் காட்டுக் கோட்டத்தில் அடங்கிய நீர்வேளூர் என்னும் மன்யவாந்தர ராஷ்டிரத்தில் அமைந்துள்ள கூரம்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நான்கு வேதங்களிலும் தேர்ச்சி பெற்ற அந்தணக் குடும்பங்கள் இவ்வூரில் வசித்ததாகவும், கோயிலில் நடைபெற வேண்டிய சடங்குகளுக்கான செலவுகளை ஈடுகட்ட பரமேஸ்வர மங்கலம் என்ற ஊரையே பல்லவ மன்னன் இந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியதையும், அந்த ஊருக்கு வரியிலிருந்து விலக்கு அளித்த செய்தியையும் செப்புப் பட்டயம் விவரமாகக் கூறுகிறது.

இவ்வூரில் ‘பரமேஸ்வர தடாகம்’ என்ற பெயரில் ஒரு பெரிய ஏரியை உண்டாக்கி, அதற்கு நீர் வருவதற்குப் பாலாற்றிலிருந்து ஒரு கால்வாயை வெட்டி, அதற்குப் ‘பெரும்பிடுகு கால்வாய்’ என்று பெயரிட்டதாகத் தெரிகிறது. மேலும், இவ்வூரில் பாரதம் படிப்பதற்கென்றே தனியாக நிவந்தம் ஏற்படுத்தியிருந்தானாம் மன்னன்.

பிரம்ம சாஸ்தா வடிவில் முருகப்பெருமான் தான் கட்டிய கோயிலுக்கு பரமேஸ்வரவர்மன் சூட்டிய திருப்பெயர் ‘வித்யா வினீத பரமேஸ்வர கிருஹம்’. விமானம் எதுவும் இல்லாத இக்கோயிலின் கருவறை, தூங்கானை மாடவடிவில் (படுத்திருக்கும் யானையைப் போன்று) அமைக் கப்பட்டிருக்கிறது. தெற்கு நோக்கிய வாயிலில் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தைக் காணலாம். இறைவனின் கருவறை வாயிலின் இடது, வலது புறங்களில் விநாயகரும், முருகனும் காட்சியளிக்கிறார்கள்.

பல்லவர் காலத்து முருகப்பெருமானின் திருவுருவங்களில் பெரும்பாலனவை ‘பிரம்ம சாஸ்தா’ என்ற வடிவமாகும். பிரம்மனைச் சிறையில் அடைத்த பிறகு, அவரது படைப்புத் தொழிலை குமரக் கடவுள் ஏற்று நடத்தியபோது, இக்கோலத்தில் அவர் இருந்தாராம். இவருக்கு நான்கு திருக்கரங்கள். மேல் இரு கரங்களில் கமண்டலத்தையும், அக்க மாலையையும் ஏந்தியுள்ளார்.

கருவறையில் லிங்கமூர்த்தி- உயர்ந்த பாணம்; சதுர வடிவ ஆவுடையார். மேலும், கருவறையில் லிங்க மூர்த்திக்கு முன்பாக நந்திகேஸ்வரரும், அவருக்குப் பின் பாணலிங்கமும், அதற்குப் பின் பலிபீடமும் அமைந்துள்ளன. இது வேறெந்தக் கோயிலிலும் காண்பதற்கரிய சிறப்பம்சம் ஆகும்.

காஞ்சி புராணத்தில் கூர்ம கிராமம்!

காஞ்சி புராணம் இந்தக் கிராமத்தை ‘கூர்ம கிராமம்’ என்று வர்ணிக்கிறது. கூர்ம அவதாரத் துக்கும் இந்த ஊருக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று தெரியவில்லை. அது பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. குருரேஸ்வரர் என்னும் முனிவர் வழிபட்ட பெருமையுடையது இத்தலம்.
திருக்கயிலையில் ருத்ர அம்சமாகத் தோன்றிய சுவேதன், சுவேதகேது, சுவேதசீகன், சுவேததாச்சுவன், சுவேதலோகிதன், சுதாரன், துந்துமி, லகுளீசன் போன்றவர்கள் யோகாச்சாரியார்கள் எனும் பெரும் பதவியைப் பெறுவதற்காகக் கடுந்தவம் செய்தார்கள். அவர்கள் காஞ்சிப் பிரதேசத்துக்குச் சென்று, அங்கே தனித் தனியாக லிங்க வழிபாடு செய்தால் அவர்கள் எண்ணம் ஈடேறும் என்று அருளினார் ஈசன். தற்போது காஞ்சி மாநகரில் உள்ள சர்வதீர்த்தக் கரையில் உள்ள தவளேஸ்வரர் என்ற லிங்கம் லகுளீசன் வழிபட்டது. இங்ஙனம் கூர்ம கிராமத்திலிருந்து காஞ்சி வரை, யோகாச்சாரியார்கள் லிங்கங்களை வழிபட்டதாகத் தெரிகிறது. மற்ற லிங்கங்களின் விவரம் தெரிய வில்லை. கூரத்தில் உள்ள ஸ்ரீபரமேஸ்வரரும் அந்த லிங்கங்களில் ஒன்றாக இருக்கக்கூடும். ஆகையால், சிவனடியார்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து இந்த ஈசனை வழிபட்டால், எல்லாச் செல்வங்களையும் அவர்கள் அடைவார்கள் என்று நம்பலாம்.

இக்கோயிலில் 9 கல்வெட்டுகள் படி எடுக்கப் பட்டுள்ளன. பல்லவ அரசன் இரண்டாம் நந்தி வர்மன், சோழ அரசன் ராஜராஜன் ஆகியோரது கல்வெட்டுகள் அவை. கோயில் பூஜைகள், கோயிலில் விளக்கு ஏற்றுதல், மகாபாரதம் வாசித்தல் போன்ற நற்செயல்கள் நடைபெற ஏற்பட்ட கட்டளைகளைப் பற்றி விவரமாக அந்தக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஊர்த்துவஜானு  நடராஜர்

இக்கோயிலில் திருப்பணி செய்தபோது ஓர் அரிய நடராஜத் திருமேனி கிடைத்ததாம். நடராஜ பெருமானின் தாண்டவ கோலங்கள் பலவகை. அவற்றில் குறிப்பிடத்தக்கதான ஊர்த்துவஜானு நடராஜர் திருக்கோலம். இங்கு கிடைத்த திரு மேனியும் இந்தக் கோலத்திலேயே திகழ்கிறது.

9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த விக்கிரகத்தில் திருவாசி இல்லை. ஜடாமுடியில் கங்காதேவியும்  இல்லை. அதேபோல், இடது கரத்தில் அனலுக்குப் பதிலாக பாம்பைப் பற்றியிருக்கும் கோலத்தில் காட்சி தருகிறார்!
இவரைத் தரிசிக்கவேண்டுமெனில் சென்னை, அருங்காட்சியகத்துக்குச் செல்ல வேண்டும். ஆமாம், தற்போது அங்குதான் கொலுவீற்றிருக்கிறார் இந்த அற்புத நடராஜர். காஞ்சிக்கும் செல்லும் அன்பர்கள், அப்படியே இந்த கூரம் திருத்தலத்துக்கும் சென்று, பல்லவன் வழிபட்ட பரமேசுவரனை  வழிபட்டு வரம் பெற்று வாருங்கள்.

இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பு, வைணவம் போற்றும் உடையவர் ஸ்ரீராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வானின் அவதார ஸ்தலமும் இதுவே. அவர் சந்நிதிகொண்டிருக்கும் அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால், கண் பார்வை குறைபாடுகள் நீங்கும்; கல்வி ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.

Comments