பன்மடங்கு பலம் தரும் ரதசப்தமி

லகுக்கு ஒளி தரக்கூடியவராகவும், கண் கண்ட தெய்வமாகவும் திகழ்பவர் சூரிய பகவான். சிவசூரியன் என்றும், சூரியநாராயணர் என்றும் நாம் போற்றி வணங்கும் சூரியபகவானுக்கு உகந்த தினம் ரத சப்தமி தினம் ஆகும். 

உத்தராயன காலத்தின் மிக புண்ணியமான தினம் இது. உத்தராயனத்தின் மகிமையைக் குறித்து `அக்னி தேவனின் ஆதிக்கத்தில், ஒளியில், நல்ல பகல் நேரத்தில், வளர்பிறை உள்ள இரு வாரங்களில், சூரியன் வடக்கு நோக்கிச் செல் லும் ஆறு மாதங்களில், பரப்பிரம்மனை அறிந்த வர்கள் இவ்வுலகை விட்டுச் சென்று, அந்தப் பரமனை அடைகின்றனர்’ என கீதையில் அருளியிருக்கிறார் பகவான் கிருஷ்ணர்.

அதனால்தான், தட்சிணாயன காலத்தில் குருக்ஷேத்திரப் போரில் சிகண்டியால் வீழ்த்தப் பட்ட பீஷ்மர், உத்தராயன காலத்தில் உடலைத் துறந்து இறைவனின் திருவடிகளை அடைய விரும்பினார். ஆனால், உத்தராயன காலம் வந்தும் அவருடைய உடலில் இருந்து உயிர் பிரியவில்லை. அதனால் வேதனையில் துடித்த பீஷ்மர், மகரிஷி வியாசரை தியானித்தார். உடனே பீஷ்மருக்கு காட்சி தந்தார் வியாச முனிவர். அவரிடம், தன் உடலைத் துறக்கமுடியாத நிலையைச் சொல்லி வருந்தினார் பீஷ்மர்.

துரியோதனனின் சபையில் பாஞ்சாலியின் துகில் உரியப்பட்ட அவலம் நிகழ்ந்தபோது, அதைத் தடுக்காத பாவம்தான் பீஷ்மரின் இந்த வேதனைக்குக் காரணம் என்று கூறிய வியாசர், தாம் கையோடு கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளால் அவருடைய உடலைப் போர்த்தி, ‘‘பீஷ்மரே, சூரியனின் பெயரால் அர்க்கபத்திரம் என்று சொல்லப்படும் இந்த எருக்கன் இலைகள், சூரியனின் கதிர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவை. இவை உம்முடைய உடலைப் புனிதப்படுத்தும். நீர் சூரியதேவனை தியானம் செய்து, முக்தி அடைவீராக!’’ என்றார். பீஷ்மரும் அப்படியே செய்து, மறுநாள் பீஷ்மாஷ்டமி அன்று இறைவனுடன் ஐக்கியமானார்.
அதர்ம கௌரவர்களுக்குத் துணை நின்ற பீஷ்மரின் பாவத்தைப் போக்கி, அவருக்கு முக்தி அளித்தது, ரத சப்தமி அன்று அவர் மேற்கொண்ட சூரிய வழிபாடுதான்.

தை- வளர்பிறை சப்தமி அன்று அனுஷ்டிக் கப்படும் இந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கன் இலைகளை தலையில் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். 

அப்படி தலையில் வைக்கும் இலையில் ஆண்கள் அட்சதையையும், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையையும் வைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கியவாறு ஸ்நானம் செய்யவேண்டும். இதனால், சூரியனின் கிரணங் கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, பிணிகளைப் போக்கி ஆரோக்கியம் தரும்.  ரத சப்தமி நாளில், ஆலயங்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார்.

ரதசப்தமி நாளில் நாம் சொல்லவேண்டிய ஸ்லோகம்:

‘ஓம் நமோ ஆதித்யாய: ஆயுள், ஆரோக்கியம், புத்திர் பலம் தேஹிமே சதா’.

அன்றைய தினம் வீட்டு வாசலை மெழுகி, தேர் வடிவத்தில் கோலம் போட்டு, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர், சூரிய பகவானின் ஸ்லோகங்களைப் பாராயணம் செய்து, இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படும்; செல்வ வளம் பெருகும். இந்நாளில் செய்யப்படும் தானங்கள் பல மடங்கு புண்ணியம் தரும். பெண்கள் சுமங்கலித்துவம் பெறுவர்.

Comments