கோலு தேவதா

உத்தராகண்ட், நைனிடாலில் உள்ள நைனாதேவி கோயில் 64 சக்திபீடங்களில் ஒன்று. இங்கு அன்னை சக்தியின் ‘கண்’ விழுந்ததாக ஐதீகம். ஸ்கந்த புராணத்தில் நைனிடால் பற்றிய தகவல்கள் உண்டு. நைனிடாலில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில், அல்மோராவிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோலு தேவதா திருக்கோயில். இவர் உத்தராகண்ட் மக்களின் குலதெய்வமாகக் கருதப்படுகிறார்.
கோலுதேவதா சிவனின் அம்சம். இவருடைய சகோதரர் பைரவரின் அம்சம். கார்க்தேவி துர்கையின் அம்சம். ஆக, இந்த மூவரையும் இங்கு தரிசிக்கலாம்.
இவர் நீதி வழங்குவதில் நியாயமானவர். இவரிடம் வைக்கப்படும் கோரிக்கைகள் அதிகம். இதனால் இவரிடம் நீதி கேட்டு வைக்கப்படும் பிரார்த்தனைகள், கோரிக்கைகள் அதிகம். வழக்குகளில் நீதி கிடைக்காமல் தோல்வி அடைந்தவர்கள்கூட, இங்கு கோர்ட் ஸ்டாம்ப் பேப்பர்களை கட்டி வைத்துள்ளதைக் காணலாம்.
கோலு தேவதாவிடம் நல்ல தீர்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள், நன்றியாக மணி (Bell)களை கோயில் பிராகாரத்தில் கட்டுகிறார்கள். இந்த மணிகளில் பெரிய, நடுத்தரம், சிறியவை என பல ரகம் உண்டு. பலர், தங்கள் கோரிக்கைகளை விண்ணப்பங்களாக எழுதி கட்டி வைப்பதுமுண்டு.
கோலு தேவதாவுக்கு உத்தராகண்ட் முழுவதும், பல இடங்களில் கோயில் உண்டு. இதனால் இந்தப் பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த பயபக்தியுடன் இவரை வணங்குகின்றனர். இவருக்கு நெய், பால், தயிர் அபிஷேகங்கள் நடக்கின்றன.
இக்கோயிலில் மூன்று நாள், ஒன்பது நாட்கள் நடக்கும் பூஜைகள் மிகவும் விசேஷம். அல்வா, பூரி போன்றவை இவருக்கு வைக்கப்படும் பிரசாதங்களில் சில. திருவிழாக் காலங்களில் கருப்பு ஆடுக்கிடா பலியிடப்படுவது இன்றும் நடைபெறுகிறது.
இங்கு கார்த்திகை மாத பௌர்ணமி தினம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் கோலு தேவதாவுக்கு வெள்ளை உடைகள், வெள்ளை பகடி, வெள்ளை ஷவல்கள் ஆகியவற்றை வழங்குகின்றனர். இக்கோயிலில், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் கட்டியிருக்கும் ஆயிரக்கணக்கான மணிகளே இந்த கோலுதேவதாவின் சக்திக்கு சாட்சியாக விளங்குகிறது. இப்பெருமானை காலையில் சென்று தரிசிப்பதே சிறந்தது.
செல்லும் வழி:
தில்லியிலிருந்து ராம்பூர் - பிளாஸ்பூர் வழியாக அல்மோராவை அடையலாம். நைனிடாலிலிருந்தும் வரலாம்.

Comments