ராகு கேது -தோ௸ம் போக்குபவர்!

சென்னை, பூவிருந்தவல்லியை அடுத்துள்ள அரண்வாயலில் அமைந்துள்ளது மரகதாம்பிகை சமேத திருதாலீஸ்வரர் கோயில். சிவனார் தாண்டவம் புரிந்து கொண்டிருந்தார். காளியும் சளைக்கவில்லை. பூமி அதிர, காற்று செயல் மறக்க, கனல் தகிக்க இருவரும் சுழன்று சுழன்று போட்டி நடனம் ஆடினர். ஒரு கட்டத்தில் சிவனாரின் காதில் இருந்த குழை நழுவிக் கீழே விழ, அதை காலால் எடுத்து காதில் அணிந்தவாறே ஊர்த்துவ தாண்டவம் ஆடினார் ஈசன்.
திகைத்து நின்றாள் அன்னை. ஈசனுக்கு சமமாக தாண்டவமாடிய அம்பிகையால், ஈசனைப்போல் காலைத் தூக்கி தாண்டவம் புரிய, அவளது பெண்மை இடம் கொடுக்கவில்லை. சிவனார், காளி தேவி நிற்பதைக்கூடப் பார்க்காமல் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். நந்தியெம்பெருமான் வாத்தியங் களை உரக்க வாசித்தார். அப்போது சிவனாரின் கழுத்தில் இருந்த நாகம் தெறித்து விழுந்தது. இதனால் அதன் தலை வேறு உடல் வேறாகப் பிரிந்தது.
நாகத்தின் தலை விழுந்த இடம் தலைக்கன்சேரி எனவும், தோல் விழுந்த இடம் ஆற்றம்பாக்கம் எனவும், பெரும்பான்மையான உடல் பகுதி விழுந்த இடம் பேரம்பாக்கம் எனவும், வால் விழுந்த இடம் அரண்வாயல் என்றும் வழங்கப்பட்டது. நாகத்தின் உடற்கூறுகள் விழுந்த இடங்களில் எல்லாம் சுயம்புலிங்கங்கள் தோன்றின.
தாளபனை மரங்கள் சூழ்ந்த வனத்தில் வால் பகுதி விழுந்ததால் அங்கு தோன்றிய இறைவன் திருதாலீஸ்வரர் ஆனார். இவ்விறைவனை வணங்கி, அம்பாள் தன் காளி உரு நீங்கப்பெற்றதால் அன்னை மரகதாம்பிகையாக இத்தலத்தில் காட்சி தருகிறாள். இங்கே உள்ள ராகு-கேது சன்னிதி தனிச் சிறப்பு வாந்தது. ராகு-கேது தோஷ பரிகாரத் தலமாக விளங்கும் இத்தல இறைவனை பதஞ்சலி, ரோமச ரிஷி, அகஸ்தியர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
இறைவன் திருதாலீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அன்னை மரகதாம்பிகை தெற்கு நோக்கியும் தனி சன் னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அரண்வாயலில் இருந்த பல்லவர் கால பெருமாள் கோயில் முழுவதும் சிதிலமடைந்துவிட்டது. அங்கிருந்த அழகிய சுந்தர போகப் பெருமாள் தற்போது திருதாலீஸ்வரர் ஆலய உள் பிராகாரத்தில் காணப்படுகிறார்.ஸ்ரீதேவியுடன் கூடிய மிக எழிலான தோற்றம். இவருக்குப் பின்புறம் ஒரு சுரங்க பாதையின் வாயில் உள்ளது.
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட இவ்வாலயம் சோழ மன்னர்கள் காலத்தில் விஸ்தரிக்கப்பட்டது. இக்கோயிலில் கஜப்ருஷ்ட விமானத்தின் கீழ்ப்பகுதி வளைவாக இல்லாமல் சதுரமாக உள்ளது. விமானத்தின் முன் பகுதியில் முருகன். இது திருவேற்காட்டை சுற்றியுள்ள அனைத்து பழைய சிவாலயங்களிலும் காணப்படுகின்ற ஒரு அமைப்பு. விமானத்தின் தென் பகுதியில் வீணாதர தக்ஷிணாமூர்த்தி சிறப்பு.
சிதிலமடைந்திருந்த இக்கோயில், தற்போது பக்தர்களின் முயற்சியால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் கலைப் பொக்கிஷமாக விளங்கியமைக்கான சான்றுகள் இங்கே உள்ளன. நுழைவு வாயிலில் இருபுறமும் பல்லவர்களின் முத்திரையான பதினாறு பட்டை தூண்கள், கல்வெட்டுகள்.மிக அழகான விநாயகர் வாயிலில் வரவேற்கிறார். கோஷ்டத்தில் அமைந்துள்ள நர்த்தன கணபதி, தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்கை, என ஒவ்வொரு மூர்த்தத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. இக்கோயில் நந்தி, கழுத்தில் பல மாலைகளுடன் சோழர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. ராஜராஜனின் தமையனான ஆதித்த கரிகாலன் மற்றும் மகனான முதலாம் ராஜேந்திரனின் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன.
கோயிலின் அருகே இவ்வூர் காவல் தெவமான செல்லியம்மன் ஆலயம் உள்ளது. இது, திருவாலங் காட்டில் ஈசனுடன் சரிக்குச் சரியாக தாண்டவமாடிய காளியின் கோலம் என்கிறார்கள். அம்பிகை, கைகளில் கேடயம், பாசம், அங்குசம், சூலம், கபாலம் போன்றவற்றைத் தாங்கி, எரியும் சுடர்களை கிரீடமாக அணிந்து, கபால மாலை தரித்து, ஒரு காலை அசுரன் மேல் வைத்து புன்னகையுடன் நிற்கிறாள்.
சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட பல்லவர் கால அரண்வாயல் திருதாலீஸ்வரர் ஆலயம் இன்று புதுப் பொலிவு பெற பக்தர்களின் ஆதரவு அதிகம் தேவை.
செல்லும் வழி: சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 9 வரை. மாலை 5 மணி முதல் 7 வரை.

 

Comments