மன்னவன்... நாயனார்... மாடக்கோயில்கள்!

'துலையில் புறவின் நிறையளித்த
சோழர் உரிமைச் சோணாட்டில்...’
அதாவது புறாவின் எடைக்குத் தன்னையே உரிமையாக்கிய சிபிச் சக்கரவர்த்தி எனும் சோழப்பேரரசர் விளங்கிய சோழ நன்னாட்டின் அலைகள் வாயிலாக முத்துக்களும், அகில்- சந்தன மரங்களும் கொண்டு வந்து கொழிக்கும் நீரையுடைய காவிரி ஆறு, மாணிக்க மணிகளைச் சேர்க்கும் கரைதனில், பெருகி விளங்கும் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தில் குளிர்ச்சி மேவும் மரங்கள் நிறைந்த சோலை ஒன்று உள்ளது. அந்தச் சோலையின் நடுவில் ஒரு வெண்ணாவல் மரம்; அதன் கீழ்... முன்பு பிரம்மனும் பெருமாளும் அடிமுடி தேடி காணமுடியாத சிவபிரான், அழகிய சிவலிங்கமாகத் தோன்றிக் காட்சி தந்தார்.
- மகேசனுக்கு மாடக்கோயில்கள் பல அமைத்து நாயன்மாராகச்  சிறப்புப் பெற்ற கோச்செங்கட்சோழ நாயனாரின் திருக்கதையை, இப்படித்தான் சொல்லத் துவங்குகிறது பெரியபுராணம்.
அந்தச் சிவலிங்கத்தை வெள்ளை யானை ஒன்று அனுதினமும் பூஜித்து வந்தது. தூய நீரால் அபிஷேகித்தும், மணம் மிக்க மலரால் லிங்கத் திருமேனியை அர்ச்சித்தும் வந்தது அந்த யானை. இது இப்படி யிருக்க, சிலந்தி ஒன்று, அந்த லிங்கத்தின் மீது மரங்களின் காய்ந்த சருகுகள் விழாதவண்ணம், வலை பின்னி பந்தல் அமைத்தது.
ஆஹா... இந்தப் பிராணிகளுக்கு எப்படி சிவபக்தியும் ஞானமும் வந்தது?!
கயிலாயத்தில் ஈசனுக்குச் சேவை செய்து வந்த மாலிய வான், புட்பதந்தன் ஆகிய சிவகணங்கள், தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியினால் ஒருவரையருவர் சிலந்தியா கவும் யானையாகவும் பிறக்கும்படி, சாபமிட்டுக் கொண்டனராம். அவர்களே, இந்த வனத்தில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. பிராணிகளாகப் பிறந்தாலும் முன்ஜன்ம வாசனை... இந்தப் பிறவியிலும் சிவத்தொண்டும் சிவபூஜையும் தொடர்ந்தன!
மறு நாள் பூஜைக்கு வந்த யானை, 'ஸ்வாமியின் சிரசுக்கு மேலே இதென்ன நூலாம்படை’ என்று எண்ணி வலையைச் சிதைத்தது. ஸ்வாமியை அபிஷேகித்து, அர்ச்சித்து பூஜித்துச் சென்றது. சிலந்தி வந்தது; பந்தல் சிதைந்திருப்பதைக் கண்டு துணுக்குற்று, மீண்டும் பந்தல் அமைத்தது. மறு நாளும் யானை வந்தது. சிலந்தியின் வலைப்பின்னலை சிதைக்க முயற்சித்தது. சிலந்திக்கு வந்ததே கோபம்... யானையின் துதிக்கையில் புகுந்து கடிக்க ஆரம்பித்தது. வேதனை பொறுக்காத யானை துதிக் கையை தரையில் அடித்து மோதிக் குழைந்து வீழ்ந்தது. சிலந்தியும் உயிர் விட்டது. எம்பெருமான் கருணை புரிந்தார்.  அந்த யானைக்குச் சிவபதம் கிடைத்தது. சிலந்தி, சோழர் குலத்தில் சுபதேவன்- பெருந்தேவி கமலவதி எனும் அரச தம்பதிக்குக் குழந்தையாகப் பிறந்தது.
அரசி பெருந்தேவி கமலவதி, தன்னுடைய குழந்தை நல்லதொரு நேரத்தில் ஜனிக்கவேண்டும் என விரும்பினாளாம். பிரசவ நேரத்தில்... சோதிடர்கள், 'இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால், குழந்தை அகண்ட மூவுலகையும் ஆட்சி செய்வான்’ என்றனர். 'அப்படியெனில் இப்போது பிறக்காமல் ஒரு நாழிகை கழித்து பிறக்கும்படி, எனது கால்களைக் கட்டி உயரே தூக்குங்கள்’ என்றாள் அரசி. அதன்படியே செய்தனர். ஒரு நாழிகை கழித்து அற்புதமான குழந்தையை இந்த உலகுக்குத் தந்துவிட்டு இறந்துபோனாள் அந்த மாதரசி. அந்தக் குழந்தைதான் கோச்செங்கட் சோழன்! 
சிவபக்தனாகப் பிறந்து சிவநேசனாகவே வளர்ந்த கோச்செங்கட் சோழன் அரச பொறுப்பேற்றதும் அரனாருக்கு ஆலயங்கள் பல எழுப் பினான். அதுவும் எப்படி? யானைகள் ஏறிவர முடியாதபடி மாடக் கோயில்கள் எழுப்பினான் என்கிறது சரித்திரம் (70 மாடக் கோயில்கள் என்பர்). இப்படி, திருஆவினனுக்கு திருக்கோயில்கள் கட்டி இறைப்பணி செய்து புகழ்பெற்ற கோச்செங்கட் சோழ நாயனாரின் திருநட்சத்திரத் திருநாள், பிப்ரவரி 22, புதன்கிழமையன்று வருகிறது (மாசி மாதம் சதய நட்சத்திரம்). இதையட்டி, கோச்செங்கட் சோழனின் புகழ் போற்றும் சில கோயில்களைத் தரிசித்து, நாமும் சிவனருள் பெறலாம் வாருங்கள்.
திருவானைக்காவும் விபூதி சித்தரும்!
சிலந்தியும் யானையும் சிவனாரை பூஜித்து சிவத்தொண்டு செய்தன அல்லவா? அந்தத் தலம்தான் திருவானைக்கா. யானை வழிபட்டதால், திருவானைக்கா என்று பெயர். கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக் கோயில் இதுவே என்பார்கள். நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். பஞ்சபூதத் தலங்களுள் நீர்த்தலம் இது. பிரமாண்டமான ஆலயத்தில், மூலவர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் தரை மட்டத்துக்கு கீழே அப்புலிங்கமாக அருள்கிறார். 
இந்தத் தலத்தின் 5-வது திருச்சுற்று மதிலை திருநீற்றான் மதில் என்பார்கள். ஏன் தெரியுமா? சிவபெருமானே, 'விபூதிச் சித்தர்’ என்ற பெயரில், சித்தபுருஷராக வந்து இந்த மதிலைக் கட்டினாராம். அப்போது, கட்டட வேலை செய்தவர்களுக்கு, திருநீறையே கூலியாக அளித்திட, அவரவர்  பணி செய்தமைக்கு ஏற்ப திருநீறு பொன்னாக மாறியதாகச் சொல்வர். இந்த மதில் அமைந்த பிராகாரம் 'விபூதிப் பிராகாரம்’ எனப்படுகிறது.
திருவானைக்கா அம்பாள்- ஸ்ரீஅகிலாண்டேஸ் வரி, கருணையுடன் தரணியைக் காக்கும் தாடங்கக்காரி (இந்த தாடங்கங்களின் கதைதான் நமக்குத் தெரியுமே! இதே இதழில், 'அகம் நீ... ஜகம் நீ’ தொடர் பகுதியில், பெட்டிச் செய்தியில் காணலாம்). இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சம்... அம்பாளே ஈஸ்வரனை பூஜிக்கும் வைபவம். நண்பகல் பூஜையின்போது, அர்ச்சகர் பெண்ணாகப் புடவை கட்டிக்கொண்டு ஸ்வாமி சந்நிதிக்குச் சென்று பூஜை செய்கிறார். முன்னதாக, கோபூஜையும் சிறப்புற நடைபெறுகிறது. இந்த அம்மையின் அருளால்தான் ஞானம் பெற்றார் கவிகாளமேக புலவர். ஆக, இந்தத் தலத்துக்கு வந்து அம்பிகைக்குத் தாம்பூலம் சமர்ப்பித்து வழிபட, கல்வி- ஞானம் கைகூடும். மாசி மாத சதய நட்சத்திர நாளில் நாயனாருக்கு குரு பூஜை விசேஷமாக நடைபெறுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவானைக்கா திருத்தலம்.
பசுமங்கை வழிபட்ட பசுபதீஸ்வரர்!
சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். சுயம்பு மூர்த்தியான இத்தல ஈசனை, அம்பாள் சக்கரவாகப் பறவையாக வந்து வழிபட்டாளாம். சக்கர மங்கை, அரிய மங்கை, சூல மங்கை, நந்தி மங்கை, பசு மங்கை, தாழ மங்கை, புள்ள மங்கை ஆகிய சப்த மாதர்களும் சிவ வழிபாடு செய்த தலங்களை சப்த மங்கைத் தலங்கள் எனப் போற்றுவர். இதில் இந்தத் தலம், தெய்வப் பசுவான காமதேனு (பசு மங்கை) வழிபட்ட திருவிடமாகும்.
இறைவன் ஸ்ரீபசுபதீஸ்வரர், தாயார் சௌந்தரநாயகி. இந்தக் கோயிலில், நவக்கிரகங் களுக்கு மத்தியில் நந்தி அருள்வது சிறப்பு. இந்த ஆலயத்தின், துர்கை மற்றும் மகிஷாசுரமர்த்தினி சிலா ரூபங்கள் சிறப்பானவை. தஞ்சை- கும்பகோணம் வழியில், பாபநாசத்துக்கு அருகில் உள்ளது பசுபதிகோயில். 

வைகல் மாடக்கோயில்
சைவ நால்வர் பாடிய தலம் திருவைகல். மூலவர் ஸ்ரீவைகல்நாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். அம்பாள் ஸ்ரீகொம்பியல் கோதை. ஸ்ரீபிரம்மதேவர், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீமகாலட்சுமி ஆகியோர் தரிசித்த தலம். பூமாதேவியின் கடும் தவத்தின் பலனாக ஸ்ரீமகாவிஷ்ணு அவளை மணந்துகொண்டார். இதனால் கோபம் கொண்ட திருமகள், அவரைப் பிரிந்து, செண்பகாவனம்  எனும் இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்தாள். மனைவியைத் தேடி ஸ்ரீமகாவிஷ்ணுவும் இங்கு வர, அவருடன் வந்த பூமிதேவியும், ஸ்ரீபிரம்மனும் என அனைவரும் ஸ்ரீவைகல்நாதரை வழிபட்டதாகத் தலபுராணம் விவரிக்கிறது.
முக்கண்ணனுக்கு இங்கே மூன்று கோயில்கள். அதில், ஈஸ்வரனின் நெற்றிக் கண்ணாகத் திகழ்வது ஸ்ரீவைகல்நாதர் திருக்கோயில். வலக்கண்ணாக ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கோயிலும், இடக்கண்ணாக ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீபிரம்ம புரீஸ்வரர் திருக்கோயிலும் அமைந்துள்ளன. இந்தத் தலத்துக்கு வந்து மூன்று கோயில்களையும் வழிபட, முன்வினைப் பாவங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து தெற்கில் சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது திருநீலக்குடி. அங்கிருந்து தென் கிழக்கே சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத் தலம்.

அந்தணராக வந்த ஆண்டவன்
மன்னன் கோச்செங்கட் சோழன், ஒருமுறை குன்மநோயால் அவதியுற்றபோது, 'மூன்று விருட்சங்கள் கொண்ட இடத்தில் சிவாலயம் எழுப்புக’ என்றொரு அசரீரி ஒலிக்கக் கேட்டான். அதன்படி பாக்கு, கொன்றை, வில்வம் ஆகிய மூன்று விருட்சங்கள் கொண்ட இந்த தலத்தில் கோயில் கட்டத் துவங்கினானாம்.
ஆனால், என்ன நடந்தது தெரியுமா? ஒவ்வொரு நாளும் சுவர் எழுப்ப, அது இடிந்து விழுந்துவிடும். ஆலயம் எழும்பவே வழியில்லாமல் போனது. மன்னன் வருந்தினான். 1000 அந்தணர்களுக்கு, 48 நாட்கள் அன்னதானம் செய்த பின்னர், பணிகளைத் தொடங்குமாறு இறைவன் வலியுறுத்தினார். அவ்வாறே செய்தான் மன்னன். அதிலும் ஒரு தடங்கல்!
ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தார். சோழன் கலங்கினான். திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை! கடைசி நாளன்று, சாட்சாத் ஈஸ்வரனே வயதான அந்தணராக வந்தார். மன்னன் மகிழ்ச்சியுடன் சென்று அவரிடம், 'எங்கிருந்து வருகிறீர்கள்? எந்த ஊர்?’ என்றெல்லாம் விசாரித்தான். அவனிடம், 'யாருக்கு ஊர்?’
என்று கேட்டுவிட்டு, அருகிலிருந்த புற்றுக்குள் சென்று மறைந்தார் அந்தச் சிவ அந்தணர்.
உடனே ஏவலர்கள் ஆயுதங்களால் புற்றை இடிக்க... உள்ளே சுயம்பு மூர்த்தமாய் ஒரு லிங்கத் திருமேனி. அனைவரும் சிலிர்த்து வணங்கினர்; மிக அற்புதமாய் எழும்பியது ஆலயம். மூலவர் திருநாமம் தான்தோன்றீஸ்வரர். சிவனார் கேட்ட 'யாருக்கு ஊர்?’ என்ற வார்த்தையே மருவி 'ஆக்கூர்’ என்றானதாகச் சொல்வர். மூலவர் லிங்கத்தில், ஆயுதம் பட்ட வடுவை இன்றும் காணலாம்! இங்கே அம்பாளின் திருநாமம்- ஸ்ரீவாள்நெடுங்கன்னி. வலப்புறத்தில் அம்பாள் குடியிருக்க, ஈசன் திருமணக் கோலம் காட்டியருளும் இந்தத் தலத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் செய்து வழிபடுவது சிறப்பு. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் உள்ள ஆக்கூர் கிராமத்தில், புகழ் பெற்று விளங்குகிறது இந்தத் திருக்கோயில்.

நன்னிலம் பெருங்கோயில்
'கோடுயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய் கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனை’ எனச் சுந்தரரால் பாடப்பெற்ற தலம் இது. வாயுதேவனால் எடுத்துச் செல்லப்பட்ட மேரு மலையின் சிறு பகுதி இங்கே விழ, அந்தச் சிறிய குன்றின் மீது கோச்செங்ட்சோழன் மாடக் கோயில் அமைத்தான் என்கிறது ஸ்தல புராணம்.
கிருத யுகத்தில், மன்னன் பிருஹத் ராஜனின் தவப் பயனால் 'தேஜா லிங்கமாய்’ இங்கு காட்சி தந்தாராம் சிவனார். துவாபர யுகத்தில், அசுரர்களின் கொடுமையில் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிய தேவர்களைத் தேனீக்களாக மாற்றியதுடன், இந்தக் கோயிலின் கருவறையிலேயே கூடுகட்டி வசித்து வழிபாடுகளைத் தொடரும்படியும் அருளினாராம் பரமேஸ்வரன். தேவர்கள் தேனீ ரூபத்தில் வழிபட்டதால், சிவனா ருக்கு ஸ்ரீமதுவனேஸ்வரர் என்று திருநாமம்; அம்பாள்- ஸ்ரீமதுவனேஸ்வரி. இந்தத் தலத்துக்கே மதுவனம் என்றும் ஒரு பெயர் உண்டு. (இன்றும் கோயிலில் தேன்கூடு உள்ளது. தேவர்களே தேனி ரூபத்தில் அதில் வாழ்வதாக ஐதீகம்).
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரகுப்தர் தனிச் சந்நிதியில் அருள் கிறார். தலத்தின் தெற்கில் எமன், மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன் ஆகியோர் லிங்கம் அமைத்து வழிபட்டது சிறப்பு.

Comments