நரசிம்மருக்கு வீர சைவ வழிபாடு

ஆந்திர மாநிலம், கர்னூல் ஜில்லா, கௌதலம் மண்டலத்தில், உருகுந்தா திருத்தலத்தில் உள்ளது நரசிம்ம ஈரன்ன ஸ்வாமி ஆலயம். இக்கோயிலிலுள்ள அஸ்வத்த விருட்சத்தின் கீழ் அருள்பாலிக்கும் சுயம்பு நரசிம்ம ஸ்வாமிக்கு வீர சைவ முறைப்படி பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஹிரண்யர் என்று ஒரு மகான் இப்பகுதியில் வசித்து வந்தார். அவரை ஈரன்ன ஸ்வாமி என்று மக்கள் அழைத்தனர். பெரும்பாலும் இவர் இந்த கிராமத்தின் நடுவில் இருந்த அரச மரத்தின் கீழ்தான் எப்போதும் அமர்ந்திருப்பார். மேய்ச்சலுக்கு வரும் பசுக்கள் இவரை சூழ்ந்து கொள்ளும். அவற்றுடன் அவர் பேசுவார், தடவிக் கொடுப்பார். கிராம மக்களுக்கும் கால்நடைகளுக்கும் வரும் நோய்களை இவர் பச்சிலை மருந்து மற்றும் விபூதி கொடுத்து தீர்த்து வைத்தார். அவ்வூர் மக்கள் இவருக்குப் பழங்களும் உணவும் கொடுத்து உபசரித்தனர்.
திடீரென ஒருநாள் ஈரன்ன ஸ்வாமியைக் காணவில்லை. அவர் அமர்ந்திருந்த அரச மரத்தின் கீழ் ஒரு அழகிய லக்ஷ்மி நரசிம்மர் சிலை தோன்றியது. இதைக் கண்டு அதிசயப்பட்ட கிராம மக்கள், ஈரன்ன ஸ்வாமியே அங்கு லக்ஷ்மி நரசிம்மராகத் தோன்றியதாக எண்ணி, அந்தச் சிலையை அம்மரத்தின் கீழேயே பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினர். ஈரன்ன ஸ்வாமி அவ்வூர் காவல் தெய்வமாகக் கருதப்பட்டதால், அவருக்கு வீரபத்திர சுவாமியின் வடிவில் ஒரு சிலை செய்து அதை லக்ஷ்மி நரசிம்மர் அருகிலேயே நிறுவினர். இரண்டுக்கும் வீர சைவ முறைப்படி பூஜைகள் செய்யத் தொடங்கினர். ஈரன்ன ஸ்வாமியே லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் வீரபத்திரராக ஒரே நேரத்தில் தோன்றியதாகவும் சிலர் கூறுகின்றனர்.
ஈரன்ன ஸ்வாமி தங்கி இருந்த அஸ்வத்த விருட்சம் இன்றும் கர்ப்பக்கிரகத்தில் விளங்குகின்றது. இது ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் பழைமையானது என்று கூறுகின்றனர். ஒரு கிளை பட்டுப்போனால் உடனே இன்னொரு கிளை இம்மரத்தில் துளிர்ப்பதாகவும் சொல்கின்றனர். இம்மரத்தின் அடியிலேயே நரசிம்மரும் வீரபத்திரரும் அருள்பாலிப்பதால் கர்ப்பக்கிரகத்துக்கு மேற்கூரை இல்லை.
கோயிலுக்கு வெளியே எந்த திசையிலிருந்து பார்த்தாலும் இந்த அஸ்வத்த விருட்சத்தைக் காண முடியும். அனைவரும் இதனை ஈரன்ன ஸ்வாமியின் வடிவமாகவே எண்ணி வணங்குகின்றனர். அனைத்து பூஜைகளும், அபிஷேகங்களும் இவ்விருட்சத்துக்கே செய்யப்படுகின்றன. பல லட்சம் மக்கள் இக்கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் வந்து தங்கள் நோய் நீங்கி, மன நிம்மதி பெற்றுச் செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளும் மந்த்ராலயத்தில் இருக்கும்பொழுது தன் சீடர்களுடன் இங்கு வந்து லக்ஷ்மி நரசிம்மரையும் வீரபத்திரரையும் வணங்கி உள்ளார்.
திங்கட்கிழமை, வியாழக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் மக்கள் பெரும் திரளாக இக்கோயிலுக்கு வருகின்றனர். நாள்தோறும் புளியோதரை, தயிர் சாதம் அன்னதானமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்குவதற்காக விடுதிகளையும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
இங்கு ஈரன்ன ஸ்வாமி மறைந்து லக்ஷ்மி நரசிம்மர் தோன்றிய ஸ்ரவண (ஆவணி) மாதம் நடைபெறும் வழிபாடுகள் மிகச் சிறப்பு வாய்ந்தவை. ஸ்ரவண மாதம் மூன்றாம் திங்கள் அன்று இங்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்றுகூடி பொங்கல் வைக்கின்றனர். இந்நாளில் கண்டிப்பாக இவ்வூரில் கனமழை பெய்கிறது. கொட்டும் மழையில் ஈர விறகுகள் எரிந்து பொங்கல் தயாராவது இன்றளவும் நடந்து வரும் அதிசயம்.
மாதத்தின் கடைசி திங்கள் அன்று பல்லக்கு சேவை நடைபெறுகிறது. லக்ஷ்மி நரசிம்மரும் வீரபத்திர சுவாமியும் துங்கபத்ரா நதிக்கரையில் எழுந்தருள, அங்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இம்மாதம் முழுவதும் பக்தர்கள் ஈரன்ன ஸ்வாமிக்கு விபூதி கட்டிகள் படைத்து பின் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர். இவ்விபூதியை அணிவதாலும் நீரில் கலந்து பருகுவதாலும் தீராத நோய்கள் தீரும் அதிசயம் கண்கூடு.
ஸ்ரவண மாதம் மட்டுமல்லாமல்; கார்த்திகை மாதம் முழுவதும் இங்கு ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சிவராத்திரி இரவு அஸ்வத்த விருட்சம், லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் வீரபத்திரருக்கு மகாருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. யுகாதி, தசரா, சங்கராந்தி போன்றவை இங்கு விசேஷ தினங்கள்.
சுற்றுவட்டார கிராமங்களில் வசிப்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது உருகுந்தா க்ஷேத்ரத்துக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் அரிசி, பருப்பு, வெல்லம் ஆகியவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர். இப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயமானவுடன் முதலில் ஈரன்ன ஸ்வாமியைக் கண்டு வணங்குகின்றனர். பின்பு திருமணம் முடிந்தவுடன் தம்பதி சமேதராக வந்து வழிபாடுகள் செய்த பிறகே தங்கள் இல்லங்களுக்குச் செல்கின்றனர். குழந்தை பிறந்ததும் முதல் முடி காணிக்கை இங்கு வழங்கப்படுகின்றது.
செல்லும் வழி:
சென்னையிலிருந்து மும்பை செல்லும் அனைத்து ரயில்களும் குப்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இங்கிருந்து 12 கி.மீ.தொலைவில் கோயில். பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து 330 கி.மீ., மந்த்ராலயத்துக்கு வரும் பக்தர்கள், ஜீப் மூலம் இவ்வாலயத்துக்கு வரலாம்.
தரிசன நேரம்: காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.
தொடர்புக்கு: 0 9491000738 / 0 9966390671

 

Comments