புண்ணிய பூமி

குஜராத்தின் கிர்நார் மலைப்பிரதேசத்தில், பவநாதன் என்ற பெயரில் எழுந்தருளியிருக்கிறான் மகாதேவன்.

அரன் மட்டுமின்றி, அத்தனை கடவுளர்களும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். கங்கை உட்பட காசினி தீர்த்தங்கள் சகலமும் சங்கமித்திருக்கின்றன. எனவே, இத்தலம் புவியிலேயே சிறந்த புண்ணியத் தலமாகப் போற்றப்படுகிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உண்டானதொரு பிரளயத்தில் பிரபஞ்சமே உருக்குலைந்து அழிந்தது. பிரளயத்தின் ஆவேசம் அடங்கிய பின், ஈஸ்வரன் எழுந்தருளினார். அவர் அருளால் பிரம்மனும் நாராயணனும் தோன்றினர். பிரம்மா படைப்புத் தொழிலையும், விஷ்ணு காக்கும் தொழிலையும், சிவன் அழிக்கும் தொழிலையும் மேற்கொண்டனர்.

அவ்வமயம் முக்கடவுளர்களும் கலந்து கொள்ளும் சபை ஒன்று கூட்டப்பட்டது.

முதலில் வந்த பிரம்மா, ‘நான் படைப்புத் தொழிலை மேற்கொள்ளாவிடில் விஷ்ணு காப்பதேது, சிவன் அழிப்பதேது? எனவே, யானே முக்கடவுளரிலும் உயர்ந்தவன்’ என்று ஆணவ உரையாற்றினார்.
வைகுந்தநாதனோ, ‘படைக்கப்பட்ட எந்த உயிரும் பேணப்படா விட்டால், பிரபஞ்சமே சுடுகாடாய் இருக்கும். ஆதலால், காக்கும் கடவுளான நானே மூவரிலும் மேம்பட்டவன்’ என்றார்.

‘அயனுக்கும், ஹரிக்கும் அவரவர் நிலையை எடுத்துச் சொல்ல வல்லவர் ஈசன் ஒருவரே’ என்றுணர்ந்த அமரர்கள், அவரை வேண்டினார்கள்.
ஈசனும் எழுந்தருளினார். நான் முகனையும் நாராயணனையும் நோக்கி, ‘பிரளய வெள்ளத்தில் பிரபஞ்சத்துக்கு அழிவு நேரிட்டபோது, மொத்த அழிவையும் ஏற்று அண்டத்தை அமைதிப்படுத்தியவன் யான் என்பதை அறிவீர்கள்தானே? அதன்பின் அல்லவா பிரம்மனின் தோற்றுவாயும், விஷ்ணுவின் தோற்றுவாயும் என் மூலம் ஏற்பட்டது! படைப்புத் தொழிலை நீ செய், காக்கும் தொழிலை நீ செய் என்று பணிகளை உங்களுக்கு நான் பகிர்ந்தளிந்ததுகூடவா மறந்து போகும்?’ என்று நடந்ததை நவின்றார்.

பிரம்மா கர்வம் தொலைத்து, கயிலாயநாதனைப் பணிந்தார். பின், ‘ஈஸ்வரா, உலகம் உங்களது கருணையால்தான் மீண்டும் உற்பத்தி ஆனது. இதனைப் படைத்தவர் என்ற முறையில் படைப்புத்தலைவனாக, பவநாதனாக பாரினில் என்றென்றும் எழுந்தருள வேண்டும்’ என்று இறைஞ்சினார்.

நான்முகனின் வேண்டுகோளை ஏற்று, மகேஸ்வரன் மண்ணுலகு ஏகினார். எழில் கொஞ்சும் கிர்நார் மலையடிவாரத்தில், பவநாதர் என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டார்.
அங்கே கயிலாயத்தில் பார்வதியோ, பரமேஸ் வரனைக் காணாமல் பரிதவித்து, ஆவேசம் கொண்டாள்.

அஞ்சிய அமரர்களும், பிரம்மாவும், நாரதரும் விஷ்ணுவிடம் சென்று வேண்ட, ‘கயிலாயநாதன் இங்கிருந்து எந்தத் திசை நோக்கிச் சென்றாரோ, அந்தத் திசையில் நாமும் பார்வதியுடன் பயணம் மேற்கொண்டால், பரமேஸ்வர தரிசனம் கிட்டும்! அங்கே அவரிடம் கயிலாயம் திரும்ப, வேண்டுவோம்’ என்றார் நாராயணன்.

அதன்படி அன்னையும், நான்முகனும், நாராயணனும், கங்கையும் மற்றுமுள்ள தீர்த்த மங்கைகளும், தேவர்களும், அவனியில் அண்ண லைத் தேடி வந்தார்கள். ஆயினும், அவரை தரிசிக்க இயலாமல், ஈசனைக் குறித்து ஆழ்தவத்தில் ஆழ்ந்தார்கள். 

வைகாசி பௌர்ணமியன்று கிர்நார் மலை அடிவாரத்தில் அவர்களுக்கு காட்சி அருளிய ஈஸ்வரன், ‘நீங்கள் அனைவருமே உங்கள் அம்சத்துடன் இங்கே நிரந்தரமாக வாசம் புரியுங்கள். நானும் இங்கேயே வாசம் புரிவேன். பவநாதனாக என் அம்சம் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தில் எவர் வந்து ஆராதித்தாலும் அவர்கள் தங்களுடைய பல ஜன்ம பாவங்களில் இருந்து விடுபடுவார்கள்’ என்றருளினார்.
பவானி என்ற திருநாமத்துடன் பவநாதர் ஆலயத்தில் எழுந்தருளினாள் பார்வதி. அனைத்துக் கடவுளர்களும் கிர்நார் மலைப் பிரதேசத்தில் ஆங்காங்கே எழுந்தருளினார்கள். இதன் காரணமாகவே, இணையற்றதொரு இறைத்தலமாக கிர்நார் இயம்பப்படுகிறது.

கிர்நார் மலையடிவாரத்தில் இருக்கும் ஜுனா காத் என்னும் ஊரில், பவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகிலிருந்து கிர்நார் உச்சியை நோக்கிப் படிகள் ஏறுகின்றன. சுமார் 4,000 படிகள் அமைந்த மலைப்பாதையில், பல இயற்கைக் குகைகளில் நான்முகன், நாராயணன், இந்திராதி தேவர்கள், அம்பா என்று அனைவரும் கோயில் கொண்டுள்ளார்கள். திருவண்ணாமலை அளவுக்கு ஏற்றிப் போற்றப்படும் இந்த மலையில் எண்ணிறந்த குகைகளில் லட்சக்கணக்கான சித்தர்கள், ரிஷிகள், துறவிகள் தவம் புரிகின்றனர்.
பவநாதர் ஆலயம் சீரிய அமைப்புடன் விளங்குகிறது. நுழைந்தவுடன், விசாலமான திறந்த முற்றம். அதன் இடது ஓரத்தில் சண்ட பைரவர் எழுந்தருளியிருக்கிறார். அவரை வணங்கி விட்டுக் கடந்தால், ஆமை ஒன்று ஈசனை வணங்கும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. ஆமையை அடுத்து நந்தியம்பெருமான். கருவறை மண்டபத்தின் முகப்பில் இடப்புறத்தில் விநாய கரும், வலப்புறத்தில்
ஆஞ்சநேயரும் தரிசனம் அளிக்கிறார்கள். கருவறையில் பவநாதர் சின்னஞ் சிறு லிங்க வடிவில் நாகக்குடையுடன் காட்சி அளிக்கிறார். நேர் பின்னால் மாடத்தில் அன்னை பவானி நான்கு கரங்களுடன் பளிங்குச் சிலையாக தரிசனம் தருகிறாள். இடது கையில் கமண்டலம்; வலதில் ஜபமாலை.

ஈசனையும் ஈஸ்வரியையும் வணங்கிவிட்டுப் பிராகார வலம் வந்தால், கருவறைக்கு இடது புறத்தில் மான்குண்டம் என்றழைக்கப்படும் தீர்த்தக்குளம். குளத்தில் ரிஷபத்தின் வாயிலிருந்து நீர் சொரிவது போன்றதோர் அமைப்பு. படித்துறை மேடையில் பார்வதியும், கணேசரும். அனைத்து நதிகளின் நீரும் இங்கே சங்கமித்திருப்பதால், இந்தத் தீர்த்தம் அனைத்துப் பாவங்களையும் அகற்றி, முக்தி அருளவல்லது என்பது நம்பிக்கை.

ஜுனாகாத் பவநாதர் ஆலயத்துக்கும் மஹா சிவராத்திரிக்கும் மகத்தான தொடர்பு உள்ளது.

பிரளய காலம். அனைத்து உலகங்களும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்து போயின; உயிர்கள் மாண்டு போயின. அனைத்தும் அடங்கிய அந்த நாள் முடிந்து இரவு கவிழ்ந்தது. நிர்மலமான அந்த இரவில் உமாதேவி தனித்து அமர்ந்திருந்தாள். பிரளய இரவின் நான்கு ஜாமத்திலும், பரமேஸ்வரனை அர்ச்சனை செய்து, அவனையே மனத்தில் நினைத்துத் துதித்திருந்தாள். இரவின் முடிவில், பார்வதி தேவியின் முன் தோன்றினார் சிவபெருமான்.

“பார்வதி, இரவின் நான்கு ஜாமத்திலும் இடை விடாமல் எம்மையே ஆராதித்த உன் அன்பு என் உள்ளத்தை நெகிழ வைத்துவிட்டது. என்ன வேண்டும், கேள்?” என்று கேட்டார்.

“இறைவா, நான் தங்களைப் பூஜித்த இந்த இரவை, உலகத்தவர்கள் தங்கள் பெயராலேயே ‘சிவராத்திரி’ என்று கொண்டாட வேண்டும். புனிதமான இந்தச் சிவராத்திரியில், சூரியன் அஸ்தமித்தது முதல் உதிக்கும் வரை யார் தங்களைப் பூஜித்தாலும், அவர்களுக்குச் சொர்க்க போகங்களையும், மோட்ச சாம்ராஜ்யத்தையும் தாங்கள் அருள வேண்டும்” என்று பிரார்த்தித்தாள்.

பரமசிவனும் அப்படியே அனுக்கிரகம் செய்ய, அந்த இரவு ‘சிவராத்திரி’ என எல்லோரும் கொண்டாடும் விரதமாகியது. இந்தச் சிவராத்திரி அன்று பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
ஈஸ்வரன் ஜோதி வடிவாய் விசுவரூப தரிசனம் அருள, அவனது அடியையும் முடியையும் கண்டறிய முடியாமல் பிரம்மனும் விஷ்ணுவும் திகைத்து, சிவனே மூலமுதற் கடவுள் என்று உணர்ந்த நிகழ்வு சிவராத்திரி அன்றுதான் நிகழ்ந்தது.
உமையவள் ஒருமுறை வேடிக்கையாக ஈசனின் கண்களைப் பொத்தி விளையாட, அதன் காரணமாக மூவுலகங்களிலும் இருள் மண்டிப் போனது. உலகங்கள் மீண்டும் ஒளி பெறுவதற்காக தேவர்கள் ஈசனை வேண்டி வழிபட்ட நாளும் இதே சிவராத்திரி அன்றுதான்!

தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி நாகம் வேதனை தாங்காமல் ஆலகால விஷத்தைக் கக்கியது. தேவர்களையும் அசுரர்களையும் காப்ப தற்காக மகேஸ்வரன் அந்தக் கொடிய விஷத்தை அருந்தினார். அந்த விஷத்தின் வெம்மை சிவனை பாதிக்கக்கூடாது என்பதற்காக பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்களும், அசுரர்களும், ரிஷிகளும், பார்வதி தேவியும் சிவனுக்குக் குளிரக் குளிர அபிஷேகம் செய்து பூஜித்ததும் ஒரு சிவராத்திரி அன்றுதான்.
பார்வதி தேவி தவமிருந்து சிவனின் உடலில் சரிபாதி பெற்றதும்கூட சிவராத்திரியில்தான்.

மாசி மாதமும், தேய்பிறைச் சதுர்த்தசியும் கூடிய மஹா சிவராத்திரியன்று உலகக் கோளத் தின் வடக்கு பாகத்தில் ஓர் இயற்கை மாற்றம் ஏற் படுகிறது. இதன் காரணமாக மனித உடல்களில் சக்தி நிலையானது மேல் நோக்கி உயரும் அற்பு தம் நிகழ்கிறது. அன்று இரவு, சிவனை ஆராதித்து, தியானத்தில் ஆழ்ந்தால், ஈஸ்வரனின் அருள் நமக்குப் பரிபூரணமாகக் கிட்டும்.
பிரளய காலம் முடிந்தவுடன் மஹாதேவன் விரும்பி வந்து எழுந்தருளியது கிர்நார் மலையடி வாரத்தில் உள்ள பவநாதர் ஆலயத்தில்தான் என்பதால், இங்கே மஹா சிவராத்திரி கும்பமேளா அளவுக்குக் குதூகலத்துடன் கொண்டாடப் படுகிறது.
ஒவ்வொரு மஹாசிவராத்திரிக்கும் கிர்நார் மலையிலிருந்து சாது, சந்நியாசிகள் லட்சக்கணக்கில் திரண்டு வருகிறார்கள். மான்குண்டத்தில் நீராடி, பவநாத்தைத் தரிசனம் செய்து ஆராதித்து விட்டு மீள்கிறார்கள்.

வாருங்கள், நாமும் சென்று பவநாதரை அகம் குளிர தரிசிப்போம்.  பவநாதர் தரிசனம், பாப விமோசனம்!


திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர் : கிர்நார் - ஜுனாகாத்

சுவாமியின் திருநாமம் : பவநாத்

அம்பாள்: பவானி

எங்கே உள்ளது? : குஜராத்

எப்படிச் செல்வது? : சென்னையில் இருந்து அஹமதாபாத்துக்கு  ரயிலிலோ விமானத்திலோ சென்று, அங்கிருந்து வேராவல் செல்லும் ரயிலில் பயணித்தால், ஜுனாகாத்தை வந்தடையலாம். அஹமதாபாத்திலிருந்து பேருந்து மற்றும் கார் மூலமும் ஜுனாகாத் சென்றடையலாம்.

எங்கே தங்குவது? : ஜுனாகாத்தில் நிறைய தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
   
தரிசன நேரம் : காலை 5.30 மணி முதல் இரவு 9.30 வரை.

Comments