ஞானம் கைகூட... பரிமுகனைப் பணிவோம்!

னந்தம் என்பது குறைவில்லாத பிரம்மத்தின் ஒரு துளி. ஆனந்தத்திலேயே பல வகை உண்டு. அவற்றின் உச்சியில் இருப்பது பிரம்மானந்தம் என்கின்றன உபநிடதங்கள். அப்படியரு பிரம்மானந்தமாக- ஞானானந்தமயமாக திகழ்பவர், ஸ்ரீஹயக்ரீவர். 

சில தருணங்களில், மனிதனின் அறிவைக் காட்டிலும் குதிரையின் அறிவு சமயோசிதமானது என்பது, அஸ்வ சாஸ்திர அறிஞர்களின் கருத்து. ஆக, முழு ஞானப்பெருக்கான ஸ்ரீஹயக்ரீவரும் குதிரை முகம் கொண்டிருப்பது மிகப் பொருத்தமே!
மது-கைடபர் எனும் அசுரர்கள் இருவர், பிரம்ம தேவனிடம் இருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றனர். ஸ்ரீமந் நாராயணர் பரிமுகனாய் அவதாரம் செய்து அசுரர்களை வென்று, வேதங்களை மீட்டு வந்ததாக விவரிக்கின்றன புராணங்கள்.
வசையில் நான்மறை கெடுத்த
அம்மலரயற்கருளி முன் பரிமுகமாய்
இசைகொள் வேத நூலென்றிவை
பயந்தவனே! எனக்கருள் புரியே...
- எனப் போற்றுகிறது நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாயிரத்தில் 5-ஆம் பத்து - 3-ஆம் திருமொழி).
கலியுகத்திலும் ஸ்ரீஹயக்ரீவரின் கருணை கடாட்சத்துக்கு குறைவில்லை.
சென்னையில் இருந்து கடலூர் சென்றால் அங்கிருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் அமைந்துள்ள தலம் திருவஹீந்திரபுரம். அங்கே, ஒளஷதாத்ரி மலைக்கு மேல், ஸ்ரீநரசிம்மர் சந்நிதிக்கு எதிரே இருந்த அரச மரத்தடியில், கருட மந்திரம் ஜபித்தபடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார் அந்த மகான்.
உரு ஏற ஏற, கருட மந்திரம் தனது சக்தியைக் காட்டியது. பெரிய திருவடியாம் ஸ்ரீகருடாழ்வாரின் தரிசனம் கிடைத்தது அந்த மகானுக்கு. அதுமட்டுமா? ஸ்ரீகருடாழ்வார் அந்த மகானுக்கு ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்ததுடன், ஹயக்ரீவ விக்கிரகம் ஒன்றையும் தந்து மறைந்தார். கருட பகவான் உபதேசித்த ஹயக்ரீவ மந்திரம் மகானின் உள்ளத்தில் பதிந்தது. அந்த மந்திரத்தை உச்சரித்து, ஸ்ரீஹயக்ரீவரை அவர் தியானித்து வழிபட, பரிமுகனாம் ஸ்ரீஹயக்ரீவரின் திவ்விய தரிசனமும் கிடைத்தது மகானுக்கு. ஞானமும், உண்மையான தெய்வ தத்துவங்களை மக்களிடையே எடுத்துச் சொல்லும் ஆற்றலும் பெருகும்படி அந்த மகானை அனுக்கிரஹித்தார் ஸ்ரீஹயக்ரீவர்.
இப்படியரு பெரும்பாக்கியம் கிடைக்கப் பெற்ற அந்த மகான் யார் தெரியுமா? ஸ்ரீதேசிகன்.
தனக்குத் திருவருள் கடாட்சித்த திருவஹீந்திரபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தார். ஹயக்ரீவ ஸ்தோத்திரம், கருட பஞ்சாசத், தேவ நாயக பஞ்சாசத், அச்யுத சதகம் போன்ற ஸ்தோத்திரங்களையும் மும்மணிக் கோவை, நவமணிமாலை போன்ற தமிழ்ப் பிரபந்தங் களையும் அருளிய ஸ்ரீதேசிகன், மக்களுக்கு தெய்வ தத்துவங்களை எடுத்துச் சொல்லி, நல்வழி காட்டினார்.
பரிமுகனின் திருவருளால் இவர் வாழ்வில் நிகழ்ந்த மகத்துவங்கள் ஏராளம். ஒருமுறை, துறவி ஒருவர் தேசிகனிடம் வாதம் புரிய வந்தார். அவர் ஒரு மந்திரவாதியும்கூட. ஆனாலும் ஸ்ரீதேசிகனின் முன்னால் துறவியின் வாதம் எடுபடவில்லை; தோல்வி அடைந்தார். எனினும், தேசிகனை மந்திர சக்தியால் பழிவாங்கத் துடித்தார்! 'விடுவிடு’ வென்று ஒரு குளத்துக்குள் இறங்கியவர், குளத்து நீர் முழுவதையும் குடித்தார். அதன் விளைவாக  ஸ்ரீதேசிகனின் வயிறு பருக்கத் தொடங்கியது. இந்தச் சூழ்ச்சியை அறிந்த         ஸ்ரீதேசிகன், அணுவளவும் கவலைப் படவில்லை. தனக்கு அருகில் இருந்த தூண் ஒன்றை நகத்தால் கீறினார். என்ன ஆச்சரியம்! தூணில் இருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கியது. படிப்படியாக ஸ்ரீதேசிகனின் வயிறும் பழைய நிலைக்குத் திரும்பியது.
அப்போதுதான் ஸ்ரீதேசிகனின் மகிமை, மந்திரவாதிக்கு விளங்கியது. தேசிகனின் திருவடியில் விழுந்து, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். பெரும் தீமை செய்த அந்த மந்திரவாதியை மன்னித்து அருளினாராம் ஸ்ரீதேசிகன்.
திருவஹீந்திரபுரத்தில், அருள்மிகு தேவநாத ஸ்வாமி திருக்கோயில் எதிரில் உள்ள ஒளஷதகிரி மலையில் ஸ்ரீஹயக்ரீவர் காட்சி தருகிறார். ஒளஷதகிரி சிறிய குன்று என்றபோதிலும், மேலே விஸ்தாரமான சந்நிதி. மூலவர் லட்சுமி ஹயக்ரீவராக காட்சிதர, அருகே ஸ்ரீவேணுகோபாலன், கருடன் மற்றும் ஸ்ரீநரசிம்மரும் இருக்கிறார்கள். ஹயக்ரீவர் உற்சவ மூர்த்தி மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் தாங்கி, கீழ் வலக்கை அபய ஹஸ்தமும், கீழ் இடக் கை ஸ்ரீகோசத்துடனும் திகழ்கிறது. திவ்விய தேசங்களுள் இங்கு மட்டும் ஹயக்ரீவருக்கு பிரதானமான தனிச் சந்நிதி உள்ளது. மலையடிவாரத்தில் தேவநாதன் சந்நிதியில், ஸ்ரீதேசிகனால் வழிபடப்பட்ட யோக ஹயக்ரீவர் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீதேசிகன் மட்டுமா? ஸ்ரீவாதிராஜர், ஸ்ரீபாதராஜர் முதலான மகான்களும் ஸ்ரீஹயக்ரீவரின் பரிபூரண அருளைப் பெற்றவர்கள். அதேபோல், திருவஹீந்திரபுரம் மட்டுமன்றி, பரிமுகன் அருளும் வேறு பல தலங்களும் உண்டு. மாணவர்கள் இந்தத் தலங்களுக்குச் சென்று ஸ்ரீஹயக்ரீவரை வழிபட்டு, அவரின் அருளால் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம்.
சென்னை- மேடவாக்கம்:
சைதாப்பேட்டையில் இருந்து தாம்பரம் செல்லும் வழியில் வேளச்சேரி, பள்ளிக்கரணையை அடுத்து உள்ளது மேடவாக்கம். இங்கு சிறிய குன்றின்மேல் உள்ள ஸ்ரீநிவாசர் கோயிலில் ஹயக்ரீவர் காட்சி தருகிறார்.
சென்னை- வில்லிவாக்கம்:
இங்குள்ள சௌமிய தாமோதரப் பெருமாள் கோயில் அருகில் ஹயக்ரீவர் மணிமண்டபம் அமைந்துள்ளது. வைணவத்தில் ஸ்வாமி தேசிகன் மீது அளவில்லா பற்றுக் கொண்ட 'ஸேவா ஸ்வாமி’ என்ற மஹனீயரால் கட்டப்பட்ட ஹயக்ரீவருக்கான தனிக் கோயில் இது.
சென்னை- திருமயிலை:
சித்ர குளம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாஸர் திருக்கோயிலில் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் தரிசனம் தருகிறார்.
சென்னை- மேற்கு மாம்பலம்:
அயோத்தியா மண்டபம் அருகே உள்ள அருள்மிகு சத்ய நாராயண பெருமாள் கோயிலில் ஹயக்ரீவரைத் தரிசிக்கலாம். மேற்கு மாம்பலத்திலேயே கோவிந்தன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆதிகேசவர் ஸ்ரீபாஷ்யகாரர் தேவஸ்தான கோயிலிலும், சென்னை-நந்தம்பாக்கத்தில், ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி மற்றும் ஸ்ரீனிவாசர் திருக்கோயில்களிலும் ஸ்ரீஹயக்ரீவரைத் தரிசிக்கலாம்.
செட்டிப்புண்ணியம்:
சென்னை- செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோயில் சென்று அங்கிருந்து 6 கி.மீ. பயணித்தால் செட்டிப்புண்ணியத்தை அடையலாம். இங்குள்ள ஸ்ரீதேவநாத ஸ்வாமி கோயிலில் யோக ஹயக்ரீவர் அருள்கிறார் இந்த ஹயக்ரீவர், தேசிகனால் ஆராதிக்கப்பட்டவர் என்றும் திருவஹீந்திரபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டவர் என்றும் கூறுகிறார்கள்.
பாண்டிச்சேரி:
திண்டிவனம்- பாண்டிச்சேரி செல்லும் சாலையில் உள்ள மொரட்டாண்டி கிராமத்தில் மகா பிரத்யங்கரா ஆலயத்தில் ஹயக்ரீவர் சந்நிதி உண்டு. திண்டிவனம் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து இந்த இடத்துக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. மேலும் பாண்டிச்சேரி அருகே ராமகிருஷ்ண நகர் எனும் இடத்திலும் ஹயக்ரீவர் சந்நிதியைத் தரிசிக்கலாம்.
திருஇந்தளூர்:
மாயவரம்- திருஇந்தளூர் பரிமளரங்கநாதன் திருக்கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
புன்னைநல்லூர்:
தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்ட ராம ஸ்வாமி கோயிலின் தேர் மண்டபத்தில் ஹயக்ரீவருக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
காஞ்சிபுரம்:
சின்ன காஞ்சிபுரம், ஆடிசன்பேட்டை-ரங்கசாமி குளம் அருகில், தீபப்பிரகாசர் கோயிலில் ஸ்வாமி தேசிகன் சந்நிதியில், லட்சுமி ஹயக்ரீவர் காட்சி தருகிறார். அதே கோயிலில் உள்ள பரகால மடத்திலும் லட்சுமி ஹயக்ரீவரைத் தரிசிக்கலாம். காஞ்சி வரதராஜர் சந்நிதியில் அமைந்துள்ள அண்ணா கோயிலிலும் ஹயக்ரீவர் அருள்கிறார்!

Comments