அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா!

இந்தியாவில் தமிழகம் மற்றும் கேரளாவில்தான் சாஸ்தா (ஐயப்பன்) வழிபாடு அதிகம். பிழைப்பு நிமித்தமாக நம்மூரில் இருந்து போய் வெளிநாடுகளில் செட்டில் ஆனவர்கள் அங்கும் நவம்பர் மாதம் துவங்கி ஐயப்ப வழிபாடு செய்கிறார்கள். அதோடு, மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து சபரிமலை வருகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், நகரவாசிகள் ‘ஐயப்பன்’ என்று கொண்டாடும் தெய்வத்தைக் கிராமவாசிகள் ஐயனாராகவும், சாஸ்தாவாகவும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழிபட்டு வருகிறார்கள். வரத - அபய முத்திரைகளுடன் கத்தி, கேடயம், தடி போன்ற ஆயுதங்களை தரித்திருப்பார். சாஸ்தாவின் வாகனம் - யானை. இவரது கொடி - சேவல். சாதவாகனன், காரி, சாத்தன் என்கிற பெயர்களும் ஐயனாருக்கு உண்டு.
சங்க காலத்திலும், பிற்பாடு வந்த சோழர்கள் காலத்திலும் ஐயனார் வழிபாடு சிறந்து விளங்கியதாக அறிய முடிகிறது.
ஸ்ரீஐயப்பனின் அவதாரம் நிகழ்ந்தது கேரள தேசம் என்பதால் அங்குள்ள சிவன், விஷ்ணு மற்றும் பகவதி அம்மன் ஆலயங்களிலும் ஐயப்பனுக்கு ஒரு சன்னிதி தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. எப்படி பகவதியைக் கேரளத்தவர்கள் கொண்டாடுகிறார்களோ, அதுபோல் ஐயப்பனையும் கொண்டாடி வருகிறார்கள்.
நாகரிக மாற்றம் மற்றும் இடமாற்றம் காரணமாக இன்று எந்த நகரத்தில் - எந்த நாட்டில் வசித்து வந்தாலும் சரி... வருடத்தில் ஏதேனும் ஒரு நாள் தங்களைக் காத்து அருளும் தெய்வமான ஐயனார் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று தங்கள் குல வழக்கப்படி தரிசித்துத் திரும்புவதை இன்றைக்கும் பின்பற்றி வருகிறார்கள் பக்தர்கள்.
துர்கை, விநாயகர், பைரவர் போன்ற திருமேனிகளுக்குப் பற்பல வடிவங்கள் இருப்பது போல் சாஸ்தாவுக்கும் பல வடிவங்கள் உண்டு. அவற்றில் குறிப்பாக, அஷ்டசாஸ்தா என்று எட்டு விதமான சாஸ்தா திருவடிவங்களை கிராம ஆலயங்களில் தரிசிக்கலாம்.
சம்மோகன சாஸ்தா, கல்யாண வரத சாஸ்தா, வேத சாஸ்தா, சந்தான ப்ராப்தி சாஸ்தா, மகா சாஸ்தா, ஞான சாஸ்தா, தர்மசாஸ்தா, வீர சாஸ்தா ஆகியோரே அந்த வடிவங்கள்.
அஷ்ட சாஸ்தாக்களை வணங்குவதால், என்னென்ன பலன்கள் நமக்குக் கிடைக்கும்?
சம்மோகன சாஸ்தா - இல்லற வாழ்வில் பூரண நிம்மதியைத் தருவார்.
கல்யாண வரத சாஸ்தா - செவ்வாய் தோஷம் போன்ற சகல தோஷங்களையும் போக்கி, மங்கல வாழ்வு அருள்வார்.
வேத சாஸ்தா - நமது ஆன்மிக வாழ்வுக்கு அடித்தளம் போடுபவர்.
சந்தான ப்ராப்தி சாஸ்தா - குழந்தைச் செல்வங்களை வழங்கி, இல்லத்தில் மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திருக்க அருள்பவர்.
மகா சாஸ்தா - ராகு தோஷம் போன்ற நாக தோஷத்தைப் போக்கி வாழ்வில் சிறந்த ஏற்றம் தருபவர்.
ஞான சாஸ்தா - ஸ்ரீதட்சிணாமூர்த்தியைப் போல் ஞானம் பெருகுவதற்கும், கல்வியில் சிறந்திருப் பதற்கும் அருள்புரிபவர்.
தர்ம சாஸ்தா - சனி பகவானின் தோஷங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பக்தர்களைக் காத்தருளி, அவர்களைக் காப்பவர்.
வீர சாஸ்தா - தீயவர்களிடம் இருந்து பாதுகாப்பவர்.
தவிர, நாம் தரிசிக்கும் சாஸ்தா திருமேனியையே அஷ்ட சாஸ்தா வடிவங்களாக எண்ணி வழிபட்டால், எல்லா நலன்களும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.
பார்வை இல்லாதவர்களுக்கும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் பார்வைத் திறன் அருளக் கூடிய ஒரு சாஸ்தா, கன்யாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஆசிராமம் என்ற ஊரில் அமைந்துள்ளார். இந்த சாஸ்தாவை ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று அழைக்கின்றனர்.
அத்திரி முனிவரின் ஆசிரமம் இந்த ஊரில் அமைந்திருந்ததால், ‘ஆசிரமம்’ என்றே இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில் இது ‘ஆசிராமம்’ ஆகிவிட்டது. பத்தினிக்கு மிக சிறந்த உதாரணமாகத் திகழ்ந்த அனுசுயா தேவி, அத்திரி முனிவரின் மனைவி என்பதும், குடும்ப வாழ்வில் ஒரு குத்துவிளக்காகத் திகழந்தவர் என்பதும் நாம் அறிந்த ஒன்று.
சாஸ்தாவை குலதெய்வமாகக் கொண்ட ஆசிராமம் கிராமத்து மக்கள் ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன் தங்கள் கிராமத்தில் சாஸ்தாவுக்கு ஒரு விக்கிரகம் செய்து, ஒரு கோயிலும் கட்டி வழிபட்டு வந்தனர்.
ஒரு நாள் பார்வை தெரியாத வழிப்போக்கர் ஒருவர் இந்த ஆலயம் வழியாகத் தட்டுத் தடுமாறிச் சென்றிருக்கிறார். “இங்கே ஓய்வெடுக்க இடம் ஏதும் இருக்கிறதா?” என்று அவர் விசாரித்தபோது, உள்ளூர்க்காரர் ஒருவர் அவரது கையைப் பிடித்து இந்த ஆலய வாசலில் அமர வைத்தார். “இது இங்குள்ள சாஸ்தா ஆலயம். சற்று ஓய்வெடுத்த பின் நீங்கள் பயணத்தைத் தொடருங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
‘ஆகா... சாஸ்தா ஆலயத்துக்கு வந்திருக்கிறோமே... நமக்கோ பார்வை கிடையாது. எனவே மனக் கண்ணால் வழிபடுவோம்’ என்று சாஸ்தாவை இதயத்துக்குள் வைத்து வழிபட்டு ஒரு தூணில் சாய்ந்தார். அப்போது யாரோ ஒருவர் தன் பக்கத்தில் வந்து அமர்வதை உணர்ந்தார் பார்வையற்ற வழிப்போக்கர். வந்து அமர்ந்த அன்பர், இவரது பார்வையற்ற கண்களில் எதையோ தடவுவதை உணர்ந்தார் (தடவப்பட்டது கண்மை. இதை அஞ்சனம் என்பர்).
அடுத்த விநாடி நடந்ததுதான் அற்புதம்... பார்வையற்றவருக்குப் பார்வை கிடைத்து விட்டது. தன் கண்களில் எதையோ தடவிய ஆசாமியைத் தேடினார்... அவ்வளவு சுலபத்தில் அகப்படக் கூடியவரா சாஸ்தா?
சற்று முன் வரை பார்வை இல்லாமல் மனக் கண்ணால் தரிசித்த சாஸ்தாவை இப்போது இரு கண் கொண்டு தரிசிக்க முடிகிறதே என்று நெகிழ்ந்து கண்ணீருடன் சாஸ்தாவைப் பார்த்து நன்றி சொன்னார். தன் கண்களில் தடவப்பட்டது கண்மை என்பதைப் புரிந்து கொண்டார். அந்த வேளையில் இந்த சாஸ்தா இவருக்குக் காட்சி தந்து அருளினார். அதன் பின் ‘அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ ஆனார் இவர் (கண்டன் என்றால், மணிகண்டன். சாஸ்தாவின் இன்னொரு திருநாமம்).
இங்கு எழுந்தருளியுள்ள சாஸ்தா, வலக் காலைக் குத்திட்டு இடக்கால் பெருவிரலைத் தரையில் ஊன்றிய நிலையில் பக்தர்களுக்குத் திருக்காட்சி தருகிறார். வலக்கையில் கதாயுதம் ஏந்தியும், திருமார்பில் பதக்கம் - பூணூல் அணிந்தும், சுருள்முடியைக் கொண்டையாக முடிந்தும் காட்சி தருகிறார். இத்தகைய சாஸ்தா அமைப்பு வெகு அபூர்வம் என்கிறார்கள் இந்த ஊர்க்காரர்கள்.
கண்பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இங்கே வந்து மனக் கண்ணால் சாஸ்தாவை வழிபட்டால் நிவாரணம் கிடைப்பது உறுதி. பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்தால், நலம்பெறலாம்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ள இந்த சாஸ்தா ஆலயத்தை அனைவரும் வணங்கி, அருள் பெற வேண்டும்.

Comments