உள்ளத்தில் உலவும் உத்தமன்!

சுந்திரம் - பக்தர் பலரும் அறிந்த திருத்தலம். மும்மூர்த்திகளும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) சேர்ந்த தாணு மால் அயன் சன்னிதி விசேஷமானது. இப்போது அந்த விஸ்வரூப ஆஞ்சனேயரும் பிரசித்தம். அவரது வடைமாலை உலகளாவிய புகழ் பெற்றது. அந்த ஊரில் திருவாவடுதுறை ஆதீன மடமும் உள்ளது. முன்பும், இப்போதும் சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் மடத்தின் சார்பில் நடந்து வருகிறது. முன்பெல்லாம் சிவராத்திரி அபிஷேக ஆராதனைகள் முடிந்து மறுநாள் அதிகாலை முறுக்கு, தேன்குழல், அப்பம், பொங்கல் என்று பிரசாதங்கள் திருமடத்துக்கு வரும்.
அங்கிருந்த கட்டளைத்தம்பிரான், குழந்தைகளை வரவழைத்து அமர்த்தி, பிரசாதம் வேண்டுமானால், நான் சொல்லும் தேவாரப் பாடல்களை அப்படியே திரும்பச் சொல்ல வேண்டும்" என்று அன்புடன் ஆணையிட்டு, ஒவ்வொரு தேவாரப் பாடலையும் ஒருமுறை, இருமுறை என்று அழகாக, நிதானமாகச் சொல்லுவார். ஒரே பையன் மட்டும்தான் அத்தனை பாடல்களையும் அடி மாறாமல், அழகாக உச்சரித்து இசைகூட்டிப் பாடினான்.
ஒவ்வொரு பாட்டுக்கும் முறுக்கு, அப்பம், பொங்கல் என்று பரிசுப் பிரசாதம் அவனுக்கே சேர்ந்தது. மற்ற மாணவர்கள் முகம் வாடியது. அந்தப் பையனோ, தனக்குக் கிடைத்த பிரசாதங்களை, தம்பிரானிடம் சொல்லிவிட்டு அத்தனை பையன்களுக்கும் பகிர்ந்து தந்து, தானும் உண்டு மகிழ்ந்தான். யார் அந்த மழலை மேதை! அவர்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
நாகர்கோவில் அருகில், ஏரி குளம், தோப்பு நிறைந்த ஊர் தேரூர். அதுதான் தேசிக விநாயகத்தின் பிறப்பிடம். நாகையில் கப்பல் வணிகம் செய்து வந்த சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமி தம்பதியின் அருமை மகன் இவர். இளமையிலேயே மலையாளம், தமிழ் என இரு மொழிப் புலமை பெற்று விளங்கினார். விளையாட்டு, கல்வெட்டாராய்ச்சி, கவிபுனைதல் எனப் பல துறையிலும் ஆர்வம் கொண்டு சிறந்து விளங்கிய தேசிக விநாயகத்துக்குத் தந்தையின் மறைவு (இவருக்குப் பத்து வயது) பேரிடியானது. தாய் இவரது படிப்பைத் தடை செய்யவில்லை.
திருவாவடுதுறைத் தம்பிரான் சாந்தலிங்க சுவாமி சைவம், தமிழ் என இரு கண்களையும்திறந்து வைத்தார். பள்ளிப் படிப்புடன் தமிழ் நூல்களையும் கற்க முனைந்தார் தே.வி! கோட்டாறுக்கு நடந்தே சென்று ஆங்கிலக் கல்வி பயின்றார்.
‘உள்ளத்து உள்ளது கவிதை - இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்
தேர்ந்துரைப்பது கவிதை’ - என்றார் கவிமணி.
திருநெல்வேலியிலிருந்து வந்த உமையொரு பாகக் குருக்கள் கவிமணிக்கு சிவதீட்சை கொடுத்தார்.
இவரது பாடல்களை வெறும் கவிதை என்று சொல்வதா? இவர் சொன்னதெல்லாம் பலித்தது. இறையருள், குருவருள் இரண்டிலும் மேன்மை பெற்றார்.
பிரிந்தவர் கூடினர்:
ஒரு நண்பர், மனைவியின் மீது பிணக்குற்று ஒரு மடத்தில் மறைந்திருந்தார். செய்தியறிந்த கவிமணி,
‘மந்தாரை மலர்ந்திருக்க
மதுவுண்ணும் வண்டு எங்கே?’
என்று எழுதி நண்பரிடம் தந்தார். நண்பர் மனம் மாறி மனைவியுடன் சேர்ந்தார். தம்பி உன் பாடல்கள் அருமையாய், அருட்திறம் உடையதாய் அமைந்திருக்கிறதே. நீ சித்து ஏதாவது கற்றிருக்கிறாயா?" என்று தமிழறிஞர் சிவராமலிங்கம் என் பவர் கேட்டாராம். தம்பிரான் கட்டளைக்கிணங்கத் தேரூர் அழகம்மை மீது ஆசிரிய விருத்தம் பாடினார் கவிமணி. அவர் அறம்பாடி ‘போற்றிக் கண்ணு’ என்பவர் இறந்துவிட்டார். அதன்பின்யார் மீதும் வசை பாட வில்லை கவிமணி.
உயிர் இரக்கம்:
தேரூரில் மாடன் கோயிலில் கொடை விழா நடக்கும். உயிர்ப்பலி கொடுப்பர். அதைப் பார்த்தவுடனே, கவிதை பாடித் தன் நெஞ்சக் குமுறலை வெளியிட்டார்.
‘நாடியறம் தேடியிடும் நல்தேரூர் தன்னில்
நல்ல மாடன் என்றும் மறவன் என்றும்
.................................
ஆடினர் ஆடறுத்தார் அள்ளியுண்டார்
ஐயா! இக்கொடுமை ஏன் அறிந்திலேனே!’
பின்னால், உயிர்ப்பலி நிறுத்தப்பட்டது. கவிமணி மகிழ்ந்தார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டார். 25ஆவது வயதில் புத்தேரி உமையம்மையுடன் திருமணம் நடந்தது. ஆசிரியராக அரசுப் பள்ளியில் சேர்ந்தார். ஆசிரியப்பணி என்ற அறப்பணியில் அர்ப்பணிப்போடு தொண்டு செய்த இவரை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினர். மகளிர் கல்லூரிப் பேராசிரியராகவும் ஆனார். பட்டப்படிப்பு முடிக்கா விடினும் அவரது கல்வித்தொண்டு அவரை உயர்த்தியது. ஆசிய ஜோதி, மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், காந்தவூர்ச்சாலை போன்ற நூல்கள் அவரது பன்முக அறிவின் விளக்கங்கள்
A Book Of Verse - உமர்கய்யாம் பாடலை பிட்ஸ் ஜெரால்ட் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வரி இது. கவிமணியோ, ‘கையில் கம்பன் கவியுண்டு’ என்று மாற்றியது அழகு!
அடக்கம்:
தாமே பாராட்டு விழாக்களுக்கு அழகாக ஏற்பாடு செய்துகொள்ளும் புலவர்கள் பலரை இன்று நான் பார்க்கிறேன். செட்டி நாட்டரசர் பாராட்டு விழா நடத்தியபோது, எனக்கு எதற்குப் பாராட்டு?" என்று அந்தப்பண முடிப்பை அங்கேயே சண்முகம் செட்டியாரிடம் தந்துவிட, முருகப்பாவும் அவரும் வெள்ளிப் பாத்திரங்களை வாங்கிக் கவிமணி வீட்டில் சேர்த்துவிட்டனர். ரசிகமணி, வையாபுரிப்பிள்ளை, டி.கே.சண்முகம், சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட நண்பர் வட்டம் கொண்டிருந்த கவிமணி, திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் அன்னையின் பெயரால் அறக்கட்டளை நிறுவினார்.
‘தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை
தினமும் கேட்பது என் செவிப்பெருமை’
என்றார் நாமக்கல்லார். ரசிகமணியின் மகன் மறைவுக்குக் கவிமணி இரங்கல்பா தந்தார். டி.கே.சியோ, இப்படிப்பட்ட கவிதை பெறுவதானால் எனக்கு இன்னும் ஒரு மகன் இருந்தாலும் இழக்கத் தயார்" என்று தழுதழுத்து அழுதாராம். நன்றி, நட்புணர்வு, காலம் தவறாமை, கடமை உயிர் எனல், மென் மனம், தன்மானம், பிறர் நலத்தைப் பாராட்டுவது இவை கவிமணியின் பண்புகள்.
‘கோவில் முழுதும் கண்டேன் - உயர்
கோபுரம் ஏறிக் கண்டேன்.
தேவாதி தேவனை நான் தேடியும் காண்கிலனே
தேரோடும் வீதி கண்டேன்
தெப்பக் குளமும் கண்டேன்
தேவாதி தேவனையான் தேடியும் காண்கிலனே’
என்கிறாள் ஒருத்தி.
‘உள்ளத்தில் உள்ளானடி - அதை நீ
உணர வேண்டுமடீ.
உள்ளத்தில் காண்பாய் எனில் கோயில்
உள்ளேயும் காண்பாயடி’
என்கிறாள் மற்றொருத்தி. கவிமணியின் அழகிய பாடலிது. உடம்பெல்லாம் எக்ஸிமர் என்ற சொரி
சிறங்கு வந்து வருத்தியபோதும் அவை, முத்து பவளம் முழுவயிரம், மாணிக்கம் என்று பன்னிரு கரங்கொண்டான் எனக்குத் தரம் கண்டு தந்த தனம்."
- என்று பாடியவர் கவிமணி. ‘பாட்டுக்கொரு புலவன் பாரதியடா’ என்ற பாடலை அறியாதார் யார்? தமிழிசை மேடையில் பாடாதார் யார்? உடல் நலிவுற்றபோதும் பக்தியால் பாடியபடி வாழ்ந்தார்.
‘ஐயா நீ அருள் செய்ய வேண்டும் - உன்றன்
அடியினை அன்றி வேறு ஒரு துணை அறியேன்’ என உருகினார்.
‘பாதார விந்தம் பணிந்தேன் கடைக்கண் நீ
பாவிக்க வேண்டும் அம்மா.
மாதா பிதாவும் நீயே
மந்திர குருவும் நீயே
ஆதாரம் எனக்கு வேறாரும் ஒருவருண்டோ?’ - என
அம்மையிடம் முறையிட்டார்.
‘மனம் ஒருமைப்பட்டு பூஜை செய்க, ஒன்றி இருந்து நினைமின்’ என்றெல்லாம் சொல்கிறோம்.
‘கண்ணுக்கினிய கண்டு - மனத்தைக்
காட்டில் அலையவிட்டு
பண்ணிடும் பூஜையாலே - தோழி
பயனொன்றும் இல்லையடி?’ என்றார் கவிமணி.
பறக்கும் குருவியும், பால் கறக்கும் பசுவும், ஈயும், எறும்பும், நாயும் நரியும் எல்லா உயிரும் என் நண்பர்கள் என்ற ஆன்ம நேயம் கொண்ட நல்லவர் கவிமணி.
‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும் அம்மா’
‘பாடுபடுபவர்கே இந்தப்
பாரிடம் சொந்தமய்யா!’
‘வாழும் உயிரினை வாங்கிவிடல் - இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும். ஆனால்
வீழும் உயிரினை எழுப்புதலோ - ஒரு
வேந்தன் நினைக்கினும் ஆகாதய்யா!’
இந்தப் பாடல்களைத் தமிழர் மறக்க முடியுமா? 1953ல் புத்தேரியில் சாய்வு நாற்காலியில் துவண்டு கன்னம் ஒட்டிப் படுத்திருந்த அவரிடம் தமிழிசைப் பள்ளி மாணவிகளான நாங்கள் எங்கள் ஆசிரியருடன் சென்று வணங்கி ஆசி பெற்றது மறக்க முடியாத காட்சி. அவரது பாடல்களைப் பாடினோம். முகம் மலர்ந்து ரசித்தார். தமிழையும், பக்தியையும் மறவாத கவிமணி, தமிழ்மணி, நன்மணி, சொல்மணி தந்த மானுடநேயமணி.

Comments