நலம் அருளும் நம்பிராயர்

ஏகாதசி என்றாலேயே ஏற்றமிகு நன்னாள்தான். அதிலும் கார்த்திகை, மார்கழி வளர்பிறை ஏகாதசிகள் முக்கியத்துவம் பெற்றவை. கார்த்திகையில் வருவது ‘கைசிக ஏகாதசி.’ புராண காலத்தில் பாணர் குலத்தில் பிறந்த ஒருவர் கைசிகீ எனும் ராகத்தில் ஏகாதசியன்று எம்பெருமானைப் பாடி மோக்ஷமடைந்தார். அந்தப் பெருமை இதோ...
அடர்ந்த காடு. அந்த இருளிலும் அச்சமின்றி ஓர் உருவம் நடந்து சென்றது. கையில் சிறு வீணை. இடுப்பில் ஒரு துண்டு. கழுத்தில் துளசி மாலை. பாதத்தில் காலணி இல்லை. நெற்றியில் மட்டும் அந்த இரவிலும் பளீரிடும் திருமண்காப்பு.
‘நில்’... திடீரென இடியாக இறங்கியது சப்தம். நடுநிசியில் இத்தகையதொரு சப்தம் கேட்டால் எவராக இருந்தாலும் இதயத்தின் இயக்கத்தை இழந்திருப்பர். ஆனால் அந்த உருவமோ சிறிதும் பதறாமல் நின்றது.
யாரடா நீ? என்ன துணிச்சல். தைரியமாக இந்த வழியே போகிறாய்?"
ஐயா! பாணர் குலத்தில் பிறந்தவன் நான். திருக்குறுங்குடி நம்பியை தரிசிக்கச் செல்கிறேன். தாங்கள் எதற்கு வழிமறித்தீர்கள்?"
என்னையே எதிர்க் கேள்வி கேட்கிறாயா? என்ன தைரியம்? நானொரு பிரம்மரட்சஸ். வெகு நாள் பசியோடு இருந்தவனுக்கு இன்று நர மாமிசமே ஆகாரமாகக் கிடைத்துள்ளது. இப்போது உன்னை தின்னப் போகிறேன்"
பயங்கரமாகச் சிரித்தது அது. ஆனால், பாணனோ சலனம் ஏதுமின்றிப் பேசினான்.
ஐயா! தாங்கள் என்னைக் கொல்வதைக் குறித்து அஞ்சவில்லை. இன்று ஏகாதசி. நான் என் பெருமானை சேவிப்பது வழக்கம். என்னைப் போக அனுமதியுங்கள். தரிசனம் செய்து திரும்பி வந்ததும் தங்களுக்கு உணவாகிறேன்" என்றான்.
இடியாகச் சிரித்தது பிசாசு. என்னை ஏமாளி என்று நினைத்தாயா? எவராவது எமன் வாயில் சென்று மீண்டு மறுபடியும் அதைத் தேடி வருவரோ! யாரை ஏமாற்றுகிறாய்? எங்கேயும் போக முடியாது."
ஐயா! நான் விஷ்ணு பக்தன். ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒருபோதும் கொடுத்த வாக்கை மீற மாட்டார்கள். ஒருவேளை நான் சொன்னபடி திரும்பி வரவில்லை என்றால் அந்த எம்பெருமானுக்கு நான் அடியேன் அல்லன்" என்றான்.
வராக புராணத்தில் வரும் இக்கதையை வராகப் பெருமாள் பூதேவிக்குக் கூறுகிறார். இந்தப் பகுதிக்கு பராசர பட்டர் வெகு அழகான வியாக்யானம் செய்துள்ளார்.
நம்பாடுவானின் சபதம் கேட்ட பிசாசு, அவனைப் போக விட்டது. ஓடோடிச் சென்று நம்பியின் கோயில் வாசலில் நின்று சேவித்தான். தன் குலத்தை எண்ணி அவன் உள்ளே வராமல் இருந்தாலும், நம்பினோரைக் கைவிடாதவனன்றோ நம்பி. அப்பாடுவான் தன்னை சேவிக்க வசதியாக, மறைத்து நிற்கும் த்வஜஸ்தம் பத்தை விலகச் செய்தான். இன்றும் நம்பி சன்னிதியில் த்வஜஸ்தம்பம் விலகியிருப்பதைக் காணலாம். நம்பியின் கருணைக்கு இன்றும் அது சாட்சியாகிறது.
இவ்வாறு மனமுருக கைசிக ராகத்தில் பாடல்களை இரவு முழுதும் பாடிவிட்டு காலை வேகமாகத் தன் வாக்குறுதியை நிறைவேற்றப் புறப்பட்டான் அவன்.
சற்று தொலைவு சென்றதும், ஓர் அந்தண முதியவர் எதிர்ப்பட்டார். ஏனப்பா! எங்கு இவ்வளவு விரைவாகச் செல்கிறாய்?" என்று கேட்டார்.
பாணனும் நடந்தவற்றைத் தெரிவித்து, தான் பிசாசுக்கு உணவாகவே விரைந்து செல்வதாகக் கூறினான். நன்றாக இருக்கிறது. உனக்கென்ன பைத்தியமா! தப்பிப் பிழைத்த நீ மறுபடியும் எமனைத் தேடிச் செல்வாயா!" என்றார் முதியவர்.
ஆனால் பாணனோ, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் தான் விஷ்ணு பக்தன் ஆக முடியாது’ எனக் கூறி, பிசாசிடம் சென்றான்!
திரும்பி வந்தவனைக் கண்ட பிசாசு வியந்தது; திகைத்தது. அப்போது அதன் குரலில் அதிகாரம் மறைந்து கனிவு பிறந்தது. பணிவுடன் பேசியது.
சுவாமி! முற்பிறவியில் காசு, பணத்துக்கு ஆசை கொண்டு யாகங்களைச் செய்தேன். அது முற்றுப் பெறாமலேயே சூலை நோய் வந்து இறந்தேன். அதனால் பிசாசுப் பிறவி உண்டானது. தாங்களே என்னைக் கரையேற்ற வேண்டும். தாங்கள் நேற்றிரவு பெருமாளைக் குறித்துப் பாடிய கைசிக ராகத்தின் பலனில் பாதியைத் தாருங்கள்" என்றது.
ஆனால், நம்பாடுவான் உடன்படவில்லை. சரி! ஒரே ஒரு ச்லோகத்தின் பலனையாவது அளியுங்கள்" எனக் கேட்க, அவன் அதற்கு இசைந்தான். என்ன அதிசயம்! ஒரே நொடியில் பிசாசு மறைந்து அங்கு திவ்ய தேகத்துடன் தேவலோகம் சென்றது. நம்பாடுவானும் நற்கதி அடைந்தான்!
இவ்வாறு கைசிகீ ஏகாதசியன்று விரதமிருந்து த்வாதசியன்று என்னைத் தரிசிப்பவர்களுக்கு நான் எல்லா பலன்களையும் அளிக்கிறேன்" என்கிறார் வராகப் பெருமாள். இன்றளவும் இந்நிகழ்ச்சி திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் நாடக ரூபமாக நடிக்கப்படுகின்றது. நவம்பர் 22, 23 இங்கு மிகவும் விசேஷமானவை.
அது சரி... வழியில் வந்த அந்தணர் யாரென்று தெரியவில்லையே!" என்றால் சாட்சாத் நம்பியே அது. நம்பாடுவானின் உறுதியை பரிசோதித்த நம்பி நமக்கும் அருள் தந்து காப்பான்.

 

Comments