ஆக்கிரமிப்பில் அழகுராஜ பெருமாள் ஆலயம்!

கோயில் சொத்துக்களும் நிலங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவது நாம் எல்லோரும் அறிந்த, வேதனைக்குரிய ஒரு விஷயம்தான். ஆனால், ஓர் ஆலயமே ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கும் அவலமும் இந்தப் புண்ணிய பூமியில் நடந்திருக்கிறது என்பதை அறிய வரும்போது, நமக்கு உண்டான அதிர்ச்சிக்கு அளவே இல்லை. கோயிலுக்கு உள்ளே தெய்வ சந்நிதிகள் இருப்பதற்குப் பதிலாக, மனிதர்கள் அந்த இடங்களைக் கையகப்படுத்தி, வீடு கட்டி வசிக்கும் அவலத்தை என்னவென்று சொல்வது! 
புராண பிரசித்தியும் வரலாற்றுப் பிரசித்தியும் பெற்ற திருவூறல் என்கிற தக்கோலம் திருத்தலத்தில்தான், இப்படி ஓர் அநியாயம் நடந்திருக்கிறது. ஏழு சிவாலயங்கள் அமைந்திருக்கும் காரணத்தால் 'சப்த சிவ க்ஷேத்திரம்’ என்று போற்றப்பெறும் தக்கோலம் திருத்தலத் தில் அமைந்திருக்கும் அழகுராஜ பெருமாள் ஆலயம்தான் சிலரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. நேரில் சென்று பார்த்தபோது, சக்தி விகடன் 'நாரதர் உலா' பகுதியிலும் இடம்பெறவேண்டிய ஆலயமாயிற்றே இது எனத் தோன்றவே, உடனடியாக நாரதரின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்றுவிட்டோம்!
ஒரு காலத்தில், இந்தக் கோயில் எழிலார்ந்த அழகுடன் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதை அதன் தோற்றத்தைப் பார்க்கும்போதே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இன்றைக்குச் சிதிலம் அடைந்த ராஜகோபுரத்தையும், அரைகுறையாகக் காட்சி தரும் மண்டபம் மற்றும் கருவறைகளையும் காணும்போது, நெஞ்சம் பதைக்கிறது. 'நமக்கெல்லாம் அருள்புரிவதற்காக பெருமாள் தானுகந்து கொண்ட திருக்கோயில் இப்படி ஆக்கிரமிப்புக்கு உள்ளானதற்குக் காரணம் என்ன என்று ஆராய்வதை விடவும், இனியாகிலும் அந்த ஆக்கிரமிப்புகளைச் சட்ட ரீதியாக அகற்றி, சிதிலம் அடைந் திருக்கும் ஆலயத்தைச் சீரமைக்க திருப்பணிகள் மேற்கொண்டு, விரைவில் அக்கோயில் கும்பாபிஷேகம் காண வழி செய்வதுதான் நமக்கான கடமையும், அழகுராஜ பெருமாளுக்கான நன்றிக்கடனும் ஆகும்!
கோயில் என்பது பொதுச்சொத்து. ஊர் மக்களின் நலனுக்காகவே அக்காலத்தில் மன்னர் பெருமக்கள் இதுபோன்ற பெரிய பெரிய கோயில்களை நிர்மாணித்து, அவற்றில் பூஜை புனஸ்காரங்களும், விழாக்களும் நடைபெற நிவந்தங்களை எழுதி வைத்தார்கள். இப்போது இதை உணர்ந்துகொண்ட தக்கோலம் ஊர்மக்கள், அழகுராஜ பெருமாள் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெருமாளுக்கு ஆலயத் திருப்பணிகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அழகுராஜ பெருமாள் இந்தத் தலத்தில் ஆலயம் கொண்ட புராண நிகழ்ச்சி என்ன?
திருவூறல் தல புராணம் என்ற புராணத்தில், நைமிசாரண்யத்தில் தவம் இயற்றிக்கொண்டிருந்த முனிவர்களுக்கு வியாசரின் சீடரான சூத முனிவர் கூறியதாக இடம் பெற் றிருக்கிறது அந்தப் புராண வரலாறு. அமிர்தம் வேண்டி பாற்கடல் கடைந்தபோது, ஆலகால விஷம் தோன்றியது. அதன் கடுமை அசுரர்களையும் தேவர்களையும் பாதித்ததோடு நிற்கவில்லை; மகாவிஷ்ணுவையும் பாதிக்கவே செய்தது. விஷத்தின் கடுமையால், விஷ்ணு மூர்த்தி யின் மேனி கருநிறமாக மாறிவிட்டது. பெருமாள் மீண்டும் பொன்மேனி பெறவேண்டும் என்பதற் காக, 'பொன்னார் மேனியனும் புலித்தோலை அரைக்கசைத்த’வனுமாகிய சிவபெருமானைப் பிரார்த்தித்து, திருவூறல் என்னும் இந்தத் தக்கோலம் திருத்தலத்தில் தவமும் பூஜைகளும் செய்து வரலானார். விஷ்ணுவின் தவத்தால் மகிழ்ந்த மகேஸ்வரன் அவருக்குக் காட்சி கொடுத்து, ''நாராயண மூர்த்தியே, உம்முடைய மேனி கருநிறம் அடைந்தது நம் இருவருடைய திருவுள்ளத்தின்படியே நிகழ்ந்ததாகும்.ஒதுக்கப்பட்ட திதிகளான அஷ்டமிக்கும் நவமிக் கும் உம்முடைய அவதாரமானது சிறப்பு சேர்த்ததுபோல், அனைவராலும் ஒதுக்கப்படும் நிறமான கருமை நிறமும் இனி உம்மால் ஏற்றம் பெறும். இந்தக் கருத்த நிறமே உமக்கு மேலான அழகினையும் தரும். கோடி மன்மதர்களின் அழகும் உம் ஒருவருடைய அழகுக்கு ஈடாகாது. நீர் இத்தலத்திலேயே அழகுராஜ பெருமாள் என்ற திருப்பெயருடன் மங்களலட்சுமி தாயாருடன் வீற்றிருந்து, பக்தர்களுக்கு சகல மங்கலங்களையும் அருள்வீராக!''  என்று கூறி அருளினார்.
ஸ்ரீஅழகுராஜ பெருமாள் இங்கு கோயில் கொண்ட வரலாறு இதுதான்.
எண்ணற்ற மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பெற்றதும், மானியங்கள் வழங்கப்பட்டது மான அழகுராஜ பெருமாள் கோயில் எப்போது சிதைந்தது, எப்படிச் சிதைந்தது என்பதெல்லாம் அந்தப் பெருமாளுக்குத்தான் வெளிச்சம்! ஆனால், ஆலயம் சிதையத் தொடங்கியபோதே அப்போதிருந்த மக்கள், சுதாரித்துக்கொண்டு ஆலயத்தைச் சீர்படுத்த திருப்பணிகள் செய்யாமல் விட்டதன் விளைவுதான், காலப்போக்கில் யாருமே கவனிப்பாரின்றி கோயிலே இன்றைக்கு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
அழகுராஜ பெருமாளின் திருவுள்ளப்படி இப்போது ஊர்மக்கள் இணைந்து ஒரு திருப்பணிக் கமிட்டி ஆரம்பித்து, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோயிலை மீட்டு, திருப்பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான புருஷோத்தமன் என்பவரைச் சந்தித்தோம்.
''எனக்குத் தெரிஞ்சு கோயில் பல வருஷமாவே இந்த நிலையிலதான் இருக்கு. யாருமே இது பற்றி அக்கறை எடுத்து, திருப்பணி செய்ய முன்வராத நிலையிலதான், கோயிலுக்கு உள்ளேயே சிலர் வீடுகள் கட்டிக் குடியேறும் அளவுக்குக்
கொண்டு வந்துவிட்டிருக்கு. கோயில் குளமும் கூட ஆக்கிரமிக்கப்பட்டிருக்கு. அழகுராஜ பெருமாள்,
தாயார் மூல விக்கிரஹங்களை யாரோ உடைச்சிட்டாங்க. ராமர் மற்றும் சீதை விக்கிரஹங்கள் மற்றும் உற்ஸவ விக்கிரஹங்களை சிவன் கோயில்லயும், ஆஞ்சநேயர் கோயில்லயுமா வெச்சிருக்கோம். இப்பத்தான் ஊர்மக்களோட ஒத்துழைப்புடன் ஒரு கமிட்டி அமைச்சிருக்கோம்.
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமத் அப்பன் பரகால ராமாநுஜர் எம்பார் ஜீயர் சுவாமிகள் இந்தக் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு, திருப்பணிகள் செய்வதற்கு உத்தரவு கொடுத்திருக்கார். ஸ்ரீமத் ராமாநுஜரின் 1000வது ஜயந்தி கொண்டாடும் இந்த நேரத்துல, எப்படியாவது இந்தக் கோயில் திருப்பணிகளை முடித்து, சம்ப்ரோக்ஷணம் செய்ய நினைச்சிருக்கோம். எங்களோட முயற்சிகள் நல்லபடியாக நிறைவேற அந்தப் பெருமாள்தான் அனுக்கிரகம் செய்யவேண்டும்'' என்றார்.
முதலில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும்; பின்னர் கோயில் திருப்பணி களைத் தொடங்கவேண்டும்; உடைக்கப்பட்ட மூல விக்கிரஹங்களுக்குப் பதிலாக புதிய விக்கிரஹங்கள் செய்யப்பட வேண்டும்; இன்னும் ராஜ கோபுரம், மண்டபம், கருவறைகள் கட்டுவது என ஏராளமான திருப்பணிகள், கமிட்டியினர் முன்பாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
அரசுத் தரப்பில் விரைவிலேயே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, உடனடியாக திருப்பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்பதுதான் ஊர் மக்களின் பிரார்த்தனை!
அவர்களின் பிரார்த்தனை வெகு சீக்கிரம் பலிக்கவேண்டும். அழகுராஜ பெருமாளின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு நிதியுதவி உள்ளிட்ட நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது நம்முடைய கடமையும் ஆகும். அப்படிச் செய்வ தால், அழகுராஜ பெருமாளின் அருளுடன், ஆயிர மாயிரம் பக்தர்களுக்குப் பெருமாளின் திருவருள் கிடைக்கச் செய்த புண்ணியமும் நமக்கும் நம் சந்ததியர்க்கும் கிடைக்கும் என்பது உறுதி.



திருத்தலக் குறிப்புகள்:
எங்கிருக்கிறது?: சென்னை பூவிருந்தவல்லி அரக்கோணம் சாலையில் அமைந்திருக்கிறது.
எப்படிச் செல்வது?: சென்னையில் இருந்து பேரம்பாக்கம் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன. பேரம்பாக்கத்தில் இறங்கி, ஆட்டோ அல்லது அரக்கோணம் செல்லும் பேருந்து மூலம் தக்கோலம் தலத்தை அடையலாம்.

Comments