தகப்பன் சுவாமி

அனலில் பிறந்து, புனலில் நனைந்து, மலரில் முகிழ்த்த அறுமுகச் செவ்வேளான முருகப் பெருமானுக்குரிய திருநாமங்கள் பல. வள்ளி மணவாளன், தேவசேனாபதி, கந்தன், வடிவேலன், சுப்ரமண்யன்... இப்படியெல்லாம் சொன்னாலும், அவனுடைய ஒப்பற்ற தன்மையை விளக்குகிற திருநாமம், தகப்பன் சுவாமி என்பதுதான். என்ன அதில் சிறப்பு?
எந்த ஒலி அனைத்துக்கும் ஆதாரமோ, அந்த ஓங்காரத்தின் உட்பொருளை விளக்கியவன் முருகன். யாருக்கு? ‘ஓங்காரத்தின் உட்பொருள்’ என்று அப்பர் பெருமானாலும், ‘ஓம் இதி ப்ரஹ்ம சதாசிவோம்’ என்று தைத்ரிய உபநிஷத்தாலும் குறிப்பிடப்படும் சிவபிரானுக்கு, பிரணவப்பொருள் உரைத்தவன். அதனாலே உண்டான திருநாமம்! ஆக, சகல ஞானத்துக்கும் அதிதேவனாக, வித்யாகாரனாக விளங்குகிறான் முருகப்பிரான். மனவெளியில் அறிவொளி பெருக வைக்கும் அந்த குருநாதனை நாம் தரிசிப்பது, தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவேரகம் என்னும் சுவாமிமலையில்!
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்,
‘சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன்...’

என்று குறிப்பிடுகிறார். அதில், திருவேரகம் என்பதே சுவாமிமலை ஆகும். ஏர் என்றால் அழகு என்று பொருள். அழகுமிக்க பதியாதலால் திருவேரகம் எனப்பட்டது. குருவாக முருகன் அருளியமையால் குருமலை, குருகிரி. நெல்லிமரத்தை தலவிருட்சமாக பெற்றமையால் தாத்ரிகிரி. கட்டுமலை மேல் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம். சுவாமிநாத சுவாமியாக முருகன் குடி கொண்டிருப்பதால் சுவாமிமலை...இப்படிப் பல பெயர்கள் இந்தத் தலத்துக்கு.
சுவாமிமலை, கட்டுமலை அமைப்பைக்கொண்டது. கீழே இருந்து மேலே செல்ல அறுபது படிகளைக் கடக்க வேண்டும்.
‘வரும் பிரபவ முதல் வருடதேவர்கள்
திருவளர் அம்மலைச் செறிந்தபடி...’

என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இதைக் குறிப்பிடுகிறார். அறுபது ஆண்டுகளின் பெயர்கள் வருட தேவர்கள் படிகளாக அமைந்துள்ளனர் என்பது ஐதீகம்.
படைப்புக் கடவுள் பிரம்மாவிடம் ‘ஓம்’ என்ற பிரணவத்தின் பொருளை முருகன் வினவ, பிரம்மா அதை அறியாததால் அவரை சிறையில் தள்ளி படைப்புத் தொழிலை தாமே செய்தார் முருகன். சிவபெருமான் முருகனிடம் பிரணவத்தின் பொருள் தெரியுமா?" என்று வினவ, சிவனுக்கே குருவாய் இருந்து உபதேசம் செய்து சுவாமிநாத சுவாமியானார்.
இங்குள்ளவர் நேத்ர விநாயகர் (கண் கொடுத்த விநாயகர்). இவரை வணங்கி, வரகுணபாண்டியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி மேலும் சில படிகள் ஏறி மூன்றாவது சுற்றை வலம் வந்து கர்ப்பக்கிருகத்தின் முன் சென்றால் அழகே உருவான முருகப்பெருமான் ஆறடி உயரத்தில், வலக்கரத்தில் தண்டாயுதம் ஏந்தி, இடக்கரத்தை தொடையில் இருத்தி, யோக நிலையில் குருவாக நின்ற திருக்கோலத்தில் ராஜகம்பீரத்துடன் சுவாமிநாத சுவாமியாக அருள்பாலிக்கிறார்.
வியாழன்தோறும் வைர வேலும், தங்கக் கவசமும் பூண்டு அரச லட்சணங்களோடு காட்சியளிப்பார். ஆயிரம் தங்கத் தாமரை பூக்களுடைய மாலையை ஏற்று அழகனாக காட்சியளிப்பார். இந்திரன் வழிபட்டு அருள்பெற்று, தனது வாகனமான வெள்ளை யானை ஐராவதத்தை காணிக்கையாக்கினார். மற்ற ஆலயங்களில் முருகன் திருமுன் மயில் இருப்பதைக் கண்ட நாம், இங்கு ஐராவதம் உள்ளதைக் காண்கிறோம். இந்திரனால் வழிபாடு செய்யப்பட்ட அஷ்டோத்ரமும், சகஸ்ரநாமமும்தான் இதுவரை இங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. பூமாதேவி வழிபட்டு இங்கே நெல்லி மரமாக நின்றுவிட்டாள். வேதவியாசரின் மகனான சுகர் என்னும் சுகப்பிரம்ம மகரிஷி இவரை வணங்கி தவம் செய்து வீடுபேறு அடைந்தார்.
இங்குள்ள வஜ்ர தீர்த்தத்தில் நீராட, உடற்பிணி நீங்கும். குமார தாரையில் கங்கை காவிரியுடன் கலந்து ஓடுவதால் மக்களின் பாவம் நீங்கப்பெறும். சரவண தீர்த்தம், நேத்ரபுஷ்கரிணி, பிரம்ம தீர்த்தம் ஆகியவையும் வினை தீர்க்கும் வல்லமை பெற்றவை.
ஒவ்வொரு மாதமும் மாதப் பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமை, பிரதோஷம் என்பன பஞ்ச பருவங்கள் எனும் சிறப்புடைய விழா நாட்கள். மாதம்தோறும் ஷஷ்டி மற்றும் சித்திரை பத்து நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஐப்பசியில் பத்து நாட்கள் கந்த சஷ்டி, கார்த்திகையில் பத்து நாட்கள் திருக்கார்த்திகை பெருவிழா, தைப்பூசம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம் அன்று வள்ளி திருக் கல்யாண வைபவம் ஆகியவை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
‘குருவாய் வருவாய் அருள்வாய்’ என்றுதான் அழகன் முருகனைப் பிரார்த்தித்தார் அருண கிரிநாதர். அந்த குரு நாதனாகவே தரிசனம் அருளும் சுவாமி நாதனை தரிசிப்போம். தகப்பனுக்கே உபதேசித்தவன், தம் அடியார்களின் கவலைகளையும் போக்கி வழிகாட்டி வழிநடத்துவான். இது நிச்சயம்!
செல்லும்வழி:
கும்பகோணத்திலிருந்து மிக அருகில்.

தொடர்புக்கு: 0435 - 2454421 / 2454358

Comments