பாலாடை நாயகி!

சென்னை திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம் பேட்டை பகுதியில் (ஐஸ் ஹவுஸ் அருகில்) அமைந்திருக்கிறது சின்ன மலையனூர் ஸ்ரீபாலாடை அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்.
ஐந்து தலைமுறைக்கு முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் வசித்த கிருஷ்ணப்ப நாட்டார் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருநாள் அவருடைய கனவில் தோன்றிய அம்மன், அவர் வசிக்கும் பகுதியிலேயே, தான் கோயில் கொள்ளப் போவதாக அருளினாள். இதையடுத்து, மேல்மலையனூருக்குச் சென்ற கிருஷ்ணப்பர், அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் உள்ள புற்றில் இருந்து மண் எடுத்து வந்து அம்மன் சிலை வடித்து, குடிசை அமைத்து அதில் எழுந்தருளச் செய்தார். அபிஷேகமின்றி பூஜைகள் செய்து வழிபடவும் தொடங்கினார்.
பின்னாளில் இந்த அம்மனுக்கு குழந்தைகள் பலரும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தார்களாம். பூஜையினால் குளிர்ந்த அம்மனுக்கு, குழந்தைகள் மீது அதீத பிரியம் ஏற்பட்டது போலும். தனது சாந்நித்தியம் உணர்ந்து, குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களின் வேண்டுதலை சடுதியில் நிறைவேற்றினாள். அவளின் சாந்நித்தியம் உணர்ந்த பக்தர்கள்... திருமணத் தடை, மாங்கல்ய தோஷம், தீராத நோய்கள் முதலான குறைகள் நீங்க வேண்டியும் அம்மனைத் தேடிவந்து சரண் அடையத் துவங்கினார்கள். அன்றிலிருந்து இன்று வரையிலும் பக்தர்களின் வாழ்வில் வளம் பொங்கச் செய்யும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள் இந்த பாலாடை நாயகி. மேல்மலையனூர் சென்று அருள்மிகு அங்காள பரமேஸ்வரியை வழிபட முடியாத பக்தர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பாலாடை அணிவித்து வழிபடுகின்றனர். இங்கு மாசித் திருவிழா வெகு விசேஷம். இக்கோயிலின் கும்பாபிஷேகம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றபோது, காஞ்சி மகாபெரியவரால் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். தற்போது, புதிதாக சொர்ணத்தில் ஸ்ரீசக்ர யந்திரம் மற்றும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி மூல யந்திரம் செய்து, அவற்றை 51 சக்தி பீடங்களுக்கு கொண்டு சென்று பூஜித்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இத்தகு பெருமைகள் கொண்ட இந்தக் கோயிலில் கடந்த 22.11.15 அன்று மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடை பெற்றது. கும்பாபிஷேகம் நடந்து ஒருமண்டல காலத்துக்குள் அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். இந்த புண்ணிய காலத்தில் நீங்களும் பாலாடை ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்று அவளை வழிபட்டு வரம் பெற்று வாருங்கள்.

Comments