அஷ்ட ஐஸ்வரியங்கள் அருளும் திண்டுக்கல் சாஸ்தா !

திண்டுக்கல் பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில். 45 வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலில் சின்முத்திரை காட்டி, அழகுறக் காட்சி தரும் ஐயப்பனின் திருவுருவம், ஒரே கல்லினால் ஆனதாம்.
இந்தக் கோயிலில் ஐயப்பனுடன் விநாயகரும், மஞ்சள்மாதாவும் காட்சி தருகின்றனர்.
சபரிமலையைப் போன்றே காலை நடைதிறப்பு, கணபதி ஹோமம், நிர்மால்ய தரிசனம், மூன்று கால பூஜை, ஹரிவராசனம், நடை அடைப்பு என்று இங்கேயும் நடைபெறுகிறது.
ஐயப்பனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பிரசாதங்கள் கூட, சபரிமலையில் சமர்ப் பிக்கப்படுவது போன்றே இங்கேயும் ஐயப்பனுக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன.
இந்தக் கோயிலின் வழிபாடு களும் பிரார்த்தனைகளும் மகத்துவமானவை.
சனிக்கிழமை தரிசனம்
பதினோரு சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து, தேங்காய் உடைத்து வழிபட்டால் திருமணத் தடை விலகி திருமணம் நடைபெறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
மணி வழிபாடு
கோயிலில் மணி கட்டி வேண்டிக் கொள்வதும் உண்டு. அப்படிச் செய்தால் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுமாம்.
தோஷங்கள் நீங்க...
தோஷங்கள் தீர்ந்து, வாழ்வில் நலம்பெறும் பொருட்டு, சந்தனத்தாலும் விபூதியாலும் ஹரிஹர புத்திரனுக்கு அபிஷேகம் செய்து வழிபடு கிறார்கள். இந்த அபிஷேகத்தை மதிய வேளையில் செய்வது விசேஷம் என்கிறார்கள்.
அஷ்டாபிஷேகம்
பால், நெய், அரிசி மாவு, திருமஞ்சனப் பொடி, தேன், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற அஷ்ட திரவியங்களைக் கொண்டு ஐயப்பனுக்குச் செய்யப்படும் அஷ்டாபிஷேகம் சகல சௌபாக்கியங்களையும் அருள்வதாக ஐதீகம். சபரிமலைக்குச் செல்ல முடியாத வயதான பக்தர்கள், இருமுடியைக் கட்டிக் கொண்டு, இந்தக் கோயிலுக்கு வந்து ஐயப்பனை தரிசித்து வணங்கி வரம் பெற்றுச் செல்கிறார்கள்.
கோயில் திறக்கும் நேரம்: காலை: 6 மணி முதல் 12 மணி வரை; மாலை: 5.30 மணி முதல் 9.15 மணி வரை.

Comments