சுருளி மலையில் சுவாமி ஐயப்பன்

தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சுருளி மலை என்னும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அருள்புரிகிறார் சுவாமி ஐயப்பன்.
திருத்தல வரலாறு:
சிலப்பதிகாரத்தில் 'தென் கயிலாயம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் சுருளி தீர்த்தம் பகுதி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் தவம் புரிந்த புனிதத் தலமாகும். இந்தத் தலத்தைப் பற்றிப் பலருக்கும் தெரியாமல் இருந்தது.
திருச்சியைச் சேர்ந்த சிவஸ்ரீகணபதி சுப்ரமணியம் என்ற பெரியவர் காசிக்கு யாத்திரை சென்று திரும்பும் வழியில், ஆந்திர மாநிலம் பெர்காம்பூ ரில் இருந்த சிதானந்த ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கி இருந்தார். அப்போது அங்குள்ளவர்கள் சுருளி மலையின் மகிமைகளைப் பற்றி அவரிடம் கூறினர். உடனே சிவஸ்ரீகணபதி சுப்ரமணியம், சுருளி மலைக்குச் செல்ல விரும்பினார்.
முற்காலத்தில், பந்தளராஜாவின் வம்சத்தினர் சுருளி மலையில் உள்ள சுருளி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, கம்பத்தில் உள்ள கம்பராயப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகே, சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம் செய்த தகவலையும்  தெரிந்து கொண்டார் அவர். அக்காலத்தில் கரடுமுரடாக அமைந்திருந்த வனப்பகுதி வழியாக சபரிமலைக்குச் செல்வது மிகவும் கடினமாக இருந்தது. அதனால், 1929ம் ஆண்டு சுருளி மலைக்குச் சென்ற சிவஸ்ரீகணபதி சுப்ர மணியம்,  தவபூமியான சுருளி மலையில் சபரிமலை போலவே ஆகம விதிப்படி ஓர் ஆலயத்தை ஏற்படுத்த நினைத்தார்.
எனவே, தன் நண்பரின் மகனான மாணிக் கராஜ சாஸ்திரிகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனது  யாத்திரையைத் தொடர்ந்தார்.
மாணிக்கராஜ சாஸ்திரி களாலும் அவருடைய காலத்துக்குள் அந்தத் திருப்பணியை முடிக்க முடியவில்லை. அவருக்குப் பின் வந்தவர் களின் தொடர் முயற்சிகளின் காரணமாக, 1971ம் ஆண்டு சபரிமலை நம்பூதிரிகளால் தேவ பிரச்னம் பார்க்கப்பட்டு, பதினெட்டு படிகளுடன் கூடிய கோயில் நிர்மாணிக்கப்பட்டது.
தென் கயிலாயம் என்று சிறப்பிக்கப்பெற்ற சுருளி மலையில், ஐயப்பனின் சந்நிதிக்கு அருகிலேயே தென் கயிலாய மூர்த்தியின் சிலையையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.
நாக தோஷம் விலகும்...
மிக அற்புதமாக அமைந் திருக்கிறது ஆலயம்.கிழக்கு திசை நோக்கி அருள் பாலிக்கும் ஐயப்பன் ஆலயத்தில், சந்நிதியின் காவலர்களாக வலப்புறம் கடுத்த சாமியும், இடப்புறம் கருப்பண்ண சாமியும் தேவியருடன் காட்சி தருகின்றனர். ராகு கேதுவுடன் சுக்ரனும் இந்தக் கோயிலில் அருள்புரிகின்றார். இதனால், சர்ப்ப தோஷங்களால் பாதிக்கப்படும் அன்பர்கள் இங்கு வந்து ஐயப்பனை வழிபட்டால், தோஷங்கள் விலகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள். கன்னிமூல கணபதிக்கும் பால முருகனுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன.
தினமும் காலை மாலை என இரண்டு கால பூஜை நடைபெறும் இந்தக் கோயிலில், கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மூன்று மாதங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
நடை திறந்திருக்கும் நேரம்:
அனைத்து நாட்களிலும்   காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறந்திருக்கும்.

Comments