கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில்

கு ம்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், 108 திவ்ய தேசங்களுள், (பாடல் பெற்ற, ஆழ்வார்களின் எண்ணிக்கைப்படி திவ்விய தேசங்களின் வரிசை எண்ணிக்கையில்) மூன்றாவதாகத் திகழ்கிறது. இதை உபயபிரதான திவ்விய தேசம் என்பர்.
 இங்கு மூலவருக்கு உரிய மரியாதைகளும், சிறப்புகளும் உற்சவருக்கும் உண்டு. இதனால் மூலவர்- உற்சவர் இருவருக்குமே சார்ங்கபாணி, ஆராவமுதன் என்ற திருநாமங்கள் உள்ளன.
 தேவலோகப் பட்டணம், சிவ விஷ்ணுபுரம், மந்த்ராதி தேவதா ஸ்தானம், சாரங்கராஜன் பட்டணம், க்ஷேத்ர ஸாரம், ஒளிமயமான பட்டணம், பாஸ்கர க்ஷேத்திரம், குட மூக்கு, திருக்குடந்தை, தண்டகாரண்ய க்ஷேத்திரம் ஆகிய பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு. லட்சுமிதேவியான கோமளவல்லிக்கும், ஸ்ரீசார்ங்கராஜனுக்கும் இங்கு திருமணம் நடைபெற்றதால், கல்யாணபுரம் என்ற பெயரும் இதற்கு உண்டு.
 இங்குள்ள ஸ்ரீசார்ங்கபாணி பெருமாளை சேவிக்கும் எண்ணத்துடன் வீட்டிலிருந்து ஓர் அடி எடுத்து வைத்தாலும், அவர்களுக்கு மறுபிறவி இல்லை என்கிறது புராணம்.
 தாயார் மகாலட்சுமியின் அவதாரத் தலமாகக் கருதப்படுவதாலும் தமது இருப்பிடத்துக்கு வரவழைத்து மணம் புரிந்ததாலும் இங்கு ஸ்ரீகோமளவல்லித் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து புடவை சாத்தினால், பெண்களுக்கு திருமணப் பிராப்தம் கூடும் என்பது நம்பிக்கை.
 ஸ்ரீரங்கம் அரங்கன்- நடை அழகு; மதுரை- கள்ளழகர்- படை அழகு; ஸ்ரீவில்லிபுத்தூர் மன்னர்- தொடை அழகு; திருப்பதி வேங்கடவன்- வடிவழகு; திருநாராயணபுரம் நாராயணர்- முடி அழகு; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி- உடையழகு. அந்த வரிசையில் கும்பகோணம்- ஆராவமுதனுக்கு கிடை (கிடை= பள்ளிகொண்ட கோலம்) அழகு!
 சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் குடந்தையின் மையத்தில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். தேர் வடிவ முன் மண்டபங்களும், 11 நிலைகள் கொண்ட கோபுரத்துடன் திகழும் இதுவே கும்ப கோணத்தின் மிகப் பெரிய கோயில். இதைச் சுற்றியே மற்ற சைவ, வைணவ ஆலயங்கள் உள்ளதால், ஆதிபீடமாக இங்கே இருந்தவர் ஸ்ரீசார்ங்கபாணியே ஆவார்.
 மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தீவிர சைவர். இவர் இங்குள்ள சார்ங்கபாணியையும், சக்கர பாணியையும் போற்றி, ‘திருக்குடந்தை புராணம்’ பாடி யுள்ள பெருமை மிக்க தலம்.
 நம்மாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஆண்டாள், திருமங்கை யாழ்வார் ஆகிய எழுவரால் இங்கு எழுந்தருளி இருக்கும் ஆராவமுதன் மங்களா சாசனம் செய்யப்பட்டிருக்கிறார்.
 தன் கணவர் மகா விஷ்ணுவை பிருகு முனிவர் உதைத்தும் முனிவரை தண்டிக்காததால் கோபமுற்றாள் மகாலட்சுமி. எனவே, அவள் விஷ்ணுவை விட்டு விலகி, கொல்லாபுரம் சென்று தங்கினாள்.
அதன் பிறகு ஸ்ரீனிவாசன் என்ற பெயரில் பூவுலகில் மகா விஷ்ணு, பத்மாவதியை திருமணம் செய்து கொண்டதைக் கேள்விப்பட்ட மகாலட்சுமி மேலும் கோபமடைந்தார். எனவே, திருமாலைத் தேடி திருமலைக்கு வந்தார் லட்சுமி. இதை அறிந்த மகா விஷ்ணு கும்பகோணம் வந்து பாதாளத்தில் ஒளிந்து கொண்டார். அதனால் அவருக்கு ‘பாதாள சீனிவாசன்’ என்ற பெயர் ஏற்பட்டது. எனவே, அவருக்கு இங்கு பள்ளத்தில் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது.
 பொற்றாமரைக் குளத்தில் திருமகள், கோமளவல்லியாக அவதரித்து ஹேம முனிவரின் மகளாக வளர்ந்தாள். இவர்கள் இருவரும் தவம் செய்வதைக் கண்டு, பரந்தாமன் திருவரங்கத்தில் உள்ள பிரணவ விமானத்திலிருந்து வைதீக (வைகுந்த) விமானத்தைப் பிரித்துக் கொண்டு, சார்ங்கத்தை பிடித்தபடி இங்கு இறங்கி வந்து, கோமளவல்லியை மணம் புரிந்தார். அந்த விமானமே கருவறையில் உள்ளது. மூன்று பொற்கலசங்கள் கொண்ட இந்த விமானம், பெரிய கல் தேர் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹேம ரிஷியின் தவத்துக்கு இணங்க திருமால், வைகுந்தத்தில் இருந்து சார்ங்கத்துடன் இந்தத் தலத்தை அடைந்ததாகவும் கூறுவர். இதை,
செங்கண் நாகணைக்கிடந்த செல்வ மல்கு சீரினாய்
சங்க வண்ண மன்ன மேனி சார்ங்கபாணி யல்லையே?
என்று திருமழிசை ஆழ்வாரும் குறிப்பிடுகிறார்.
 இங்கு 1964 மற்றும் 1999-ஆம் ஆண்டுகளில் சம்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.
 ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்தபடியாக பெரியது இங்குள்ள ராஜ கோபுரம். இதன் உயரம் சுமார் 146 அடி. கோபுர வாயிலின் உயரம் சுமார் 51 அடி. அகலம் 90 அடி. இந்த கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. (ஸ்ரீரங்க ராஜகோபுரம் 236 அடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜ கோபுரம் 165 அடி.)
 சார்ங்கபாணி கோயில் கோபுரம் கட்டுவதற்குக் காரணமானவர் லட்சுமி நாராயணன் என்ற வைணவ பிரம்மச்சாரி. ஏழை பக்தரான இவர் பெருமாளிடம் தீவிர பக்தி உடையவர். சார்ங்கபாணிப் பெருமானுக்கு சோழ நாட்டிலேயே மிகப் பெரிய கோபுரம் கட்ட வேண்டும் என்ற ஆசை லட்சுமி நாராயணனுக்கு இருந்தது. ‘என்னால் இது முடியுமா?’ என்று அவர் யோசிக்கவில்லை. பெருமாள் மீதுள்ள நம்பிக்கையோடு செயலில் இறங்கினார். ஊர் தோறும் சென்று பொருள் திரட்டினார்.
‘‘இருக்கிற பணத்தில் ஒரு சிறு கோபுரம் கட்டி விட்டு, கல்யாணம் செய்து கொள்!’’ என்று சிலர் அவருக்கு ஆலோசனை கூறினர். ஆனால் அவர் செவி சாய்க்கவில்லை. விடா முயற்சியுடன் வானளாவிய- பதினொரு நிலை கோபுரத்தைக் கட்டி முடித்தார்.
லட்சுமி நாராயணஸ்வாமி இறந்தபோது, அர்ச்சகரது கனவில் தோன்றிய பெருமாள், ‘‘என் கையிலிருந்து தர்ப்பை வாங்கி, அந்த உத்தமனுக்கு இறுதிச் சடங்கு செய்யுங்கள்’’ என்றாராம். அதன்படியே சுவாமி விக்கிரகத்திடம் இருந்து தர்ப்பை வாங்கி, அந்திமக் கிரியைகளை செய்தனர். அந்த வழக்கத்தின்படி இன்றும் தீபாவளியையட்டிய அமாவாசை தினத்தில், சார்ங்கபாணி கோயிலில் லட்சுமி நாராயணஸ்வாமியின் சிராத்தம் நடைபெறுகிறது.
 இங்குள்ள கர்ப்பக்கிரகம் மற்றும் முன் மண்டபங்கள் ரதம் போல் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு புறமும் சக்கரங்கள் கொண்ட இந்த மண்டபங்களை கல் குதிரைகளும், கல் யானைகளும் இழுத்துச் செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளன. இதையட்டியே, ‘திருஎழு கூற்றிருக்கை’ என்று ஒரு ரத பந்தமே பாடியுள்ளார் திருமங்கை ஆழ்வார்.
 இங்குள்ள முக்கியமான சந்நிதிகள்: பாதாள சீனிவாசன் சந்நிதி, சேனை முதலியார் சந்நிதி, தீராவினைகள் தீர்த்த பெருமாள் சந்நிதி, சித்திர சீனிவாசன் சந்நிதி, ஐயா குமாரதாத தேசிகன் சந்நிதி, ராஜகோபாலன் சந்நிதி, ராமன் சந்நிதி, கண்ணன் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, பெரியாழ்வார் சந்நிதி, கிணற்றடி ராமர் சந்நிதி, நிகமாந்த மகாதேசிகன் சந்நிதி மற்றும் ஆழ்வார்கள் சந்நிதிகள்.
 இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத் தூண் ஒன்றில் ஸ்ரீஆஞ்சநேயர் தன் வாலையே சிம்மாசனமாக்கி ராவணனுக்கு எதிரில் (ராவணன் சிம்மாசனம் தராததால்) உட்கார்ந்திருக்கும் கோலத்தைக் காணலாம்.
 இங்கு பெருமாள் சந்நிதிக்குச் செல்ல தெற்குப் பக்கம் தட்சிணாயண வாயிலும் வடக்குப் பக்கம் உத்தரா யண வாயிலும் உள்ளன. ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிண வாயில் வழியாகச் செல்ல வேண்டும். பெருமாள் முதலில் வெளியே எழுந்தருளியதும் லட்சுமிதேவியை திருக்கல்யாணம் புரிந்ததும் தட்சிணாயண வாயில் வழியாகவே. அதனால் இது கல்யாண வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண வாசல் வழியாகவே உள்ளே செல்ல வேண்டும். றீ ‘உத்தராயணம் உயர்ந்தது; தட்சிணாயணம் தாழ்ந்தது’ என்பது உலக வழக்கு. இதைச் சரி செய்வதற்காக உத்தராயண- தட்சிணாயண தேவதைகள், ஸ்ரீவைகுண்ட நாதனிடம் சென்று, ‘‘எங்களுக்குச் சமமான பெருமையும் நிலையான புகழும் கிடைக்க அருள் புரிய வேண்டும்’’ என்று வேண்டினர். அவர்களிடம், ‘‘நீங்கள் திருக்குடந்தை சென்று ஸ்ரீசார்ங்கராஜன் சந்நிதியில் வாசல்களாக இருந்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும்!’’ என்றார் ஸ்ரீவைகுண்டநாதர். அதன்படியே தேவதைகள் இருவரும் இங்கு வாயில்களாக நிலை பெற்றிருக் கிறார்கள். இதனால் இந்தத் தலத்தில் எப்போது இறந்தாலும், அவர்களுக்கு எம்பெருமான் மோட்ச சாம்ராஜ்யத்தை அருள்கிறான் என்பது ஐதீகம்.
 வைதீக விமானத்தின் இந்த இரு வாசல்களில் உத்தராயண வாசல் மகர சங்கராந்தியின் போதும் தட்சிணாயண வாசல் ஆடி 18-ன் போதும் திறக்கப்படுகின்றன.
 இங்கு வடகலை சம்பிரதாயத்துடன், பாஞ்சராத்ர முறைப்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.
 மூலவர் சார்ங்கபாணி கிடந்த கோலத் தில், உத்தியோக (உத்தான) சயனத்தில் கிழக்கு நோக்கியபடி சேவை சாதிக்கிறார். இவருக்கு உத்தானசாயி, ஆராவமுதன், அபர்யாப்தாமிருதன் என்ற பெயர்களும் உண்டு.
 ஆடி மாதம் ஜேஷ்டாபிஷேக ஏகாதசியில் மூலவர் ஆராவமுதனுக்கு எண்ணெய்க் காப்பு சாத்தி னால், அதை 45 நாட்கள் வரை களைவதில்லை. அப் போது உற்சவர் வீதி உலாவும் வருவதில்லை.
றீ தீபாவளித் திருநாளன்று மூலவருக்குப் புனுகு சாத்துப்படி நடைபெறும்.
 திருமழிசை ஆழ்வார் இங்கு வந்து ஆராவமு தனை வழிபட்டுள்ளார். தான் வந்திருப்பதை அறியாமல் துயிலும் பெருமாளைக் கண்டு, ‘‘ஐயோ! அவனுக்கு என்ன அலுப்போ?’’ என்று அவர் எண்ணிப் பாடல் ஒன்றைப் பாடினார்:
நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய் இடந்தமெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம் கடந்தகால் பரந்த காவிரிக் கரைக்கு டந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழிகேசனே.
அவருக்கு பதில் கூறவே, கிடந்த வாறு எழுந்த கோலத்தில் பகவான் காட்சி அளிக்கிறார். இதுவே உத்தான சயனம் எனப்படும். திருமழிசை ஆழ்வார் சொல்லிய வண்ணம் செய்ததால், பெருமாளை ஆராவமுதாழ்வார் என்றும், ஆழ்வாரை திருமழிசைப் பிரான் என்றும் வழங்குகின்றனர் வைணவர்.
 திருமழிசை ஆழ்வார் பிறந்து வளர்ந்தது திருமழிசை (தொண்டை நாடு). அவர் தங்கி தவம் இயற்றி, வாழ்நாளைக் கழித்தது திருக்குடந்தையில்தான் என்று குரு பரம்பரை கூறுகிறது. அதனால் இந்த நகரை ‘திருமழிசைப் பிரான் உகந்த இடம்’ என்று போற்றுவர் வைணவர்.
 திருமழிசை ஆழ்வார் பெருமாளின் திருவடி சேர்ந்த இடம், பெருமாள் சந்நிதிக்கு மேற்கே சுமார் முக்கால் கி.மீ. தூரத்தில் ஆரிய வைசியர் வீதியில் இருக்கிறது.
 ஸ்ரீசார்ங்கபாணி பெருமாளை, திருக்குடந்தைப் பதிகத்தில் ‘ஆராவமுதன்’ என்று அழைத்தவர் நம்மாழ்வார். உண்டாலும் தெவிட்டாத அமுதுக்கு ஆரா அமுது என்று பெயர். அது உண்மை என்று பக்தர்கள் ஏகோபித்து உணர வைப்பவனே இந்த ஆராவமுதன்.
 ‘‘நாலாயிர திவ்யப் பிரபந்தம் விளைந்த திருப்பதி’’ எனப் புகழ் பெற்றது இந்த சாரங்கபாணித் திருத்தலம்.
சிதம்பரத்துக்கு அருகில் உள்ள வைணவ க்ஷேத்திரம் வீரநாராயணபுரம் (காட்டுமன்னார்கோவில்). அங்கு வசித்த நாதமுனிகள் ஆழ்வார்களுக்குப் பின் தோன்றிய வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையில் முதல் ஸ்தானம் வகிப்பவர். ஒரு முறை இவர், குடும்ப சகிதம் யாத்திரை சென்றார். தலங்கள் பலவற்றை தரிசித்து விட்டு இறுதியாக கும்பகோணத்தில் சார்ங்கபாணியை தரிசிக்க வந்தார். அப்போது அங்கு வந்த பயணிகளில் ஒருவர்,
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே! சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே.
என்ற நம்மாழ்வாரின் பதிகத்தைப் பாடத் தொடங்கி,
குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்கே
_ என்று பாடி முடித்தார்.
இந்தப் பாசுரங்களின் பண்ணழகையும், கருத்தாழத் தையும் கேட்ட நாதமுனிகள் மெய்ம்மறந்து நின்றார். பின்னர், அந்த பயணியிடம், ‘‘அதிலுள்ள ஆயிரம் பாடல்களும் தங்களுக்குப் பாட வருமோ?’’ என்று கேட்டார். பயணியோ தனக்கு அந்த ஒரு பதிகம்தான் தெரியும் என்றார்.
அதன் பிறகு நம்மாழ்வாரது பாசுரங்களைத் தேடி நம்மாழ்வார் அவதரித்த குருகூருக்கு வந்தார் நாதமுனிகள். அங்கு நம்மாழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வாரின் நட்பு பெற்ற பராங்குசதாசர் என்பவரது உதவியால், நம்மாழ்வார் உட்பட பிற ஆழ்வார்களது பாடல்களையும் சேகரித்து அதை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமாக தொகுத்தார் நாதமுனிகள் என்று குரு பரம்பரை வரலாறு கூறுகிறது. எனவே, திவ்யப் பிரபந்தம் வெளிவரக் காரணமாக இருந்தது, இங்கு பாடப்பட்ட திருக்குடந்தைப் பதிகமே!
 கும்பகோணம் அருள்மிகு சார்ங்கபாணி திருக்கோயிலில் ஸ்ரீனி வாசன் சேவை சாதிக்கிறார். இவர் திரு வேங்கட மாமலைலிருந்து இங்கு எழுந்தருளியவரென்றும், ஆராவமுதனும், தானும் ஒருவரே யென்றும் காண்பிக்கிறார். ஆராவமுதனின் அருள் பெற விரும்புபவர்கள் பாயசத்தையோ, நன்றாக காய்ச்சிய பாலில் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து நிவேதனம் செய்து, துளசியால் அர்ச்சனை செய்கிறார்கள். ஆராவமுதனாக இருக்கும் ஸ்ரீனிவாசன் சர்வாபீஷ்டங்களையும் நிறைவேறி மோட்சத்தை அருளுகிறான் என கும்பகோண மகாத்மியம் 51-வது அத்தியாயத்தில் காண்கிறது.
 உற்சவரான பெருமாள், ‘சார்ங்க’ வில்லை ஏந்திக் காட்சியளிப்பதால், சார்ங்கபாணி என்கிறார்கள். இது வேறெங்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு.
 சார்ங்கபாணி கருவறை யில் ஆதிசேஷன்மேல் பள்ளி கொண்டிருக்கிறார் குழந்தை கிருஷ்ணன். குழந்தை இல்லாதவர் கள் இவரைக் கையில் எடுத்து, பிரார்த்தித்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
 இங்கு மகேந்திர பல்லவனால் கட்டப்பட்ட, சிம்மம் செதுக்கப்பட்ட தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது.
 பிரளயத்தின்போது வேடன் வடிவில் வந்த ஈசன், அமுத குடத்தின் மூக்கை உடைக்க, அமுதம் கீழே பரவி ஓடியது. அந்த அமுதம் இரண்டு இடங்களில் தேங்கி நின்றது. ஒன்று குடந்தை மகாமகக் குளம். மற்றோர் இடம் சார்ங்கபாணி ஹேம புஷ்கரணி எனும் பொற்றாமரைக் குளம். மகாமகத்தின்போது இந்த பொற்றாமரைக் குளத்தில் நீராடுவதும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. இதன் கரையில் தாயாரை வளர்த்த ஹேம மகரிஷிக்கு சந்நிதி ஒன்று உள்ளது.
 தனிக் கோயில் நாச்சியாராக, தனி சந்திதானம் கொண்டு கோமளவல்லி நாச்சியார் சேவை சாதிக்கிறார். கோமளவல்லி என்பதற்கு, தமிழில் பொற்கொடி என்று பொருள். ஸ்ரீகோமளவல்லி தாயாரின் அவதாரத் தலமானதால் தாயாரை வழிபட்ட பிறகே பெருமாளை தரிசிப்பது இங்குள்ள நடைமுறை.
ஸ்ரீகோமளவல்லி தாயாருக்கு ‘படிதாண்டா பத்தினி’ என்ற பெயரும் உண்டு. இவர் கோயிலை விட்டு வெளியே வர மாட்டார். காணும் பொங்கல் அன்று மட்டும் தாயார் கோயிலின் உட் பிராகாரத்தில் எழுந்தருளி வலம் வந்து பொற்றாமரைக் குளத்தை அடைந்து அவர் பிறந்த வீட்டில் கணு வைப்பதாக ஐதீகம். அன்று ஊரில் உள்ள கன்னிப் பெண்கள், சிறுமிகள் மற்றும் சுமங்கலிகள் உட்பட எல்லோரும் பொற்றாமரை குளத்துக்கு வந்து, தாயாருடன் சேர்ந்து கணு வைக்கும் வைபவம் கோலாகலமாக நிகழும்.
 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆட்சி செய்த ரகுநாத நாயக்கரின் குருவும், ஆஸ்தான புலவருமான உ.வே. ஐயா குமாரதாதாசார்யர் என்பவர் சார்ங்கபாணியிடம் பெரும் ஈடுபாடு கொண்டு, திருப்பணிகள் பலவற்றைச் செய்துள்ளார்.
தாயாருக்குத் தனிச் சந்நிதி அமைக்க வேண்டுமென விரும்பி, அதற்காக நாயக்க மன்னரின் உதவியுடன் ஸ்ரீஆராவ முதனின் தெற்குப் பிராகாரத்தில் சந்நிதி அமைத்ததும் தாதாச்சார்யரே. அதற்காக தாயார் சந்நிதியின் எதிரே அன்னையை தரிசிப்பதுபோல் தாதாச்சார்யரின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். இவரின் சீடரே ஸ்ரீலட்சுமி நாராயணசுவாமி.
 தைத் திருவிழாவின்போது திருமண நாள் நினைவாக கோமளவல்லி தாயாருக்கு இங்கு மாலை மாற்று விழா சிறப்புடன் நடக்கிறது.
 இங்குள்ள உற்சவ மூர்த்தி மிக அழகு! இவர் சங்கு, சக்கரம், கதாயுதம், வில் (சார்ங்கம்), உடைவாள் ஆகிய ஆயுதங்களுடன் வலது திருக் கை அபய ஹஸ்தத்துடன் ஐம்பொன் சிலையாக எழுந்தருளியிருக்கிறார்.
 தமிழ்நாட்டில், திருவாரூர் தேர் அளவில் முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் இரண்டாவதாகவும், திருக்குடந்தைத் தேர் மூன்றாவதாகவும் இடம்பெற்றுள்ளன.
 ஏழாம் நூற்றாண்டில் சார்ங்கபாணி பெருமாளுக்கு சித்திரைத் திருத்தேர் என்ற மாபெரும் தேரைச் செய்து வைத்து ‘திருவெழு கூற்றிருக்கை’ என்ற பிரபந்தத்தைப் பாடி அருளினார் திருமங்கையாழ்வார் என்பது வரலாறு.
 இந்தத் திருத்தேர் கடைசியாக 1936-ஆம் ஆண்டு ஓடியது. அதன்பின் தேரோட்டம் நடைபெறவில்லை. பின்னர், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகளின் சீரிய முயற்சியால் சுமார் 7 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டு, பிறகு 21.5.84 அன்று மீண்டும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
22 வருடங்களாக ஓடவில்லை. ரூ.20 லட்சம் செலவு செய்து தேரைப் புதுப்பித்து, 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ல் தேரோட்டம் நடைபெற்றது. 3 நாட்கள் தேரோட்டம் நடைபெற்று நிலைக்கு வந்தது. திரளான மக்கள் தேரோட்டத்தைக் கண்டு மகிழ்ந்தனர். விசிறி, தலைக்கு தொப்பி, தண்ணீர், மோர், சாப்பாடு என வழங்கி பலர் புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டனர்.
 இங்கு சித்திரைப் பெருவிழாவில் தேரோட்டம் நடைபெறும். மாசியில் பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். வைகுந்த ஏகாதசி அரையர் சேவை சிறப்புடையது.
 ஹேம ரிஷியின் நினைவாக இங்குள்ள பொற்றாமரைக் குளம் ஹேம புஷ்கரணி எனப்படுகிறது. சுமார் 360 அடி நீளம், 285 அடி அகலம் கொண்ட இந்தக் குளக் கரையில் ஹேம முனிவருக்கு சிறிய சந்நிதி ஒன்று இருக்கிறது. இதை விட ஆதியில் பெரிதாக இருந்ததாம் இந்தத் தீர்த்தம். இப்போது சுருங்கி விட்டதாம். இதற்கு லட்சுமி தீர்த்தம், அமுதவாணி என்ற பெயர்களும் உள்ளன.
 முதலில் ஹேம ரிஷி சந்நிதியில் வணங்கி, குளக்கரையில் உள்ள மற்ற தெய்வங்களையும் தரிசித்து விட்டு, வடக்கே உள்ள தல விருட்சமான பாரிஜாதத்தைத் தொழுது, கடைசியாக பெருமாளையும் சேவித்த பிறகு இதில் நீராட வேண்டும் என்பது நியதி.
 ஸ்ரீரங்கம்- அரவணை பிரசாதம் போன்று சார்ங்கபாணி பெருமாளுக்கு ‘கும்மாயம்’ படைக்கப்படுகிறது. மொச்சை, பாசிப் பருப்பு, உளுந்து, துவரை மற்றும் காணம் (கொள்ளு) ஆகியவற்றை குறுநொய் போல் உடைத்து, வேக வைத்து வெல்லம் மற்றும் பசு நெய் சேர்த்து தயார் செய்யப்படுவதே இந்தக் கும்மாயம். இதை தினமும் புதிய மண் கலத்தில் சமைக்கிறார்கள்.
 மாசி மகம், இங்குள்ள எல்லா சிவ-விஷ்ணு கோயில்களிலும் பெரிய உற்சவமாகக் கொண்டாடப்படு கிறது. 12 வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் மகாமகம் கும்பகோணத்தின் மற்றொரு சிறப்பு.
 சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் அட்சயத் திருதியை அன்று, கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில் 12 கருட சேவை விழா கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் மற்றும் அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள விஷ்ணு ஆலயங்களிலிருந்து பகவான் கருட வாகனத்தில் எழுந்தருளி நாள் முழுக்க தரிசனம் தருவார். அப்போது இங்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீராமபிரானோடு ஸ்ரீசார்ங்கபாணி நடுநாயகமாக எழுந்தருள்கிறார். வேறெங்கும் இந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை.
 இங்கு தை மாதத்தில் நடைபெறும் மட்டையடி உற்சவம் புகழ் பெற்றது. சார்ங்கபாணியர், ஓர் இரவு தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் கோயிலில் இருந்து வெளியேறியதால் கோபமுற்ற தாயார் அவரை மீண்டும் கோயிலுக்குள் நுழைய விடாமல் கதவை அடைத்து விட்டார். நம்மாழ்வார் தலையிட்டு இவர்களுக்கு இடையிலான ஊடலைத் தீர்த்து வைத்த நிகழ்ச்சியே இந்த மட்டையடி உற்சவம்.
 எந்தப் பாவமும் காசிக்குச் சென்றால் தொலையும்; காசியில் செய்த பாவம் திருக்குடந்தையில் அழியும். திருக்குடந்தையில் செய்த பாவம் வேறெங்கும் தீராது; இங்கேயே தீர்க்க வேண்டும் என்பது ஐதீகம்.
சார்ங்கபாணி பெருமாளை ஒரு முறை சேவித்தாலே பிரம்மஹத்தி போன்ற தோஷங்கள் அகலும்.
 சார்ங்கபாணி கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து, பிரசாதம் பெற்றுக் கொண்டால், பயணத் தின்போது, இக்கட்டில் சிக்கிக் கொள்ளாததுடன், பயம் மற்றும் மரண பயத்தில் இருந்தும் மீளலாம். பெருமாளின் பிரசாதம் சக்கரம் போல் பக்தர்களை பாதுகாக்கும் என்பது நம்பிக்கை.
 ஒரு முறை இந்தத் திருக்கோயிலுக்கு ஆபத்து வந்தபோது மொத்தக் கோயிலையும் வைக்கோலுக்குள் மறைத்து வைத்துக் காப்பாற்றினார் மெய்க்காவலிடையர் என்ற அடியார். தேரோட்டம் முடிந்து தீர்த்தவாரியானதும், சுவாமியும் தாயாரும் மெய்க்காவலிடையருக்கு தீர்த்த மரியாதை அளித்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
 ஒரு கட்டத்தில் சார்ங்கபாணி பெருமாளை, ‘திருக்கோஷ்டியூர் பெருமாள்’ கோயிலில் வைத்து கல் திரையிட்டு மறைத்துக் காப்பாற்றினாராம். இதன் நினைவாக இன்றும் கும்பகோணத்து அருளிச் செயல் கோஷ்டியில், திருக்கோஷ்டியூர் பாசுரம் ஒன்று ஓதப்படுகிறது.
 சுமார் பத்தாண்டுகளுக்கு முன் சார்ங்கபாணி கோயிலில் பெருமாளின் திருவாபரணங்கள் (நகைகள்) திருடு போயின. இதனால் கவலை அடைந்த அடியார்கள், ‘நடந்த கால்கள் நொந்தவோ?...’ என்று தொடங்கும் திருமழிசையாழ்வாரின் பாடலைப் பாடினர். அதன் பின் ஒரு சில நாட்களுக்குள் திருடன் பிடிபட்டு, நகைகள் திரும்பக் கிடைத்தது ஆச்சரியகரமான ஒரு சம்பவம்!

Comments