பரிமேல் வரும் பரமன்

பாலூட்டி இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணி குதிரை. கி.மு.நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால், சமூக வாழ்க்கைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்கத்திய நாடுகளில் வேளாண்மையில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்துள்ளது. பண்டைய மன்னர்களின் போர்ப்படைகளில் குதிரைப்படை மிகவும் இன்றியமையாத ஒன்று. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டேயும் தூங்க வல்லவை.
ஒரு நாளைக்கு நாற்பது லிட்டர் முதல் நாற்பத் தைந்து லிட்டர் வரை குடிநீர் அதற்குத் தேவை. பிறந்த சிறிது நேரத்திலேயே குதிரைக் குட்டிகள் எழுந்து நடக் கத் தொடங்கி விடும். குதிரையின் சராசரி ஆயுள் முப்பது ஆண்டுகள். 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய பெல்லி எனும் ஒரு குதிரை 62 வயது வரை வாழ்ந்துள்ளது. 2007ஆம் ஆண்டு தனது 56வது வயதில் உயிரிழந்த, சுகர் பஃப் எனும் குதிரையே உலகில் வயதான குதிரையாக உலக சாதனைப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது.
குதிரை வலிமையின் சின்னம். நாம் பயன்படுத்தி வரும் மின்சார சக்தியினை, ‘ஹார்ஸ் பவர்’ என்றே குறிப்பிடுகின்றனர். குதிரை என்றவுடன் மாவீரன் அலெக்சாண்டரும், ராஜா தேசிங்கும், அசோகரும் நம் நினைவில் வந்து போகின்றனர். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலின் நாயகன் வந்தியத்தேவன் ஏறி வந்த குதிரையின் காலடி ஓசையும், ‘சிவகாமியின் சபத’த்தில் நரசிம்ம பல்லவரின் குதிரைக் காலடி ஓசையும் மறக்க முடியாதவை.
கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியின் குருவாக வணங்கப்படும் ஹயக்ரீவப் பெருமாள், குதிரை முகமுடையவராகவே வணங்கப்படுகிறார். திருவிழா காலங்களில் இறைவனும் - இறைவியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாலும், அதே இறைவனும் - இறைவியும் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வரும்போது பேரழகும், தனித்ததொரு கம்பீரமும் கூடவே இணைந்து விடுகின்றன. தற்போதும் பல திருத்தலங்களில் பெருந்திருவிழாக்களின், தொடர் உற்சவங்களின் போது சுவாமியோ அம்பாளோ குதிரை வாகன வீதியுலா என்றால் அன்றைக்கு பக்தர்களின் பெருங்கூட்டம் திரண்டு விடுகிறது.
சைவ - வைணவ ஆலயங்களில் முக்கிய திருவிழாவின் முதல் நாளிலோ அல்லது அதற்கு அடுத்த நாளிலோ குதிரை வாகன உலா கட்டாயமாக இடம் பெற்றிருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி. சித்திரைத் தேருக்கு முதல் நாள் இரவு மாரியம்மன் குதிரை வாகனத்தில்தான் பவனி வருகிறாள்.
ஸ்ரீரங்கத்தில் தைத்தேர், பங்குனித்தேர், சித்திரைத் தேர் என வரிசையாக மூன்று திருத்தேர் திருவிழாக்கள். இதில் சித்திரைத் தேர் மிகப் பிரபலம். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருத்தேர்களில் எழுந்தருள்வதற்கு முதல் நாள், குதிரை வாகனத்தில்தான் பவனி வருகிறார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் வேடுபறி திருநாள் அன்று கோயில் மணல் வெளியில், குதிரை வாகனத்தின் மீதான நம்பெருமாள் வேக வேகமாக அசைந்தாடி வருவது கண் கொள்ளாக் காட்சி. மதுரை சித்திரைப் பெருவிழாவின்போது தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவது மிக முக்கிய திருவிழா ஆகும்.
கிராமப்புறக் காவல் தெய்வங்களின் தலைவன் அய்யனார், காவல் தெய்வங்களில் முதன்மையானவர். சன்னாசியார், ஆரத்திக்காரி, பெரிய கருப்பர், சின்ன கருப்பர், மதுரை வீரன், வீரபத்திரர், முனீஸ்வரர் மற்றும் அடைக்கலம் காத்தான் ஆகியோர் பரிவாரர்கள். அதாவது, கிராமக் காவல்படைத் தளபதிகள். இதில் சன்னாசியார், அய்யனாருக்கு குருநாதராகவும் நல்ல ஆலோசகராகவும் விளங்கி வருபவர். பதினெட்டுப் பட்டி கிராமங்களில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பரிவார தேவதையினை அனுப்பி வைப்பார் அய்யனார். அவர்கள் கொண்டு வரும் தகவல்களைப்பெற்று, குருநாதர் சன்னாசியாரிடம் தெரிவித்து ஆலோசனை கேட்டு செயல்படத் தொடங்குவார் அய்யனார்.
பிரசித்தி பெற்ற அய்யனார் கோயில்களில், மிகப் பிரம்மாண்ட அளவில் இரண்டு வெள்ளைக் குதிரைகளும் நடுவே வெள்ளை யானையும் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். ஊர்க்காவல் முதன்மைத் தெய்வமான அய்யனார் சன்னிதி எதிரே அந்த அமைப்பு இருக்கும். மெதுவான பயணத்துக்கு யானை வாகனம். மிக விரைவான பயணத்துக்கு குதிரை வாகனம். கிராம மக்களைப் பாதுகாக்க விரைவான பயணத்துக்குரிய குதிரை வாகனம்தானே உகந்தது? புதுக்கோட்டை மாவட்டம், அறங்தாங்கி அருகே ஒரு கிராமத்தில், அய்யனார் கோயில் முன்பாக மிக உயரமான வெள்ளைக் குதிரைச் சிலை அமைந்துள்ளது.
பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில். அறந்தாங்கியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் குலமங்களம் கிராமம். அங்கிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் அய்யனார் கோயில். மிகவும் பழைமையானது. அடுத்தடுத்த தலைமுறைகளில் புதுப்பிக்கப்பட்டது. பெரிய தொருகாரை மரத்திலிருந்து சுயம்புவாக வெளிப்பட்ட அய்யனாருக்கு, 1574இல் சிறு கோயில் எழுப்பப்பட்டுள்ளது. 1937இல் இக்கோயில் மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகக் கோயில் வரலாறு தெரிவிக்கிறது.
சுமார் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஜமீன்தார்கள் காலத்தில், கோயிலின் முன்பாக இதே இடத்தில் யானை சிலையும், குதிரை சிலையும் இருந்துள்ளது. அப்போது அருகிலிருக்கும் வில்லுனி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, யானை சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாகவும், குதிரைச் சிலை மட்டுமே எஞ்சியதாகவும் சொல்லப் படுகிறது. அதன் பின்னர், அப்பகுதி ஜமீன்தார் இறந்து போக, அவரது மனைவி குதிரைச் சிலை எஞ்சிய இடத்தில், மிகப் பிரம்மாண்டமான குதிரைச் சிலையினை நிறுவியுள்ளார்.
அய்யனார் கோயில் எதிரே திறந்தவெளியில் அமைந்துள்ளது அந்தக் குதிரைச் சிலை. முன்னங்கால்கள் இரண்டையும் உயரத் தூக்கி, வானவெளியில் தாவிச் செல்லும் அங்க அசைவுகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ள குதிரைச் சிலையின் உயரம் மட்டும் 32 அடி. அகலம் 17 அடி. அதனைத் தாங்கி நிற்கும் பீடம் 6 அடி உயரம். இதுதான் ஆசியாவின் மிகப் பெரிய குதிரைச் சிலை எனப்படுகிறது.
மாசிப்பெருந்திருவிழா, இங்கு முக்கிய திருவிழா. மூன்று நாட்கள். முதல் நாள் மாசி மாத, மக நட்சத்திரத்தன்று, சுவாமி தீர்த்தவாரி. அன்றுதான் அழகுக் குதிரை மீது அய்யனார் உலா. மாலை ஆறு மணிக்கு மேல் புறப்பாடாகி, குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் தீர்த்தக் குளம் சென்றடைவார். பக்தர்களுக்கு தீர்த்தவாரி கண்டருளி அங்கிருந்து குதிரை வாகனத்தில் பயணித்து வெளிப்பிராகாரம் உலா வந்து இரவு பத்து மணிக்கு கோயிலை வந்தடைவார் அய்யனார். அன்று மட்டும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரள்கின்றனர். மிகப் பிரம்மாண்ட குதிரைச் சிலைக்கு, அன்றைக்கு மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ணக் காகித மாலைகள் பக்தர்களால் அணிவிக்கப் படுகின்றன.
திங்கள், வெள்ளி இங்கு முக்கிய நாட்கள். மாதத்தில் மகம், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள். இங்கு சிறு மரத்தொட்டில் கட்டி பிரார்த்திப்பது தனிச் சிறப்பு. குழந் தைப் பேறு வேண்டி பிரார்த்தனை. குழந்தை பிறந்த பின்னர் அத்தம்பதியினர் மாசி மகம் அன்று, அக்குழந்தையினைக் கரும்புத் தொட்டிலில் இட்டு கோயிலை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். அன்று ஒரு நாள் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்புத் தொட்டில் வழிபாடு நடைபெறும்" என்கிறார் கோயில் அர்ச்சகர் சாமியப்ப குருக்கள்.
செல்லும்வழி:
புதுக்கோட்டை - அறந்தாங்கி - குளமங்கலம் பேருந்து நிறுத்தம். பட்டுக்கோட்டை - பனங்குளம் பாலம் பேருந்து நிறுத்தம். அங்கிருந்து கோயிலுக்கு ஆட்டோவில் செல்ல வேண்டும்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 1 வரை. மாலை 4 மணி முதல் 7 வரை.

Comments