திருமுக்கூடல் கும்பமேளா

வட மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்துகொள்ள பலரும் ஆசைப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு அது சாத்தியப்படுவதில்லை. இதை மனதில் கொண்டே, மைசூர் மாவட்டம், டி.நரசிபுரா திருமலகூடலுவில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை காவிரி, கபினி மற்றும் கண்ணுக்குத் தெரியாத குப்திகாமினி ஆகிய ஸ்படிக குள தீர்த்தம் இணையும் மகா கும்பமேளா நடைபெறுகிறது. இதன் புனிதத்தை பிரயாகை, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி சங்கமத்துடன் ஒப்பிடுகின்றனர். இவ்வைபவம் இவ்வாண்டு பிப்ரவரி 20 முதல்
22 வரை நடைபெறுகிறது.
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ‘குஞ்சா லட்சுமி நரசிம்மர்’ என்ற திருநாமத்தோடு பெருமாள் அருள்பாலிக்கிறார். ‘குஞ்சா’ என்றால் குந்து மணி எனப்பொருள். பிற்காலத்தில் இவரே குந்துமணி லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். ஐந்து நிலை கோபுரம் கொண்ட இக்கோயில் திராவிட மற்றும் சாளுக்கியக் கட்டடக் கலையை பிரதிபலிப்பதாக உள்ளது. பிற்காலத்தில் இக்கோயிலை கிருஷ்ண தேவராயர் மற்றும் மைசூர் மன்னர்கள் புனர் நிர் மாணப் பணிகளைச் செய்து பெரிய அளவில் கட்டியுள்ளனர்.
கோயில் வாசலில் கம்பீர துவஜஸ்தம்பம்! உள்ளே, தமிழக பாணியில் விசாலமான முன்மண்டபம். அதைத் தாங்கும் தூண்களோ கடைந்தெடுத்து நிலை நிறுத்தியது போன்ற அழகுடன் காட்சி தருகிறது. கருவறையில் பூரண அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் ஜொலிக்கிறார். முன்னால் உற்ஸவ மூர்த்தி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், திருநாராயண சுவாமி எனும் திருநாமத்துடன் காட்சி தருகிறார். ஆண்டாளுக்கு தனி சன்னிதி உள்ளது. கோயிலின் உள்ளே பழங்காலக் கல்வெட்டுக்களைக் காணலாம்.
காசி செல்ல இயலாதவர்கள் இத்தல முக்கூடலில், கும்பமேளா சமயத்தில்ஸ்நானம் செய்தால் காசியை விட, ஒரு குந்துமணி பலன் கூடுதலாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஒரு நாள் துணி வெளுப்பவர் ஒருவரின் கனவில் தோன்றிய நரசிம்மர், நீ துணி துவைக்கும் கல்லின் அடியில் நான் உள்ளேன். என்னை கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்குவாயாக. இதற்கான செலவுத் தொகை அக்கல்லுக்கடியிலேயே உள்ளது" எனக் கூறி மறைந்தார். கல்லை அகற்றிப் பார்க்க, நரசிம்மர் கூறியபடியே சிலையும், தங்கக் காசுகளும் இருந்தன. உடனே பக்தர்கள் உதவியுடன் கோயில் கட்டி முடிக்கப்பட்டது.
இதனால் மகிழ்ந்த நரசிம்மர் அவரிடம், வேண்டும் வரம்கேள்" எனக் கூற அவர், எனக்கு காசி சென்று ஸ்நானம் செய்ய ஆசை" என்றார்.
நீ காசிக்குச் செல்ல வேண்டாம்! இந்த ஊரில் உள்ள முக்கூடலில் ஸ்நானம் செய்தாலே போதும்! காசியில் ஸ்நானம் செய்ததைவிட கூடுதலாக ஒரு குந்துமணி பலன் கிடைக்கும்" எனக் கூறி மறைந்தார். இதை உணர்த்தும் விதமாக, ஸ்ரீ லட் சுமி நரசிம்மரின் வலது கரத்தில் ஒரு குந்துமணியும் தராசும் உள்ளது. பூஜையின்போது சிலசமயம் ஸ்ரீலட் சுமி நரசிம்மரின் வலது கையின் இரு விரல்களுக்கு இடையே குந்து மணி மர இலைகளையும் தரிசிக்கலாம்.
கோயில் உருவாகக் காரணமாக இருந்த துணி வெளுப்பவருக்கும் அவரது மனைவிக்கும் இறைவன் மோட்சம் அளித்தாராம். கோயில் கதவருகே அவர்கள் இருவரும் பக்தர்களை வரவேற்கும் கோலத்தில்
சிலை வடிவில் காட்சி தருகின்றனர்.
பிப்ரவரி 22ம் தேதி, ஸ்நானம் செய்ய சிறந்த நாளாகக் குறிப்பிடப்பட்டு, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த கும்பமேளாவில் ஸ்நானம் செய்யகர் நாடகா, மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் பல பகுதி களிலிருந்தும் சாதுக்கள் வருகின்றனர். சாதுக்களின் ஊர்வலம் பிப்ரவரி 21ம் தேதி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
செல்லும் வழி: மைசூரிலிருந்து சுமார் 40 கி.மீ., தொலைவில் உள்ள நர்சிப்பூர்.
தரிசன நேரம்: காலை 9 மணி முதல் 12.30 வரை. மாலை 5.30 மணி முதல் 8.30 வரை.
தொடர்புக்கு: 08227 260509/094484 78838

 

Comments