வீடு தேடி வரும் காயத்ரீ!

'மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜபிக்கவேண்டாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால், மனம் செம்மை பெற மந்திரங்கள் தேவை. எத்தனை மந்திரங்கள் இருந்தாலும் காயத்ரீ மந்திரத்தை விடவும் சிறந்த மந்திரம் எதுவும் இல்லை. அதனால்தான் பகவான்ஸ்ரீகிருஷ்ணர் கீதையில், 'மந்த்ரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்’ என்கிறார். தன்னுடைய தவப் பயனாக காயத்ரீ தேவியின் தரிசனமும், காயத்ரீ மந்திர உபதேசமும் பெற்ற மகரிஷி விசுவாமித்திரர், உலகத்தின் நன்மைக்காக காயத்ரீ மந்திரத்தை நமக்கு அருளினார். வேதங்கள் அனைத்தின் மூலாதாரமாகத் திகழ்கிறது காயத்ரீ மந்திரம்.
இதன் மகிமைகளை அனைவரும் புரிந்துகொண்டு நன்மை பெற வேண்டும் என்பதையே தன்னுடைய கடமையாகக் கொண்டு, 'காயத்ரீ அகண்ட ஜப யக்ஞம்’ என்ற பெயரில், விரும்பும் அன்பர்களின் இல்லங்களிலோ அல்லது பொது இடங்களிலோ நிகழ்த்தி வருகிறார் சென்னை ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வெ.பாலசுப்ரமணிய சர்மா.
'எப்படி உங்களுக்கு இப்படி ஓர் உன்னதமான பணியில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது?’ என்ற கேள்வியுடன் அவரை நேரில் சந்தித்தோம்.
''நான் படிக்கும் காலத்தில், பெற்றோரின் கட்டாயத்தின் காரணமாக தினமும் 1000 முறை காயத்ரீ ஜபம் செய்யத் தொடங்கிய நான், நாளடைவில் அதன் வீர்யத்தையும் அளவற்ற ஆற்றலையும் புரிந்துகொண்டேன்.பின்னர், எனக்காக மட்டுமல்லாமல், உலக நன்மைக்காகவும் தினமும் ஜபம் செய்யத் தொடங்கினேன். இதைக் கேள்விப்பட்ட சில அன்பர்கள் விரும்பிக் கேட்டுக்கொண்டதால், அவர்களுடைய வீடுகளுக்கும் சென்று காயத்ரீ பாராயணம் செய்து வந்தேன். சிலர் தாங்களும்  இந்தக் காயத்ரீ பாராயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கவே, 2010ம் ஆண்டு 'காயத்ரீ சேவா சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். இப்போது ஏழு அன்பர்களுடன் செயல்பட்டு வருகிறோம்.
எல்லோரையும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்ல வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். இது உலகம் அனைத்துக்கும் பொதுவான மந்திரம். எந்த ஒரு பேதமும் இல்லாமல் அனைவருமே சொல்லவேண்டிய அதி அற்புத மந்திரம் இது. அதற்கான விழிப்பு உணர்வை மக்களிடன் ஏற்படுத்தும் முயற்சியைத்தான் நாங்கள் இப்போது மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.
''இதற்கென்று குறிப்பிட்ட நெறிமுறைகள் இருக்கிறதா?''
''நிச்சயமாக இருக்கிறது. வீடுதோறும் சென்று காயத்ரீ மந்திரத்தைப் பாராயணம் செய்யும்போது குறைந்தபட்சம் 60 ஆயிரம் முறையாவது பாராயணம் செய்ய வேண்டும்.
காயத்ரீ ஜபத்தைப் பொறுத்தவரை, காயத்ரீ மந்திரத்தில் 24 அட்சரங்கள் உள்ளன என்றால், ஒவ்வொரு அட்சரத்துக்கும் ஒரு லட்சம் என்ற கணக்கில் 24 லட்சம் முறை ஜபிக்கவேண்டும்.       அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம் செய்ய வேண்டும். அப்போது, 2 லட்சத்து 40 ஆயிரம் முறை ஜபம் செய்ததாக ஆகும்.
இப்படிச் சில நெறிமுறைகள் இருக்கின்றன. நிறைவில் சிலருக்கு அன்னதானம், சுமங்கலி களுக்குப் புடைவை மற்றும் மங்களப் பொருட்கள் கொடுத்து, அவர்களை நமஸ்கரித் தால், கூடுதலான பலன் கிடைக்கும்.''
''இதுவரை எத்தனை முறை காயத்ரீ ஜபம் செய்திருக்கிறீர்கள்?''
''இதுவரை தனியாகவும் மற்றவர்களுடன் சேர்ந்தும் 11 லட்சம் முறை காயத்ரீ ஜபம் செய்திருக்கிறேன். குறைந்தபட்சம் ஒரு கோடி காயத்ரீ ஜபம் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இந்த மந்திரத்தை ஜபிக்கும்போது அதிக ஆற்றல் உள்ள புனித அதிர்வலைகள் ஏற்படுகின்றன. அதனால், சுமார் 1600 அடி சுற்றளவில் உள்ள அனைத்தும் பரிசுத்தம் அடைகின்றன.
காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும்போது, ஐந்து இடங்களில் மூச்சு விட்டுச் சொல்லவேண்டும். அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும்.
ஓம்
பூர் புவஸ்ஸுவ:
தத்ஸ விதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோன: ப்ர சோத யாத்
'எனது மேலான அறிவைத் தூண்டக்கூடிய சக்தி எதுவோ, அதை நான் தியானிக்கிறேன்’ என்பதுதான் இதன் பொருள்.
காயத்ரீ மந்திரத்தை இப்படித் தொடர்ந்து பாராயணம் செய்வதால், தீராத நோய்கள் தீரும்; ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இளைஞர்களுக்கு நினைவாற்றலும், புரிந்துகொள்ளக்கூடிய சக்தியும் அதிகரித்து வெற்றிக்கு வழி வகுக்கும்; தீய பழக்கங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்;  அலைபாயும் மனம் அமைதியடைந்து மன நிம்மதியும், சந்தோஷமும் அதிகரிக்கும்; நமது நல்ல எண்ணங்கள் யாவும் நிறைவேறும்; அச்சமின்றி வாழ வழி பிறக்கும்; இழந்ததை மீண்டும் பெற காயத்ரீ மந்திரமே சிறந்தது என காயத்ரீயின் மகிமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
அனுதினமும் காலை, நண்பகல், மாலை  என மூன்று சந்தியா காலங்களில் காயத்ரீ ஜபம் செய்வது சிறப்பு. முக்கியமாக, ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் அமாவாசைதோறும் காயத்ரீ மந்திரம் சொல்லும்போது, நல்ல பலன் கிடைக்கும்.
நான்கு பெண் பிள்ளைகளோடு தந்தையார் ஒருவர் என்னிடம் வந்து, தனது குறைகளைச் சொல்லி வருத்தப்பட்டார். காயத்ரீ அகண்ட ஜபத்தில் அவரைக் கலந்துகொள்ளச் சொன்னேன். அவரும், அவரது மகள்களும் காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை 12 மணி நேரமும் இதில் கலந்து கொண்டு ஜபம் செய்தார்கள். சில நாட்களிலேயே மூத்த பெண்ணுக்கு நல்ல வரன் அமைந்து, திருமணம் நடைபெற்று, வெளிநாட்டில் குடியேறிவிட்டார். அவர் பின்பு தனது தங்கைகளுக்கும் விமரிசையாகத் திருமணம் செய்து வைத்துவிட்டார். இதைவிட  அந்தத் தந்தையாருக்கு வேறு என்ன வேண்டும்!
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண் டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கிறோம்' என நெகிழ்ச்சியுடன் சொன்னார் பாலசுப்ரமணிய சர்மா. இறைப்பணியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, காயத்ரீ மந்திரத்தின் மகத்துவத்தை அனைவரும் அறியும்படியும், அதன் பலன்களை அனைவரும் அடைந்து இன்புறும்படியும் செய்து வரும் பாலசுப்ரமணிய சர்மாவின் ஆன்மிகப் பணி மிகவும் போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரியது என்பதில் சந்தேகமே இல்லை

Comments