மும்மூர்த்திகள் அருளும் பிரார்த்தனைக் கோயில்!

பிரம்மன், மகாவிஷ்ணு, சிவனார் ஆகிய மூவரும் பிரதான மூர்த்திகளாக ஒருங்கே அருளும் திருத்தலங்கள் மிக அபூர்வம். அந்த வகையில், மதுரையில் இருந்து காரியாபட்டி செல்லும்
வழியில், மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள வலையங்குளத்தில் மும்மூர்த்தியரும் அருளும் ஒரு திருக்கோயில் அழகுற அமைந்திருக்கிறது.

சிவபக்தரான மூர்த்தி என்ற அன்பர், தியானம் செய்யும் போது தமக்குக்கிடைத்த அசரீரி வாக்குப்படி கட்டிய திருக்கோயில் இது.நடுநாயகமாக சிவபெருமான், அவருக்கு வலப்புறம் நின்ற நிலையில் நான்முகன், இடப்புறமாக மகாவிஷ்ணு என தனித்தனி விமானங்களுடன் கூடிய சந்நிதிகளில் அருள்பாலிக் கின்றனர் மும்மூர்த்திகளும். மூவரிலும் சிவபெருமான் நடுநாயகமாக இருந்து, பிரதான மூர்த்தியாக இருப்பதால், கொடிமரம் அவருக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ளது.
காரணப் பெயர்களோ, சிறப்புத் திருநாமங்களோ எதுவும் இன்றி சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மன் ஆகிய நாமங்களுடனேயே  தெய்வங்கள் அருள்வது இக்கோயிலின் சிறப்பம்சம். அம்பிகைக்கும் தாயாருக்கும் முறையே பார்வதிதேவி, மகாலட்சுமி என்றே திருப் பெயர்கள் திகழ்கின்றன. அதுமட்டுமா? பிரார்த்தனைகள் பலிதமாவதால், ‘பிரார்த்தனைக் கோயில்’ என்றே இக்கோயிலைச் சிறப்பிக்கிறார்கள் பக்தர்கள்.
புதிதாகத் திருமணம் ஆன தம்பதியர் அறிவும் அழகும் மிக்க குழந்தைகள் பிறக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறக்கவும் பிரம்மாவுக்கு மஞ்சள் வஸ்திரம், தாமரைப்பூ மாலை அணிவித்து, மஞ்சள் பிரசாதம் வைத்து வழிபடுகின்றனர். அதேபோல், வியாபாரம் செழிக் கவும் வீட்டில் செல்வம் பெருகவும், கடன் தொல்லைகள் தீரவும் இங்குள்ள மகாவிஷ்ணு, மகாலட்சுமிக்கு துளசி மாலை அணிவித்து, கற்கண்டு, உலர் திராட்சை, ஏலக்காய் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள்.
மேலும், நோய்கள் தீர, நீண்ட நாட்களாக தடைப் பட்டிருந்த திருமணம் நடக்க, காரியத்தடைகள் விலக, எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கவும் இங்கு வந்து  வழிபடுகிறார்கள் பக்தர்கள். வியாழ பகவானுக்கு தனி சந்நிதி உள்ளதால் குரு ஸ்தலமாகவும் இது விளங்குகிறது. பிரதோஷம், சிவராத்திரி, கிரகப் பெயர்ச்சி காலங்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெறுகின்றன. மேலும் சனிக்கிழமைதோறும் மகா விஷ்ணுவுக்கு சிறப்பு பூஜையும், ஞாயிற்றுக் கிழமைகளில் கால பைரவருக்கு சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. குடும்ப நன்மைக்காகவும், பொது நன்மைக்காகவும் ஹோமங்களும் நடத்தப்படுகின்றன. காலை 7 முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

Comments