கீதையில் கிருஷ்ணன்!

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற புண்ணிய கே்ஷத்திரம் ஸ்ரீரங்கத்தில், பதிநான்காம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நடந்த சம்பவம் இது. அங்கே கோபால பட்டர் என்ற வைணவர் வாழ்ந்தார். அவர் ஒரு பகவத்கீதை பித்தர். ஒவ்வொரு நாளும் ஸ்ரீரங்கநாதர் ஆலய கொடி மரத்தின் அருகில் அமர்ந்து கீதை பாராயணம் செய்வது அவரது வழக்கம். உரத்த குரலில் அவர் கீதையின் ஸ்லோகங்களைப் படித்துக் கொண்டிருப்பார். அதைக் கேட்கும் பண்டிதர்களின் காதில் அது நாராசமா விழும். காரணம், இவர் ஸ்லோகங்களைத் தப்பும் தவறுமாக பாராயணம் செய்வதோடு, சில வரிகளையும் விட்டுவிட்டுப் படிப்பார். அதோடு, ஸ்லோக வார்த்தைகள் பலவற்றை
சிதைத்தும் படிப்பார்.
பலர் கூடும் ஆலயத்தில், வழிபாட்டுக்குரிய கீதையை இப்படிப் பாராயணம் செய்தால்யார்தான் பொறுப்பார்கள்? படித்த பண்டிதர்கள் பலர் கோபால பட்டரிடம் நயந்து கூறி, பாராயணத்தை நிறுத்தும்படி வேண்டினர். ஆண்டவனுக்காகவே தாம் இதனைப் படிப்பதாகவும், அது தமது கடமையென்றும் கூறிய தோடு, அதனை நிறுத்த முடியாதென்றும் திட்டவட்ட மாகக் கூறி விட்டார். இதனால் பலர் அவரை கேலி செய்தனர். எள்ளி நகையாடினர். கற்களை அவர் மேல் வீசினர். எதற்கும் அசையாமல், படுத்திருக்கும் அரங்க நாதனைப்போல் கோபால பட்டரும் நிறுத்தாமல் தமது பாராயணத்தை செய்து கொண்டிருந்தார்.
ஒருசமயம், ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாபிரபு ஸ்ரீரங்கத்துக்கு விஜயம் செய்வதாக இருந்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணனே பிரேம பக்தியின் தத்துவத்தை விளக்க கலியுகத்தில் சைதன்ய மகாப்பிரபுவாகத் தோன்றி, நாம சங்கீர்த்தனத்தின் உயர்வை உலகுக்குப் போதித்தார். அம்மகான் ஸ்ரீரங்கம் வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டது. ரங்கநாதர் ஆலயத்தில் அவருக்கு பெரிய வரவேற்புக்கான ஏற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அப்போது ஆலய நிர்வாகிகளுக்கும், ஆஸ்திக பண்டிதர்களுக்கும் கோபால பட்டரின் நினைவு வந்தது. ஆனால், கோபால பட்டரோ நடப் பது எதுவுமே அறியாமல் வழக்கம் போல் கீதை பாராயணம் செய்து கொண்டிருந்தார். ஆலய நிர்வாகிகள் அவரிடம், ஐயா, வடநாட்டிலிருந்து ஒரு பெரிய மகான் வருகிறார். நாளை ஒரு நாள் மட்டும் நீங்கள் பாராயணம் செய்வதை நிறுத்திக்கொண்டால் தேவலாம்..." என்று வேண்டினர். அவர்கள் கூறியது பட்டர் காதில் விழவில்லை. பட்டரை நன்கு அறிந்த ஒருவர் ஸ்ரீரங்கன். அவர் இப்பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு வழி சொன்னார்.
எக்காரணம் சொன்னாலும் இந்தப் பித்தன் காதில் ஏறாது. இவனது பாராயணத்தை நாளை ஒரு நாள் மட்டும், யாருமே வராத வடக்கு வாசலில் வைத்துக் கொள்ளச் சொல்கிறேன்" என்று கூறி, ஆலயத்துக்கு அந்த மகான் கிழக்குக் கோபுரவாசல் வழியாக வருவ தால் கூட்டமும், மேள சப்தமும் உங்களுக்கு இடைஞ் சலாக இருக்கும். எனவே, நாளைக்கு மட்டும் பாராயணத்தை வடக்கு கோபுர வாசலில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டினார் ஸ்ரீரங்கன். சொர்க்க வாசலில் கீதை பாராயணம் செய்வதும் நல்லதுதான் என்று பட்டரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
மறுநாள், ஸ்ரீசைதன்ய மகாப்பிரபு பூரணகும்ப மரியாதையுடன், ஸ்ரீரங்கநாதர் ஆலய கிழக்கு கோபுர வாயிலில் நுழைந்து கொண்டிருந்தார். திடீரென பரவச நிலையடைந்த மகாப்பிரபு, இங்கே எங்கேயோ பகவத்கீதை பாராயணம் கேட்கிறதே..." என்று உணர்ச்சிப் பெருக்குடன் வடக்கு வாசலை நோக்கி ஓடினார். அங்கே கோபால பட்டர் கீதை பாராயணம் செய்து கொண்டிருந்தார். அதனைக் கேட்டு பரவசக் கண்ணீர் வடித்து நின்றார் மகாப்பிரபு.
ஆலய நிர்வாகிகளுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. மேள, தாள, வேத கோஷங்களுக்கு மத்தியில் கீதையின் நாதம் இவருக்கு எப்படிக் கேட்டது என்று அதிசயித்தனர். அனைவர் மனநிலையையும் தமது
சங்கல்பத்தால் அறிந்து கொண்ட மகாப்பிரபு, அவர்களின் அறிவுக்கண்களைத் திறக்கும் ஆசையுடன் கோபால பட்டரைப் பார்த்துக் கேட்டார்.
ஐயா, இத்தனை பக்தி சிரத்தையுடன் கீதை பாராயணம் செய்கிறீர்கள். சமஸ்கிருதத்தையும் கற்று, சொல்சுத்தமாக உச்சரித்து, தவறில்லாமல் பாராயணம் செய்தால் என்ன?" என்று கேட்டார்.
அதற்கு கோபால பட்டர், பிரபு, தாங்கள் சாட்சாத் கிருஷ்ணனாகவே நின்று என்னைக் கேட்பதாகத் தோன்றுகிறது. தங்களுக்குத் தெரியாதா? என் வாழ் நாளுக்குள் கீதையின் அத்தியாயங்களை முழுவதுமாக மனப்பாடம் செய்து விடுவது என்பது, நான் ஸ்ரீரங்க நாதன் முன்பு எடுத்துக் கொண்ட விரதம். ஆனால், எப்போதெல்லாம் பாராயணம் செய்ய ஏடுகளைப் புரட்டுகிறேனோ, அப்போதெல்லாம் அதிலே பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் உருவம் - அவன் அருகில் நிற்கும் அர்ஜுனன் - அனுமன் கொடி தாங்கிய தேர் இவைதான் தெரிகின்றன. இடையிடையே தெரியும் எழுத்துக்களைக் கூட்டிப் பாராயணம் செய்கிறேன்.
என்றாவது, ஒருநாள் இந்தக் காட்சி அப்படி இப்படி விலகியிருந்தால் அங்கே தெரியும் அட்சரங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். வாயினுள்ளே வையமெல்லாம் காட்டிய அந்த மாயவன் இந்த ஏட்டினில் தன்னைக் காட்டி ஏமாற்றுகிறானே தவிர, தன் உபதேசங்களை நான் தெரிந்து கொள்ள அனுமதியில்லை."
சைதன்ய மகாப்பிரபு கோபால பட்டரை உளமாரத் தழுவிக் கொண்டார். இருவர் கண்களும் குளமாகின. அறியாதவர் அறிந்துகொண்டனர். அறிந்து கொண்டவர் ஆனந்தம் கொண்டனர். இதன் மூலம், ‘எவனொருவன் ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணனையே காண்கிறானோ, அவனே கீதையை பாராயணம் செய்ய அருகதை உள்ளவன்’என்ற தத்துவத்தை விளக்கிச் சொல்கிறார் மகாப்பிரபு.


 

Comments