மும்முடி விநாயகர்

சேலம் - மேட்டூர் சாலையில் தாரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள ஒரு சன்னிதியில் மூன்று விநாயகர்கள் ஒரே பீடத்தில் அருள்பாலிப்பதைக் காணலாம். ‘மும்முடி விநாயகர்’ சன்னிதி என அழைக்கப்படும் இம்மூன்று விநாயகர்கள் முறையே, இம்முடிகெட்டிமுதலி, கெட்டிமுதலி, வணங்காமுடிகெட்டிமுதலி ஆகிய மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள்.
யாகசாலை மண்ணே பிரசாதம்!
வாழப்பாடிக்கு அருகில் பேளூரில் உள்ளது தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இது வசிஷ்ட மாமுனிவர் வேள்வி செய்த தலம். இங்கே மா, பலா, இலுப்பை ஆகிய மூன்றும் தல விருட்சங்களாக உள்ளன. கோயில் தூண்களில் காணப்படும் கலைநயம் மிக்க சிற்பங்கள், ஒரே கல்லிலான குதிரை வாகனம் மற்றும் யாளியின் வாயில் உருளும் கல் பந்து ஆகியவை இத்தலத்தின் சிறப்பு. வசிஷ்டரின் யாகசாலை பூமியில் இருந்து எடுத்த மண்ணே இங்கு திருநீறாகத் தரப்படுகிறது. இக்கோயிலிலுள்ள கல்யாண விநாயகருக்கு தேங்காய், பழம், கடலை, சர்க்கரை ஆகியவை நிவேதித்து, மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வணங்கினால் திருமணம் கைகூடும். தவிர, உத்தியோக உயர்வு, விவசாய செழிப்புக்காகவும் இத்தல இறைவனை வணங்குகிறார்கள்.

ஒரே பீடத்தில் இரு அம்மன்கள்
சேலம் மாவட்டம், கண்ணனூரில் உள்ளது மாரியம்மன் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் ஒரே பீடத்தில் வலதுபுறத்தில் மாரியம்மனும், இடதுபுறத்தில் காளியம்மனும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அம்பாள் முன்னிலையில் தொட்டில் கட்டி, இங்குள்ள சஞ்சீவி தீர்த்தத்தைத் தெளித்து, அருகிலிருக்கும் தொட்டிலை ஆட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல், பேச்சுக் குறைபாடு உடையவர்கள் அம்பாளுக்கு மணிகட்டி, மாவிளக்கு எடுத்தால் நிவர்த்தியாகும் என்றும் கூறப்படுகிறது.
-   
அஷ்ட லட்சுமி கோயில்!
வாழப்பாடிக்கு அருகில் கரடிப்பட்டியில் அமைந்துள்ளது லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள அஷ்ட லட்சுமிகளின் பளிங்குச் சிலைகள் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டவை. இச்சிலைகள் செவ்வக வடிவிலான மகாமண்டபத்தைச் சுற்றிலும் தனித் தனி சன்னிதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு லட்சுமியும் அவரவர்க்குரிய திக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். மூலவர் லட்சுமியை நாராயணர் தமது மடியில் அமர்த்தியிருக்கும் கோலம் கொள்ளை அழகு.

Comments