உயிர் காத்த வேங்கடரமணர்

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் புராணப் பின்னணியும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க ஆலயங்களில் பசவங்குடி, விஸ்வேஸ்வர புரத்தில் அமைந்துள்ள கோட்டே ஸ்ரீ பிரசன்ன வேங்கடேஸ்வரா ஆலயமும் ஒன்று. மிகப்பழைமையான இந்த ஆலயம், நுணுக்கமான கருங்கல் சிற்பங்களுக்கும், கட்டிடக் கலைக்கும் உதாரணமாக அமைந்துள் ளது. ஆலயக் கருவறையில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடரமணஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மைசூரை ஆண்ட உடையார் ராஜ வம்சத்தினரின் வசமிருந்த பழைமையான அரண்மனை மற்றும் பழைமையான கோட்டையின் (கன்னடத்தில் கோட்டே) அருகில் இந்த ஆலயம் அமைந்துள்ளதால் பக்தர்கள் இந்த ஆலயத்தை, ‘கோட்டே வேங்கடரமண ஸ்வாமி ஆலயம்’ என்றே அழைக்கின்றனர். இந்தக் கோட்டை பின்னாளில் திப்பு சுல்தான் வசம் வந்தது.
பதினேழாம் நூற்றாண்டில் சிக்க தேவராஜ உடையார் இந்த ஆலயத்தைக் கட்டினார் என்றும், பின்னர் அவர் மகன் கண்டீர நரசராஜ உடையார் நான்கு கிராமங்களை இந்த ஆலயத்தின் நிர்வாகச் செலவுக்காக நிபந்தமாக எழுதி வைத்தார் என்றும் தலபுராணம் தெரிவிக்கிறது.
ஆலயத்துக்கு முன்புறம் உள்ள பெரிய திடல் அக்காலத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தினர் ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளப் பயன்படுத்தப்பட்டதாம். ஆலயத்தில் நுழைந்ததும் காணப்படும் கருங்கல்லில் வடிக்கப்பட்ட உயரமான கருட ஸ்தம்பம் திப்பு சுல்தானின் உயிரைக் காப்பாற்றிய பெருமை கொண்டது. 1791ல் நடைபெற்ற மைசூர் போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தினர் ஆலயத்துக்குள் இருந்த திப்புவை துப்பாக்கியால் சுட்டபோது, பாய்ந்து வந்த தோட்டா கருட ஸ்தம்பத்தில் பட்டு தெறித்து விழுந்தது. உயிர் தப்பிய திப்பு, ஸ்ரீ வேங்கடரமணரே தன்னைக் காப்பாற்றியதாக நம்பினார். திப்புவும் அவர் தந்தை ஹைதர் அலியும் ஸ்ரீ வேங்கடரமண ஸ்வாமி ஆலயத்தை இந்து முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாகக் கருதினர். கருட ஸ்தம்பத்தின் கீழ்ப் பகுதியில் நான்கு புறங்களிலும் அனுமன், கருடன், சங்கு, சக்கரம் ஆகியவை புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. 1689 ஆம் ஆண்டு இந்த ஆலயத்தின் முக மண்டபமும் ராஜகோபுரமும் திப்புவால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திப்பு சுல்தான் அரண்மனையில் உம்மிடி ஸ்ரீ கிருஷ்ணராஜ உடையார் தர்பார் நடத்துவதற்கு முன்பாக 15.10.1811 அன்று இந்த ஆலயத்துக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டுள்ளார்.
தமிழ்நாட்டு ஆலயக் கட்டிடப் பாணியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் கருட ஸ்தம்பம், பலிபீடம், கொடிமரம், கருடன் சன்னிதிகளைத் தொடர்ந்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் அடுத்து மூன்று நிலைகளுடன் கூடிய கருவறை அமைந்துள்ளது. ஆலய நுழைவாயிலை ஐந்து நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. மகாமண்டபத்தில் உள்ள யாளி மற்றும் குதிரை வீரர் சிலைகள் அழகு வாய்ந்தவை.
பாஞ்ச ராத்ர ஆகமப்படி பூஜைகள், வழிபாடுகள், உற்சவங்கள் நடைபெறும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடரமண ஸ்வாமி, திருமலை திருவேங்கடவனின் பிரதி ரூபம் போன்றே, நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்குநோக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். கருவறையைச் சுற்றிலும் உள்ள சுவரில் கிரிஜா கல்யாணம், பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர், சப்த மாதர்கள், சப்த ரிஷிகள், அஷ்ட திக்பாலர்கள் போன்றோரின் புடைப்புச் சிற்பங்கள் நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளன. மகா மண்டபத்தில் பெரிய கல் தூண்களில் நவக்கிரக சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறைக்குத் தென் கிழக்கில் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் ஸ்ரீ மகாலக்ஷ்மி சன்னதியும் உள்ளன.
வைகாசி மாதம் ரத யாத்திரையுடன் கூடிய பிரம்மோற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சனிக் கிழமைகள் மற்றும் திருவோண நாட்களில் அதிகமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
செல்லும்வழி:
பெங்களூரின் நடுநாயகமான கலாசிப்பாளையத்துக்கு அருகில் சாமராஜ்பேட்டைப் பகுதியில் ஆல்பர்ட் விக்டர் சாலை - கே.ஆர்.சாலை சந்திப்பில் கோட்டே ஸ்ரீ வேங்கட ரமணஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்தும், ரயில் நிலையத்திலிருந்தும் 2 கி.மீ.கெம்ப கவுடா மற்றும் சிட்டி மார்க்கட் பேருந்து நிலையங்களிலிருந்து நடக்கும் தூரம்.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை.

 

Comments