முப்பெரும் தேவியராய்... கோட்டை மாரியம்மன்!

பிள்ளை வரம்...

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பிச்சம் பாளையம் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில். விஜயநகரப் பேரரசு மற்றும் மதுரை நாயக்கர் காலத்தில் இங்கே கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என்கிறது ஸ்தல வரலாறு.
புராதனக் கோயில்: விஜயநகரப் பேரரசு காலத்தில் இங்கு கோட்டை கட்டப்பட்டதாகவும், அதையடுத்து கோட்டைக்குள் அம்மனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து கோயில் அமைத்ததாகவும், அதனால் அம்மனுக்கு ஸ்ரீகோட்டை மாரியம்மன் எனத் திருநாமம் அமைந்ததாகவும் சொல்கின்றனர்.
மூலவரும் மூன்று தேவியரும்!: ஸ்ரீதுர்கை, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் ஒருங்கே இணைந்து காட்சி தரும் திருக்கோலத்தில் அமைந்திருக்கிறாள் ஸ்ரீகோட்டை மாரியம்மன். திருமுகத்தில் லட்சுமி கடாட்சம் பொங்க, யோக நிலை ஸ்ரீசரஸ்வதி தேவியின் அம்சமாகவும், ஆயுதம் ஏந்திய நிலை ஸ்ரீதுர்கையை நினைவூட்டுவதாகவும் அமைந் துள்ளதை வியப்புடன் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
ஸ்தல விருட்சம்: தொரட்டி மரம். 
வேண்டியது கிடைக்கும்: திருமணத் தடை, தொழிலில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை எனத் தவிப்பவர்கள், செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளிலும், மாதாந்திர அஷ்டமி நாட்களிலும் தொடர்ந்து 12 வாரங்கள் வந்து, அம்மனுக்குத் திரிசதி அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டால், கல்யாண வரம், பிள்ளை பாக்கியம் கைகூடும்; தொழிலில் லாபம் மேலோங்கும்; குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்!
தவிர, எந்தக் காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், இங்கு வந்து அம்மனிடம் பூ வாக்குக் கேட்டு செயலாற்றுகிற பக்தர்களும் இருக்கிறார்கள்.
புலி சுட்டுப்பட்டான் கல்: ஒருகாலத்தில், இந்த ஊருக்குள் புகுந்து, மக்களை பயத்தில் கிடுகிடுக்கச் செய்த  புலியுடன் சண்டையிட்டுக் கொன்று, அந்தப் போராட்டத்தில் உயிர் நீத்த வீரன் ஒருவனின் நினைவாக இங்கு நடுகல் வைக்கப்பட்டதாம். அந்த வீரனே காவல் தெய்வமாக இருப்பதாக ஐதீகம்!
பரிவார தெய்வங்கள்: கோயிலில் உள்ள நாகர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றனர் பக்தர்கள். வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், இங்கு வந்து நாகருக்குப் பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொண்டால், நாக தோஷம் விலகும். தவிர, இங்கே உள்ள நவக்கிரகங்கள், தம்பதி சமேதராக அமைந்திருப்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசப்த கன்னியர், ஸ்ரீகருப்பராயன், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகியோரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.
மார்கழிச் சிறப்பு: மார்கழி மாதம் முப்பது நாட்களும் அதிகாலையில், சூரியோதயத்துக்கு முன்னதாக அபிஷேகமும், அதையடுத்து பூஜைகளும் நடைபெறும். அப்போது திருப்பாவை, திருவெம்பாவை, மற்றும் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள் பக்தர்கள். நெய் விளக்கேற்றி தீபமேற்றி னால், அடுத்து வரும் தை மாதத்தில் நல்ல வழிகாட்டுவாள் மாரியம்மன் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
அதேபோல், மார்கழி பௌர்ணமியில் சிறப்பு அன்னதானமும் நடைபெறும். மார்கழி முழுவதும் வந்து அம்மனைத் தரிசித்தால், நிம்மதி தேடி வரும் என்பது ஐதீகம்.

Comments