தர்மத்தின் வழி

எதை நம்பினால் கெடுவதில்லை? யாரை நம்பினால் கெடுவதில்லை? - இது பொதுவாக எழும் கேள்வி. இந்தக் கேள்விக்கான ஒரே பதில், ‘இறைவனை நம்பினார் கெடுவதில்லை’ என்பது தான்" என்றார், ‘தர்மத்தின் வழி’ என்ற தம் சொற்பொழிவில் ஸ்வாமி அபவர்கானாந்தா.
பொருட்கள், திறமைகள், செல்வங்கள், மக்கள், சமுதாயம் இதெல்லாத்தையும் நம்பியவர்கள்தான் கெடுவார்களே தவிர, இறைவனை நம்பியவர்கள் ஒருபோதும் கெட்டுப்போக மாட்டார்கள். எப்படி? பாணாசுரன் சிவன்கிட்ட வரம் வாங்கினவன்தான். அவனை கிருஷ்ணர் வீழ்த்தலியா? அப்படின்னா, சிவனை நம்பி அவன் கெட்டுப் போனான்னுதானே அர்த்தம். இப்படி ஒரு கேள்வி வரும். ஆனா, சிவன்கிட்ட, அவன் கேட்ட வரம் என்ன? எனக்கு சமமா சண்டை போட ஒருத்தன் வேணும்னு. அதான் கிருஷ்ணர் வந்தார். அவனோட ரெண்டு கையை மட்டும் விட்டுட்டு, மத்த 998 கையையும் வெட்டி வீழ்த்தினார். அதுவும் சிவன் கேட்டுக் கொண்டதால் விட்டார். இல்லைன்னா, அதுவும் இல்லாம போயிருக்கும்.
‘சரி; பஸ்மாசுரன் சிவன்கிட்ட வாங்கின வரத்தால தானே செத்துப் போனான்’னு கேட்கலாம். ஆனா, தப்பு அதுலயும் சிவன்மேல இல்ல. ‘யார் தலைல நான் கைய வெச்சாலும், அவன் பஸ்மமாகணும்’ - இது அசுரன் கேட்ட வரம். அந்த வரத்தின்படி தன் தலையில கைவைச்சு, தானே மாண்டு போனான். ஆக, இறைவனை நம்பி அவன் கெடலை; வரத்தால், தான் பெற்ற மமதையால் மாண்டுபோனான். இவர்களின் பக்தி முழுமையானது அல்ல. இறைவனின் பெயரை வைத்து ஏதோ ஒன்றை அடைய வேண்டும் என விரும்பியவர்கள். பகவானிடமிருந்து வரங்களை, சக்தியை, செல்வங்களை வாங்கணும் என ஆசைப் பட்டவர்கள். அதன்படியே செயல்பட்டவர்கள் இவர்கள்.
ஆனால், இறைவனை நம்பியவர்கள் இறைவனுக்கு என்றுமே பகையாக மாட்டார்கள். உண்மையான பக்தன் இறைவனே வேண்டும் என்று மட்டும்தான் கேட்பான். அந்த பக்தியை அடைய என்ன தகுதி வேண்டும்? தர்ம வழியில் வாழ்க்கையை நடத்த வேண்டும். உண்மையான பக்தன் தன்னிடம் சரணா கதி அடையும்போது அதைப் பார்த்து ஆனந்தம் அடைவார் இறைவன்.
பகவான் தன் உண்மையான பக்தனைப் பற்றி எப்படி சொல்லிப்பாராம் தெரியுமா? ‘நான் ஏதாவது கொடுத்தாலும் அவன் வாங்க மாட்டான்’னு சொல்லி சிரிச்சுப்பாராம். பக்தன் இங்கே என்ன சொல்லுவான்? ‘நீ எந்தப் பொருள் கொடுத்தாலும் எனக்கு வேண்டாம். நீயேதான் எனக்கு வேண்டும்’ என்பான். துருவனும் மார்க்கண்டேயனும் அப்படித்தானே திகழ்ந்தார்கள்.
பக்தி இருக்குற இடத்தில் தர்மம் இருக்கும். எங்க அன்பு இருக்கோ அங்கதான் தர்மம் இருக்கும். மனைவிக்கு கணவன் மீது அன்பு இருந்தா அதுதானே பதிபக்தி, தர்மம் எல்லாம். ஒருவனுக்கு தேசத்தின் மீது அன்பு இருந்தா அதுதான் தேச பக்தியா மாறும். தன் தேசத்துக்கு எதிரா அதர்மம் செய்ய மாட்டான். ஒரு குழந்தைக்கு தாய்யின் மீது அன்பு இருந்தா, அது தாய்க்கு எந்த அதர்மத்தையும் செய்யாது. ஒருவர் தர்மத்தை மீறாமல் இருக்கும் வரை அவர் இறைவனை நம்பிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
ஒருத்தர் பணக் கஷ்டத்துல இருக்கார். யார் யார் கிட்டேயோ உதவி கேட்கறார். ஒருத்தரும் கொடுக்கல. ஒருத்தர் மட்டும், ‘சார் நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க 10,000 ரூபா எடுத்து வெக்கறேன்னு’ சொன்னா, அவர் மேல அன்பும் நம்பிக்கையும்தான் வருமே தவிர, அவர் வீட்ல போயி அந்த ரூபாயை கொள்ளை அடிக்கத் தோணாது. ஆக, எந்த இடத்தில் நம்பிக்கை வந்து விட்டதோ அந்த இடத்தில் அதர்மம் வராது.
இறைவனின் இன்னொரு பெயர்தான் தர்மம். தர்மம் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? That which sustainsன்னு பொருள். எது இந்தப் படைப்பைக் காத்துக் கொண்டிருக்கிறதோ அது தர்மம். அந்த தர்மத்தின் ரூபத்தில் இறைவன்தான் இந்த உலகைப் படைத்து, காத்துக் கொண்டிருக்கிறார். இயற்கை ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்ததோ அப்படிதான் இன்றும் இருக்கிறது. மனிதன்தான் மாறி விட்டான். தர்மத்தை மீறி விட்டான். அதனால்தான் இயற்கை சீற்றங்கள் எல்லாம் வருகிறது. மாற்றம் அடையாமல் சீராக இருக்கும் இயற்கையை தன்னுடைய அதர்மச் செயல்களால் மாற்றிக் கொண்டிருப்பவன் மனிதன்தான்.
கடவுளை நம்பினாரும் கெடுவதில்லை; தர்மத்தை நம்பினாரும் கெடுவதில்லை. அதனால்தான், ‘தர்மோ ரக்ஷதி: ரக்ஷித’ என்று சொல்லியிருக்கிறார்கள். ‘தர்மத் தைக் காப்பாற்று: தர்மம் காப்பாற்றும்’ என்பது இதன் பொருள். தர்மம் இறைவனை போலவே எல்லாருக்கும் சமமாக இருக்கிறது. சத்யம், நேர்மை இதெல்லாம்தான் தர்மம். தர்ம வழியிலேயே இருக்கறவாளுக்குதானே துன்பங்கள் வருதுன்னு சொல்கிறோம். இதை யார் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்? இதை, தர்மத்தை பின்பற்றி துன்பப்படுவதாக நினைக்கிறோமே... அவர்களிடமே கேட்கணும். அப்பதான் உண்மை புரியும். என்ன உண்மை? சிரமம் இருக்கான்னா இருக்கும். ஆனா, தப்பு பண்ணலைங்கற நிம்மதியும் இருக்கும். தர்மவழி வாழ்க்கைல இருக்கற பலன் இதுதான். அதனால, தர்ம வழியில் நிற்பவர்கள்கிட்ட துன்பமே தோத்து போயிடும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு அவர்கள் துன்பத்தில் இருப்பதுபோல இருக்கும். ஆனால், எந்தத் துன்பமும் அவர்களை ஒன்றும் செய்யாது.
கரண்ட் ஒயர், யார் தொட்டாலும் ஷாக் அடிக்கும். இது எல்லாருக்கும் தெரியும். ஆனால், ஒயர்மேன் தந்தி கம்பத்துல நின்னு அந்த ஒயரை முடுக்கறதை பார்த்திருப்போம். அவருக்கு ஏன் ஷாக் அடிக்கலை? அவர் கையில ஒரு க்ளவுஸ் போட்டிருப்பார். அது மாதிரி, தர்ம வழில வாழும்போது, அந்த தர்மமே ‘க்ளவுஸா’ இருக்கும். வாழ்க்கையில ஏற்படும் துன்பங்களான ‘ஷாக்’ அடிக்காம அவங்களை பார்த்துக்கும்.

 

Comments