புதன்கிழமை வணங்கினால் கல்விச் செல்வம்!

ம் மனதுள் கலையையும் அவற்றை அறிந்து உணரும் ஞானத்தையும் தருபவர் புதன். அப்பேர்ப்பட்ட புதனுக்கு அருளியவர் ஸ்ரீஆதிசொக்கநாதர். இவர் குடியிருக்கும் திருவிடத்தை, புதன் க்ஷேத்திரமாகப் போற்று கின்றனர். மதுரை பெரியார் பேருந்து நிலையத் தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஆதிசொக்கநாதர் கோயில். அம்பிகை - ஸ்ரீமீனாட்சி அம்பாள்.! 
பாண்டிய மன்னன் ஒருவன், பக்தியிலும் இலக்கியத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருந் தான். ஒருமுறை இடைக்காடர், தாம் எழுதிய செய்யுளை மன்னரிடம் வாசித்துக் காட்டினார். பாடலின் அர்த்தத்தில் திளைத்த மன்னன், அவர் மீது பொறாமைப்பட்டான். இதனால், பாடலைப் பற்றி ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தான். இதில் கூனிக்குறுகிப் போனார் இடைக்காடர். விறுவிறுவெனக் கோயிலுக்குள் சென்று, சிவனாரின் சந்நிதிக்கு முன் நின்றார். மன்னன் அவமதித்ததைச் சொல்லி வருந்தினார். 'மன்னன் என்னை இகழவில்லை. சொல் வடிவான சக்தியையும், பொருள் வடிவான உம்மையும் அவமதித் திருக்கிறான்’ என்று சொல்லிவிட்டு, வடக்கு திசை நோக்கி விறுவிறுவென நடந்தார். தன் அடியவருக்கு நேர்ந்த அவமானம் கண்டு கோபமுற்ற சிவனார், பார்வதிதேவியுடன் ஆலயத்தில் இருந்து வடக்கில், வைகை ஆற்றங்கரைக்கு தெற்கில் வந்து, லிங்கத் திருமேனியாக அமர்ந்து கொண்டார். மறுநாள். விடிந்ததும் கோயிலின் கருவறையில், சிவலிங்கத் திருமேனி காணாதது கண்டு அதிர்ந்தனர். ஓடோடிச் சென்று மன்னரிடம் தெரிவித்தனர். அதே நேரம், வைகை ஆற்றங்கரையில் சிவலிங்கத் திருமேனி இருப்பதைத் தெரிவித்தார்கள் அடியவர்கள்.
மன்னன் வைகை கரைக்கு ஓடி வந்தான். 'என்ன குற்றம் செய்தேன் இறைவா?’ எனக் கதறினான். 'இடைக்காடருக்கு இழைத்த அவமானத்தால் நான் இங்கு வந்துவிட்டேன்’ என அசரீரி கேட்க... மன்னன், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து, மன்னிப்பு வேண்டினான். அவனுக்கு இறைவியுடன் காட்சி தந்த சிவனார், மீண்டும் ஆலயத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து, இடைக்காடரைச் சிறப்பு மரியாதை செய்து சபைக்கு அழைத்து வந்து பாடலை அரங்கேற்றினான் மன்னன் என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கு வந்து வழிபட கல்வி- கலைகளில் சிறந்து விளங்கலாம் என்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீதுர்கை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் இங்கு சந்நிதிகள் உண்டு. புதன்கிழமைகளில் வழிபடுவது விசேஷம்!




ஞானம் தருவாள் ஞானாம்பிகை!
 

 
கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மடத்துத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில். காசியில் வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ.... கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் பெறுவோமோ அதே புண்ணிய பலன்களைத் தருகிற ஒப்பற்ற திருத்தலம் இது! 
இங்கே ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாளஹஸ் தீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. காவிரி மற்றும் அரசலாற்றுக்கு நடுவே உள்ள கோயில், ஐந்து கால பூஜைகளும் விசேஷமாக நடைபெறும் ஆலயம், மடத்துக் கோயில் என அனைவராலும் சிறப்பிக்கப்படும் இந்தத் தலத்தில், தினமும் உத்ஸவம் நடைபெறும். எனவே ஏகதின உத்ஸவக் கோயில் என்றும் போற்றுவார்கள். காஞ்சி மகா பெரியவா, கும்பகோணத்துக்கு வந்து தங்கியபோது, இங்கே வந்து தினமும் வழிபட்டதாகப் பெருமிதத்துடன் சொல்வர்!
காளஹஸ்தியில் உள்ளது போலவே, இங்கும் உத்ஸவருக்கு மூன்று அம்பிகை மூர்த்தங்கள் உண்டு. மேலும் ஸ்ரீகாத்யாயினி சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரும் இங்கே தனிச் சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. ராகு பகவானும் தனிச்சந்நிதியில் அருள்கிறார். அதேபோன்று, பதினெட்டு திருக்கரங்களுடன் ஸ்ரீதுர்கை இங்கே விசேஷம். வேறொரு சந்நிதியில் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகிய மூவரையும் தரிசிக்கலாம்.
ராகு முதலான தோஷங்கள், திருமணத்தடை முதலான இடர்பாடு களால் வருந்துவோர், இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளை வணங்கித் தொழுதால், விரைவில் நல்லது நடக்கும்; வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! மாணவர்கள் இங்கு வந்து, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீஞானாம்பிகைக்கு விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், ஞானச் செல்வம் பெறலாம்; கல்வியில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்! 
ஞானாம்பிகையை வணங்கி, ஞானம் பெறுவோம்!

Comments