மன நோய் குணமாக...

மிகுந்த மனக்கவலையுடன் அமர்ந்திருந்தான் அரசன் சுந்தர சோழ பாண்டியன். காரணம், தன் அன்பு மகளுக்கு திடீரென்று ஏற்பட்ட சித்த பிரமை. திருமண வயதில் உள்ள மகளுக்கு இப்படி ஆனால், எந்த தந்தைதான் கவலைப்பட மாட்டார். நாட்டில் உள்ள மருத்துவர்கள் எல்லாம் வந்து பார்த்தாகி விட்டது. ஆனால், மகளின் மன நிலையில் எந்த மாற்றமும் இல்லை. மனம் தளர்ந்த அரசன் மகளை குணப்படுத்துபவர்க்கே அவளைத் திருமணம் செய்து தருவதாக அறிவித்தான்.
ஒரு நாள் காவலர்கள், நம்பூதிரி ஒருவர் அரசரைக் காண வந்திருப்பதாகக் கூறினர். அரசனின் உத்தரவோடு உள்ளே வந்த நம்பூதிரி, “கலங்காதீர்கள் அரசே... உங்களின் மகள் மீண்டும் இயல்பான மன நிலைக்குத் திரும்புவார்.
நீங்கள் அவரை அழைத்துக் கொண்டு நாட்டை வலம் வாருங்கள். ஓரிடத்தில் யானைகள் ஒரு குளத்தை வலம் வருவதைக் காண்பீர்கள். அக்குளத்துக்கருகே உள்ள சிற்பியின் கையால் உங்கள் மகளுக்கு அக்குளத்து நீரைப் பருக தரச் செய்தால் உங்கள் மகள் குணமாவார்” என்றார். மகிழ்ந்த அரசன், நம்பூதிரிக்கு பொன்னும் பொருளும் வழங்கினான்.
மறுநாளே மகளை அழைத்துக் கொண்டு நாட்டை வலம் செய்யப் புறப்பட்டான் அரசன். அப்போது களக்காடு என்னும் ஊருக்கு அருகே காட்டுக்கு நடுவே இருந்த ஒரு குளத்தை யானைகள் வலம் வருவதைக் கண்டான். உடனே தன் வீரர்களை அனுப்பி, அங்கே சிற்பி யாரும் இருக்கிறார்களா என்று பார்க்கச் சொன்னான். நான்கு புறங்களிலும் விரைந்த வீரர்கள், ஒரு மரத்தின் அடியில் சோகமே உருவாக, வலது கையை இழந்து அமர்ந்திருந்த ஒரு சிற்பியை அழைத்து வந்தனர்.
மன்னனுக்கோ அதிர்ச்சி. இருப்பினும், நம்பூதிரி கூறியதை எடுத்துரைத்து தன் மகளுக்கு உதவுமாறு வேண்டினான். சிற்பியும் தன் இடக்கரத்தால் குளத்து நீரை மொண்டு அப்பெண்ணுக்குக் கொடுக்க, அதை அருந்திய அவள் சித்தம் தெளிந்தாள். இதைக் கண்டு மகிழ்ந்த அரசன், ‘சிற்பிக்கு அந்த நிலை வந்ததற்கு என்ன காரணம்’ என்று கேட்டான்.
அதற்கு அவர், தான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையை செதுக்கிய சிற்பி எனவும், அங்கு செய்த மற்றொரு சிலையை செப்பரையில் பிரதிஷ்டை செய்ததாகவும், அதைப் பார்த்த ராமபாண்டியன் தன்னை மற்றொரு சிலை செய்யச் சொன்னதாகவும் அது கரிசூழ்ந்த நல்லூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், இதைக்கண்ட ராமபாண்டியனின் உறவினரான வீரபாண்டியன் தன்னை கட்டாரிமங்கலத்துக்கு ஒரு சிலை செய்யச் சொல்லி, அதை செய்த பின் தன் கையை வெட்டி விட்டதாகவும் கூறினார்.
அனைத்தையும் கேட்ட அரசன், ‘தன் மகள் குணமான இடத்தில் இறைவனுக்கு ஒரு கோயில் அமைக்க விரும்புவதாகவும், அதற்கு ஒரு நடராஜர் சிலை செய்து தர இயலுமா?’ என்று சிற்பியிடம் வினவினான். சிற்பியோ திகைத்தார். ஒரு கை இல்லாத என்னால் எவ்வாறு சிலை செதுக்க முடியும்? இருப்பினும் இது நடராஜர் சித்தம் என்று உணர்ந்து மரத்தச்சரிடம், கை போன்ற ஒரு அகப்பை தமக்குச் செய்து தரக் கூறினார்.
அதனை மாட்டிக் கொண்டு மிக அழகான நடராஜர் சிலையை செதுக்கி முடித்தார். சுந்தர சோழ பாண்டியன் கோயில் கட்டிய அவ்வூர் யானைகள் வலம் வந்து அடையாளம் காட்டியதால் ‘கரிவலம் குளம்’ என்று வழங்கி இன்று கருவேலங்குளம் என்று அழைக்கப்படுகிறது. இறைவன், அரசனின் பெயரால் சௌந்தர பாண்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இன்றும் பலர் இக்கோயில் குளத்தில் நீராடி இறைவனை வணங்கி சித்த பிரமை நீங்கப் பெறுகின்றனர்.
இக்கோயில் பாண்டிய மன்னர்களின் அழகிய கட்டுமானத்துக்கு சான்றாக விளங்குகின்றது. கோயிலுக்கு முன் நிற்கும் மிகவும் அழகான தேர், இன்று பொலிவிழந்து காணப்படுகின்றது. தேரில் சிவனாரின் 64 வடிவங்கள் சிறிய அளவில் செதுக்கப்பட்டுள்ளது காண்போர் கருத்தை கவர்வதாக உள்ளது.
மகாமண்டபத்தில் உள்ள நகரும் தூண்களையும் இசைத் தூண்களையும் செய்த சிற்பிகளின் கலைத்திறன் வியப்புக்குரியது. மார்கழியில் ஆருத்ரா விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. சதய நட்சத்திரத் தன்று கொடி ஏற்றி, திருவாதிரை அன்று விழா முடிகிறது. விழா நடக்கும் கூத்தம்பலம் அழகான ஓவியங்களோடு காணப்படுகிறது. இன்று இவ்வோவியங்கள் பொலிவிழந்து அழிந்து போய் காணப்படுகின்றன.
இறைவன் சௌந்தரபாண்டீஸ்வரரும் இறைவி கோமதி அம்மனும் தனிச் சன்னிதிகளில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் சுகப்பிரசவம் அருளும் பரம கல்யாணி அம்மனும் காணப்படுகிறாள். முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் சுந்தர சோழ பாண்டியனின் கல்வெட்டுகள் இங்கே காணப்படுகின்றன.
செல்லும் வழி:
திருநெல்வேலியிலிருந்து 37 கி.மீ. களக்காடில் இருந்து 3 கி.மீ. சேரன்மாதேவி பனங்குடி சாலையில் சென்று இக்கோயிலை அடையலாம்.
தரிசன நேரம்: காலை 6.30 மணி முதல்10 வரை. மாலை 5 மணி முதல் 7 வரை.

தொடர்புக்கு: 99447 35288 / 99437 58928

Comments