சிவ சாயுஜ்ய விரதம்!

ஆதியும் அந்தமும் இல்லாத பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம் சிவ ராத்திரி. அர்ஜுனன் தவம் செய்து பாசுபதாஸ்திரத்தைப் பெற்றதும், கண்ணப்ப நாயனார் தமது கண்ணை ஈசனுக்குப் பொருத்தி முக்தி அடைந்ததும், பகீரதன் கடுந்தவம் இயற்றிக் கங்கையை பூமிக்குக் கொணர்ந்ததும், மார்கண்டேயனுக்காக யமனையே சிவ பெருமான் எதிர்த்ததும், பார்வதி தேவி அருந்தவம் இயற்றி
சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றதும் இப்புண்ணிய தினத்தில் நிகழ்ந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். மாசி மகம், தேய்பிறை சதுர்த்தசி செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் நாளில் நோற்கப்படும் சிவராத்திரி விரதம் மூன்றரைக் கோடி பலன் தரும் என்பர். அன்று சிவ லிங்கம், விபூதிப்பை, ருத்ராட்சம், பொற்காசு, பசு, பூமி ஆகியவற்றைத் தானம் செய்தால் நல்லது என்று கூறுவர். குருவிடமிருந்து சிவ தீட்சை பெற்று சிவ பூஜை தொடங்கவும் உகந்த நாள் சிவராத்திரி.
சிவராத்திரி விரதம் இருக்க முக்கிய நியமமே விழித்திருப்பதுதான். சிலர் சிவராத்திரியன்று இரவு மட்டும் விழித்திருந்து, மறுநாள் காலையிலேயே உறங்கி விடுவர். இது சரியான விரத முறை அல்ல. சிவராத்திரிக்கு முதல்நாள் மதியம் ஒருவேளை அன்னம் உட்கொள்வதுடன், சிவராத்திரியன்று உபவாசமாகவும் (உண்ணாமலும்), இரவில் உறங்காமலும் இருக்க
வேண்டும். சிவராத்திரி அன்று விடியும் முன்பு நான்கு மணிக்கு துயிலெழுந்து சரீர சுத்தி ஸ்நானம், சந்தியா வந்தனம் செய்து, பிறகு காலையிலேயே சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.
சிவராத்திரி விரதம் மேற்கொள்வதால் சிவ தரிசனமும், திருஷ்டியும், சகல பாவ நிவர்த்தியும், சகல துக்கம், தரித்திரம், சோகம், ரோகம் போன்ற சகல கஷ்ட நிவர்த்தியும், முடிவில் சிவ சாயுஜ்யம் என்ற முக்தியும் கிட்டும். விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின்,
ஓம் ஸ்ரீ பவாய நம:
ஓம் ஸ்ரீ சர்வாய நம:
ஓம் ஸ்ரீ ருத்ராய நம:
ஓம் ஸ்ரீ பசுபதயே நம:
ஓம் ஸ்ரீ உக்ரயே நம:
ஓம் ஸ்ரீ மகாதேவாய நம:
ஓம் ஸ்ரீ பீமாய நம:
ஓம் ஸ்ரீ ஈசாய நம:
எனும் எட்டு நாமாக்களையாவது ஓயாமல் ஜபித்தல் வேண்டும்.
எல்லா மனிதர்களுக்கும் இக்கட்டான சூழ் நிலை வருவதுண்டு. அந்நேரத்தில் நம்மால் சாப்பிடவோ, தூங்கவோ முடியாமல் போகலாம். இதுபோன்ற விரதப் பயிற்சிகள் அந்நேரத்தில் கை கொடுக்கும். அதுமட்டுமல்ல, அறிவியல் ரீதியாக, விரதம் இருப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் விழித் திருப்பதும் உடல் நலனுக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.

Comments