காத்திருக்கும் நந்தி

பொதுவாக, சிவன் கோயிலில் இருக்கும் அம்பாள், தனது நான்கு கரங்களில் மேலிரு கரங்களில் பாசாங்குசமும், கீழ் இரண்டு கரங்களை அபய வரதஹஸ்தமாகவும் வைத்திருப்பார். ஆனால், நத்தம் சம்பகேஸ்வரர் கோயிலில் உறையும் சௌந்தர்ய நாயகி அம்பாள், தனது மேலிரண்டு கரங்களில் பாசாங்குசத்துக்குப் பதிலாக தாமரை மொட்டுக்களை வைத்திருக்கிறார். கீழிரண்டு கரங்கள் அபய, வரதஹஸ்தமாக இருக்கின்றன. தாமரை மொட்டுக்களுடன் லட்சுமியின் அம்சங்களோடு சௌந்தர்ய நாயகி அம்பாள் காட்சியளிப்பதன் பின்னணி பற்றி கிராமத்தில் கர்ண பரம்பரை சம்பவம் ஒன்று சொல்லப்பட்டு வருகிறது.
பாலாற்றை ஒட்டிய நந்தம் பகுதி, ஒரு காலத்தில் செண்பகவனமாக (சம்பகம் என்றும் சொல்வார்கள்) இருந்தது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும்போது முதலில் திரண்டு வந்த விஷத்தை ஏற்றுக் கொண்டார் பெருமாள். அவரது மேனியிலிருந்து விஷத்தை நீக்க வேண்டுமென்று சிவனை வேண்டிக் கொள்கிறார் லட்சுமி தாயார். பாலாற்றங்கரை, நந்தம் பகுதியில் தன்னை வேண்டி தவம் இருக்க கட்டளையிடுகிறார் சிவன். பூலோகத்தில் அந்தப் பகுதியில் தவமிருந்து வருகிறார் லட்சுமி. அவருக்குக் காவலாக நந்தியையும் அனுப்பி வைக்கிறார் சிவன்.
லட்சுமியின் தவத்தை மெச்சி பூலோகம் வரும் சிவன், தாயார் ஆழ்ந்த தவத்தில் இருப்பதால் அவரை இடையூறு செய்யாமல், அருகில் பாலாற்றின் நடுவில் இருக்கும் குன்றில் அமர்ந்து விடுகிறார். தொடர்ந்து கைலாயத்திலிருந்து வரும் பார்வதியும் சேர்ந்து கொள்ள கைலாசநாதர், உடனுறை கனகாம்பிகை அம்பாளாக, லட்சுமி தாயாருக்கு காட்சி கொடுக்கிறார்கள். லட்சுமி தாயாரின் பிரார்த்தனை நிறைவேறுகிறது.
பாலாற்றின் நடுவில் இருக்கும், பரமேஸ்வர மங்கலம் என்று அழைக்கப்படும் குன்றில், இன்றளவும் பக்தர்களுக்கு கைலாசநாதர் உடனுறை கனகாம்பிகை அம்பாள் தரிசனம் கொடுத்து வருகிறார்கள். அதே சமயம் லட்சுமி தாயார் அம்சங்களோடு உள்ள சௌந்தர்ய நாயகியோடு நத்தத்தில் உடனுறைகிறார் சம்புகேஸ்வரர். பரமேஸ்வர மங்கலம் போன ஈஸ்வரன் திரும்ப வருவாரோ என்று கோயிலின் வெளிப்புறம் உள்ள நந்தி சம்புகேஸ்வரருக்கு எதிர் புறமாக திரும்பி இருப்பது இங்குள்ள சிறப்பு.
அதேசமயம் கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் சம்புகேஸ்வரரை நோக்கியும் சிறிய நந்தியார் இருக்கிறார்.
எட்டாம் நூற்றாண்டு நிருபதுங்க பல்லவன் காலத்து கோயில். சுற்றுச் சுவர்கள் கல்வெட்டு களஞ்சியமாக காட்சி அளிக்கிறது. ஆனால், கால ஓட்டத்தில் எழுத்துக்கள் படிக்க முடியாத வகையில் உருமாறிவிட்டன. கோயிலின் உள்ளே நுழையும்போது வலது பக்கத்தில் முதலில் உள்ள சௌந்தர்ய நாயகியை வணங்குகிறோம். லட்சுமியின் அம்சம் ஆதலால், பெண்கள் இங்கு வழிபடுவது மிகச் சிறப்பு. அடுத்து, சுப்பிரமணியர். இவரது தோற்றத்தை பார்க்கும்போது ராஜேந்திர சோழன் காலத்து சிற்பக் கலையை பிரதிபலிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். வழக்கத்துக்கு மாறாக, மயில் இடது பக்கம் பார்த்து நிற்கிறது. அர்த்த மண்டபத்துக்கு முன் உள்ள சோழர் காலத்து துவாரபாலகர்கள் பின்னப்பட்டுப் போயிருக்கிறார்கள்.
அர்த்த மண்டபத்தில் சுந்தரர், சம்பந்தர், சனீஸ்வரர் என்று ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடன் சிற்ப நயம்மிக்க ராமன், சீதை, லட்சுமணன் இருப்பதுதான் ஆச்சர்யம். ஒரு காலத்தில், ராமர் கோயில் அந்தப் பகுதியில் இருந்திருக்கலாம் என்றும், அந்தக் கோயில் கால ஓட்டத்தில் அழிந்த போது, ராமர் இங்கு குடிபெயர்ந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சம்புகேஸ்வரரை வணங்கும் போது சிதிலப்பட்டு இருக்கும் கோயில் சீராக வேண்டுமே என்ற பிரார்த்தனையும் இயல்பாக எழுகிறது. இங்கு முதல் பூஜை அம்பாளுக்குத்தான்.
கோயிலைச் சுற்றி கடவுளர்களின் பின்னப்பட்ட சிலைகளும், லிங்கங்களும் காட்சி அளிக்கின்றன. வழக்கமாக சிவன் கோயிலில் ஐந்து கோஷ்டத்தில் கடவுளர்கள் இருப்பார்கள். இங்கு சப்த கோஷ்டம். பிட்சாடனர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, துர்கை, சங்கர நாராயணன் என்று கோஷ்ட தெய்வங்கள். ஒவ்வொருவரும் சிற்ப சாஸ்திரப்படி சிறப்புகளோடு இருக்கிறார்கள். ராஜராஜன் மனைவி சக்திவிடங்கி,கோயிலுக்கு நிலம் தானம் கொடுத்த கல்வெட்டு இருக்கிறது.
ராஜேந்திரன் காலத்தில் கோயிலை நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கோயிலின் முன் 16 கால் மண்டபம் இருந்திருக்கிறது. கோயிலை சுற்றி ஏழு சிவலிங்கங்கள் பின்னப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. அவர்கள், கைலாச நாதர், சம்பகேஸ்வரர், அருணா சலேஸ்வரர், ஜெகதீஸ்வரர், ஏகாம் பரநாதர், வால் மீகிநாதர், வியாக்ர பாதீஸ்வரர். ஒரு காலத்தில் பிரம்மாண்டமான கோயிலாக இருந்திருக்க வேண்டும். ஸ்தல விருட்சம் வில்வ மரமும் தற்போது இல்லை. சிவனடியார்கள், சம்புகேஸ்வரர் கோயிலை புனர் நிர்மாணம் செய்ய தாராளமாக நிதி கொடுக்க வேண்டும்.
செல்லும்வழி:
சென்னை - புதுச்சேரி ஈ.சி.ஆர். சாலையில் கல்பாக்கத்தை அடுத்த பாலாறு பாலம் தாண்டிய பின் காத்தான்கடை என்ற இடத்தில் வலது பக்கம் 3 கி.மீ. தொலைவில் கோயில் இருக்கிறது.
தொடர்புக்கு: சம்புகேஸ்வர குருக்கள்: 9786058325

 

Comments