அஷ்டதிக்கு காவலர்

நன்றியுணர்வுக்கும், விசுவாசத்துக்கும் அடையாளமாக வாழ்ந்து மறைகின்ற விலங்கு நாய். அனைத் துண்ணி. பாலூட்டி வகையைச் சேர்ந்த இனம். மறைந்த உயிரினப் படிமத்திலிருந்து பெற்ற மரபணு (DNA)க்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் இந்த உயிரினம், சுமார் ஒண்ணரை லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனப்படுகிறது. நாய்கள் மனிதனின் நண்பன், தனக்கு உணவிடும் வீட்டின் காவலனாகக் கருதப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் மனிதர்களை விரும்பி, அண்டி வாழ்கிறது.
நாய்களுக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. ஞாளி, ஞமலி எனப்படுவன சங்ககாலத் தமிழ்த் திசைச் சொற்கள். அவற்றில் சில, குறிப்பிட்ட வகை நாய்களைக் குறிப்பிடக்கூடியவை. சிவிங்கி நாய் என்பது வேகமாக ஓடக்கூடிய, ஒல்லியாய், உயரமாய், கழுத்து நீண்ட உருவமைப்பைக் கொண்டது. உடலில் நிறைய முடி கொண்டது சடை நாய். காடுகளில் வேட்டைக்கு மிகவும் உகந்தது தோல் நாய்.
ஓரளவுக்கு அறிவுத் திறனும், நுட்பமான மோப்பத் திறனும் உடையவை நாய்கள். மிகக் குறைந்த அளவு டெசிபல் ஒலிகளையும், மிக அதிக அளவு டெசிபல் ஒலிகளையும் கேட்க வல்லவை. பொதுவாகவே, நாய்களுக்கு காணும் திறத்தில் உருவ வடிவங்கள் கருப்பு- வெள்ளையென இருநிறப் பார்வை மட்டும்தான் உண்டு எனப்படுகிறது. அதன் பார்வைத் திறன் குறித்தான இறுதி முடிவு ஆய்வுக்குரியது. மனிதனைவிட மோப்ப சக்தியில் பன்மடங்கு அதிக திறன் கொண்டது நாய்.
ஆதியில், காடுகளில் வாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரைக்குமாக மனிதனுக்குக் காவல் புரியும் விலங்காகவே இருந்து வருகிறது நாய். இது காவல் தெய்வமாகவும் போற்றப்படுவதுண்டு. மேலும், காவல் தெய்வமாக விளங்கும் பைரவரின் வாகனமாகவும் அமையப் பெற்றது. சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர் பைரவர். பொதுவாக, பைரவர் என்று சொன்னாலே, அவருடன் நாயின் உருவமும் நம் மனசுக்குள் தானாகவே வந்து நிற்கும். கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் நாயை, ‘பைரவர்’ என்றும் அழைப்பதுண்டு.
‘ராமன் எத்தனை ராமன்’ என்பதுபோல, ‘பைரவர் எத்தனை பைரவர்’ எனக் கேட்குமளவுக்கு, ஏராளமான பைரவர்களை நாம் வழிபடுகிறோம். மகா பைரவர் எட்டுத் திசைகளையும் காக்கும் பொருட்டு, அஷ்ட திக்கு பைரவர்களாகத் தோற்றம் கொண்டிருக்கிறார். அறுபத்து நான்கு வகை பணிகளைச் செய்திடும் பொருட்டு, அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார். இவைகள் தவிர, சுவர்ண பைரவர் போன்று சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.
அதிசந்துஷ்ட பைரவர், அந்தக பைரவர், அப்ரரூப பைரவர் எனத் தொடங்கி, அறுபத்து நான்கு பைரவர் பெயர்ப் பட்டியல் நீண்டு, ஸர்வவேத பைரவர் மற் றும் ஸ்வஸ்சந்த பைரவர் என நிறைவு பெறுகிறது. திசைக்கு ஒன்றென விளங்கும் பைரவர்கள், அஷ்ட பைரவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வாகனம் என்பது தனி சுவாரஸ்யம்.
அசிதாங்க பைரவர், அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர். இந்த பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோயிலில் அருள் செய்கிறார். அன்னப்பறவையினை வாகனமாகக் கொண்டவர். நவக்கிரகங்களில் குருவின் கிரக தோஷ நிவர்த்திக்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள். இதுபோல ருரு பைரவருக்கு ரிஷப வாகனம், சண்ட பைரவருக்கு மயில் வாகனம், குரோதன பைரவருக்குக் கருட வாகனம். உன்மத்த பைரவருக்கு குதிரை வாகனம், கபால பைரவருக்கு யானை வாகனம், பீஷண பைரவருக்கு சிம்ம வாகனம் என உண்டு. அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது பைரவர், சம்ஹார பைரவர். இவரது வாகனம் நாய்.
அஷ்ட பைரவர்களில் சம்ஹார பைரவர் தவிர, இதர ஏழு பைரவர்களுக்கும், அவரவர் சாந்நித்யம் மற்றும் தன்மை பொருட்டே வெவ்வேறு வாகனங்கள் அமையப்பெற்றுள்ளன. எது எப்படியாயினும் பைரவர் என்றாலே, நம் மனக்கண் முன்பு ‘நாய்’தான் தோன்றுகிறது. சின்னசேலம் அருகே ஆறகளூரில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. அந்தச் சுற்று வட்டாரத்தில் ஆறகளூர் பைரவர் கோயில் மிகப் பிரபலம்.
செல்வத்துக்கு அதிபதியா னவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர். இவரது திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்குப் பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (செல்வம்) தந்தருளக்கூடியவர் என்பதால், கபாலத்துக்குப் பதிலாக அட்சய பாத்திரம் தாங்கியுள்ளார். இவரிடம் வேண்டிக்கொள்ள, வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சொர்ண ஆகர்ஷண பைரவர் இரண்டு நாய்களுடன் காட்சியளிப்பது தனிச் சிறப்பு.
கும்பகோணம் - மயிலாடு துறை சாலையில் க்ஷத்திரபாலபுரம் எனும் ஊரில், கால பைரவருக்கு தனிக் கோயில் உள்ளது. பொதுவாக, சிவாலயங்களில் பைரவர் சன்னிதி இருந்தாலும், பைரவருக்கான தனிக்கோயில் இது. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு கிராமத்தில் சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தனி சன்னிதி கொண்டுள்ளார். சிவன் கோயில்களில் மட்டுமே காணப்படும் பைரவர், இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது தனிச்சிறப்பு.
திருச்சி, பெரிய கடை வீதியில் காந்தி மார்க்கெட் அருகே தனிக் கோயில் கொண்டுள்ளார் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான கோயில். மூலவர் கிழக்கு நோக்கி எழுந் தருளியுள்ளார். புன்னகை தவழும் முகத்துடன் நின்ற திருக்கோலத்தில் நான்கடி உயரத்தில் காட்சி தருகிறார். பைரவரின் பின்புறம் அவரது வாகனமான நாய், தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறைக்கு எதிரே மகா மண்டபத்தில் பைரவரை நோக்கியவாறு ஒரு மேடையில் நாய் அமைந்துள்ளது.
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப் பூவை தவிர்த்து, மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றன. அபிஷேகப் பிரியரான சிவபெருமானின் அம்சம் பைரவர் என்பதால், சந்தனக் காப்பு மற்றும் அபிஷேகம் இவருக்கு மிகவும் உகந்தது. பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்தது.
இங்கு வீற்றிருக்கும் பைரவர், பக்தர்கள் வாழ்வில் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிபவர். திருமணத்தடை, தொழில், வியாபாரத் தடைகளைக் களைந்து பக்தர்களுக்கு அருள்புரிபவர். சனீஸ்வரனின் குரு பைரவர் என்பதால், சனிக்கிழமை பைரவ வழிபாடு சிறப்பானது. தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை வழிபாடு, அஷ்டமி வழிபாடு அன்று மிளகு தீபம் ஏற்றி வேண்டிக்கொள்வது உரிய பலன் தரவல்லது" என்கிறார் அர்ச்சகர் ‘அலங்காரம்’ கணேச குருக்கள்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 12 வரை. மாலை 5 மணி முதல் 9 வரை.
தொடர்புக்கு: 94431 16056
காக்கும் கடவுளாகவும் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார் பைரவர். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் ஆன பின்னர்தான், காசி விசுவநாதருக்கு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி, காசி விசுவநாதரை வழிபட்டு, இறுதியாக பைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை முழுமை பெறும் என்பது ஐதீகம். காசியில் பைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். காசியை ‘பைரவ கே்ஷத்திரம்‘ என்றும் குறிப்பிடுகின்றனர்.

Comments