வல்வினை போக்குவாய் வடிவேலா!

வேடுவன் நம்பிராஜன் தன் தோட்டத்தில் வள்ளிக்கிழங்கைத் தோண்டி எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு செடிக்கு அருகில் அழகான பெண் குழந்தையை கண்டு எடுத்து வளர்த்தான். அவ்வாறு அவன் வள்ளியைக் கண்டெடுத்தது தைப்பூச தினத்தில்!
முருகன் வேடனாக வந்து, வள்ளியின் மனத்தில் புகுந்தான். முருகன் - வள்ளி காதலைத் தெரிந்து கொண்ட நம்பிராஜன், வள்ளியை அடைத்து வைத்தான். இதனால் முருகன் வள்ளியைக் கவர்ந்து சென்றான். தனது சேனையுடன் முருகனிடம் மோதி தோற்றுப் போன நம்பிராஜனை மன்னித்து, வள்ளியை மணந்தார் முருகப்பெருமான். தைப்பூச நாள் ‘வள்ளி ஜயந்தி’யாகக் கொண்டாடப்படுவதில்லை; முருக னுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபடும் நாளாகவே கொண்டாடப்படுகிறது. சிக்கல் தலத்தில், சக்தி வேலை முருகனுக்கு பார்வதி தேவி வழங்கிய திருவிழா தைப்பூசத்தில் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.
சூரபத்மனை வதம் செய்ய முருகன் படை வீரர்களுடன் போரிடச் செல்லுமுன், தனது தாய் தந்தையரைக் கண்டு ஆசி பெறச் சென்றான். அப்போது பார் வதி, இந்த சக்தி வேலைக் கொண்டு சூரபத்மனை வென்று வாகை சூடி வா!" என்று ஆசி கூறி வேலை அளித்தாள். சிக்கலில் இந்தத் திருவிழா நாளில் ஸ்ரீமுருகப்பெருமானின் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக நிறைந்திருக்கும்.
கருணை மனம் படைத்தவன் முருகன். கூப்பிட்ட குரலுக்கு குழந்தையா ஓடி வந்து அருள்பவன். குழந்தைகளுக்கு குழந்தையானவன். இளைஞர்களுக்கு குமரன். வீரர்களுக்கு சேனாபதி. வேத மந்திரம் கற்ற வர்களுக்கு ஞான பண்டிதன். நல்ல தம்பதியர்களுக்கு வள்ளி மணாளன். பற்றற்ற ஞானிகளுக்கு அவன் ஆண்டி. பக்தர்களுக்கு அவன் வள்ளி தெய்வானை சகிதமாய் மயில்வாகனன். அவனே நம் வல்வினை களைப் போக்கும் வடிவேலன்.
ராமசுப்பு
முன்னாளில் பெண்கள் நோற்கும் பாவை நோன்பு மார்கழி பௌர்ணமியில் தொடங்கி தை மாதப் பௌர்ணமியில் முடிவதாகவே இருந்தது. தை மாதம் தொடங்குவதும் தனி விழாதான். ‘மார்கழித் திங்கள் மதிநிறை நன்னாள் வந்தது; நீராடப் போவோம் வாருங்கள்’என ஆண்டாள் சிறுமியரை அழைப்பது சிந்திக்கத்தக்கது. மார்கழி பௌர்ணமி தொடங்கி விரதம் இருந்த பெண்கள் பூசத்தில் விரதத்தை நிறைவு செய்கின்றனர். நெய் சேர்த்து சமைத்து பொங்கலிட்டுப் படைக்கின்றனர்.
ஞானசம்பந்தர், ‘மைபூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலை... நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்’ என்று சிறப்பிக்கின்றார். நோன்புக் காலத்தில் நெய், பால் உண்ணாமல் விரதம் காத்தவர்கள் பூச நாளில் நெய் கலந்து பொங்கலிட்டு உண்பதை இப்பாடல் குறிக்கிறது.
தைப்பூசத்துக்கு அடுத்த நாள் பூ நோன்பு. கொங்கு பகுதிகளில் பரவலாக இது கடைபிடிக்கப்படுகிறது. மார்கழி பாவை நோன்பில், கூந்தலில் மலர் வைத்துக் கொள்ளாதவர்கள், நோன்பு நிறைவு பெற்றதும் மலர்ச் சோலைகளுக்குச் சென்று மலர்களைச் சூடி மகிழ்வதே இதன் முக்கிய நிகழ்வு.
ஆற்றோரம், குளத்தோரங்களில் பொங்கலிட்டுப் படைத்து, பூக்கள் பறித்து விளையாடிக் களித்த நிலை மாறிவிட்டது. தைப்பூசத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா, தை முதல் தேதிக்கு இடம் மாறி விட்டது. தைப்பூச விழாவும் மக்கள் பொங்கி உண்டு, மலர்சூடி மகிழ்ந்த விழா எனும் நிலை மாறி கோயில் திருவிழா என்ற அளவில் நின்றுவிட்டது.
தைப்பூச ரிஷப வாகனக் காட்சி: சிவபெருமானின் ரிஷப வாகனம் ஆலயங்களில் காட்சிக்கென வெள்ளி யாலும் தங்கத்தாலும் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள் ளன. மிகப்பெரிய வெள்ளி வாகனம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ளது. இது தைப்பூச நாளில் மட்டுமே புறப்படும். இதைத் தூக்கிச்செல்ல முடியாது என்பதால் பெரிய வண்டியில் அமைத்துள்ள னர்.
பெருநகர் தைப்பூசப் பெருவிழா: பல ஊர்களில் இருக்கும் தெய்வங்களை ஒரே இடத்தில் எழுந்தருளச் செய்வது வழக்கம். திருநாங்கூர் பதினோரு கருட சேவை, குடந்தை பன்னிரண்டு கருடசேவை போன்றவை புகழ் பெற்றவை. இதுபோல் பதினெட்டு ஊர்களில் இருந்து சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி விழா காண்பதை, காஞ்சிபுரம் - வந்த வாசி சாலையில் சேயாற்றங்கரையில் உள்ள பெரு நகரில் காண்கிறோம். இங்கே பிரம்மதேவன் பூஜித்த பிரம்மபுரீசுவரர் ஆலயத்தில் தைப்பூசத்தை ஒட்டி பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச நாளில் சேயாற்றுக்கு எழுந்தருளி தீர்த்தம் அளிக்கிறார் பெருமான். இரவில் பதினெட்டு ஊர்களில் இருந்து ரிஷப வாகனத்தில் பெருமான்கள் எழுந்தருள்கின்றனர். இது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நடக்கும் அற்புதத் திருவிழா.
தைப்பூசமும் தெப்போற்சவமும்: ஆடியில் சிறிதாகத் தொடங்கும் மழைக்காலம் கார்த்திகையில் முடிந்து மார்கழியில் பனியும் ஓயும். தையில் இளங்குளிரும் இதமும் இருக்கும். ஆறுகளுக்கு அடுத்த படியாக தைப்பூச விழா குளங்களில் நிகழும். பெரிய தாக தெப்பம் கட்டி அதில் தெய்வங்களை அமர்த்தி தெப்போற்ஸவம் காண்கின்றனர். சென்னை மயிலாப் பூரில் நடைபெறும் தெப்போற்ஸவ விழா சிறப்பானது. முதல் நாள் கபாலீசுவரர், இரண்டாவது மூன்றா வது நாட்களில் முருகன் என தெப்பத்தில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர். முன்னாளில் அனைத்து ஆலயங்களிலுமே தைப்பூசத்தில் தெப்போற்ஸவம் நடந்ததாகக் கூறுகின்றனர்.
சிதம்பரத்தில் தைப்பூச விழா: சிவபெருமான் தனது நடனக் காட்சியைக் காட்டிய தினம் தைப்பூசமே. பெருமானின் நடனக் காட்சியைக் காண பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி ஆகிய மூவரும் சிதம்பரம் வந்து தவம் செய்தனர். தில்லைக்காடாக இருந்த அதன் நடுவில், ஆலமரத்தின் கீழ் இருந்த மூலட்டான லிங்கத்தை வழிபட்டனர். நடராசப்பெருமான் ஒரு தைப்பூச நாளில் அவர்களுக்குத் தனது நடனக் காட்சியை அளித்தார். அதன்பிறகே அங்கு இரண்ய வர்மனால் பொன்னால் நடராசருக்கு ஆலயம் அமைக் கப்பட்டது. இதையொட்டி ஐதீக விழா சிதம்பரத்தில் பத்து நாட்கள் நடைபெறும். இதில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி மூவரையும் சிற்ப விமானத்தில் தினமும் எழுந்தருளச் செய்து, தீபாராதனை செய்கின்றனர். பத்தாம் நாளான தைப்பூசத்தில் உச்சிகால பூசையில் அம்மூவரும் நடராசர் சபைக்கு முன் பாக எழுந்தருளி நின்று நடனக் காட்சியைக் கண்டு மகிழ்கின்றனர். தைப்பூச நாளில் நடராசரைத் தரிசிக்க வேண்டியது அவசியம்.

Comments