இறைவனுக்கு அணிவித்த மாலையை வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு சூட்டலாமா?

பொதுவாக, தெய்வங்களுக்கு ஒருமுறை சாத்தப்பட்ட பூமாலைகள் ‘நிர்மால்யம்’ எனப்படும். ஆகவே, அதே பூமாலையை அதே தெய்வத்துக்கோ, வேறு தெய்வங்களுக்கோ மறுபடியும் அணிவிக்கக் கூடாது. பஞ்சலோக விக்ரக வடிவிலோ அல்லது லிங்க வடிவிலோ அல்லது படங்கள் வடிவிலோ அல்லது யந்திர வடிவத்திலோ தெய்வங்கள் இருக்கலாம். எப்படிப்பட்ட வடிவத்தில் இருந்தாலும், ஒரு தெய்வத்துக்கு ஒருமுறை பூமாலை அணிவிக்கப்பட்டால், அதே பூமாலையை மறுபடியும் அந்த தெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வங்களுக்கோ அணிவிக்கக் கூடாது.
தவிர, ஆலயத்தில் தெய்வங்களுக்கு சாத்தப்பட்ட பூமாலையை பிரசாதமாக நம்மிடம் தந்தால், அதை நாமோ, நம்மைச் சேர்ந்தவர்களோ பக்தியுடன் போட்டுக் கொள்ளலாம். பிறகு அதை, மற்றவர்களின் கால்கள் படாத தூய்மையான இடத்தில் வைத்துவிட வேண்டும். மறைந்த முன்னோர்களும் ஒருவிதத்தில் தெய்வத்துக்குச் சமமானவர்கள் என்பதால், முன்னோர்களின் படத்துக்கும் நிர்மால்ய தோஷமுள்ள இந்தப் பூமாலையைப் போடக்கூடாது.
புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட பூமாலைக்குத்தான் இந்த விதி பொருந்தும். தங்கம், வெள்ளி, உத்திராட்சம், ஸ்படிகம், துளசி போன்ற மாலைகளுக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது என்பதால், ஒரே மாலையை பல தெய்வங்களுக்கும் மாறி மாறி அணிவிக்கலாம். ஆனாலும், தங்கம், வெள்ளி போன்ற மாலைகளையும் ஒருமுறை நாம் (மனிதன்) அணிந்து கொண்டுவிட்டால், அவற்றை மறுபடி தெய்வத்துக்கு அணிவிக்கக் கூடாது.

குற்றங்கள் புரிந்தவர் அதற்குப் பிராயச்சித்தமாக செய்யும் அன்னதானத்தை உண்பதால் உண்பவருக்கு தோஷம் உண்டாகுமா?


தானங்களிலேயே அன்னதானத்துக்கு தனிச் சிறப்புண்டு. ஒருவருக்கு அன்னதானம் செய்வதால் அளிப்பவர் உணவை மட்டும் அளிக்கவில்லை.
மாறாக, சாப்பிடுபவனுக்கு பிராணனையே (உயிரையே) தானம் செய்கிறார். அதாவது, அன்னதானம் செய்வதால் சாப்பிடும் நபருக்கு (ஆக்ஸிஜன்) பிராணவாயு அதிகரிக்கிறது. அதனால் உடல் வலிமை கிடைக்கிறது. உடல் வலிமையால் பற்பல நல்ல புண்ணியச் செயல்களைச் செய்து தர்ம காரியங்களில் ஈடுபடுகிறான். அதனால் நல்ல செயல்களில் சிரத்தை (ஈடுபாடு) ஏற்படுகிறது. அதனால், எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்னும் பகுத்தறிவும் கிடைக்கிறது. பகுத்தறிவால் மனதுக்குத் தெம்பும் சந்தோஷமும் ஏற்படுகிறது. மன நிம்மதியால் அறிவாற்றல், நினைவாற்றல் ஏற்படுகிறது. நினைவாற்றலால் மெஞானம் கிட்டுகிறது’ என்பதாக தைத்திரீய உபநிஷத், அன்னதானத்தின் பெருமையை விளக்குகிறது.
ஆகவேதான், அன்னதானம் அனைத்து தானங்களிலும் மிகச்சிறந்த தானமாகவும் அனைத்துவிதமான பாபங்களைப் போக்குவதாகவும் சாஸ்திரத்தால் வர்ணிக்கப்படுகிறது. ஆகவே, எந்த ஒரு பலனையும் கருதாமல், மெஞானம் (ஆத்ம ஞானம்) கிடைக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அன்னதானம் செய்வது சிறந்தது.
இதில் கலந்துகொண்டு சாப்பிடும் நபர்களுக்கும் நல்ல பலன்கள் நிச்சயம் கிட்டும். எந்த தோஷமும் கிடையாது. ஆனால், ஒருசில பாபங்களைச் செய்துவிட்டு அதைப் போக்கிக் கொள்வதற்காகச் செய்யப்படும் அன்னதானத்தில் கலந்துகொண்டு சாப்பிடும் நபரிடத்தில், அன்னதானம் செய்பவர் செய்த பாபத்தில் ஒரு பங்கு பாபம் வந்துசேரும். ஆனாலும், அன்னதானத்தில் சாப்பிடுபவர் வசதி படைத்தவராக இருந்தால் மட்டுமே பாபம் வந்துசேரும். சாப்பிடுபவர், சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தால், சாப்பிடும் நபருக்கு எந்த ஒரு (அன்ன) தோஷமும் ஏற்படாது. அன்னதானம் செய்பவருக்கும் பலன் கிட்டும். இதுவே சாஸ்திர நியதி. அன்னதானம் மட்டுமல்ல, எந்த ஒரு பொருளையும் இலவசமாக - தானமாகப் பெறும்போது, அந்தப் பொருள் அவரிடம் இல்லை என்றாலோ, அந்தப் பொருளை அவரால் சேகரிக்க இயலாது என்றாலோ, அப்போது அந்தப் பொருளை தானமாகப் பெறுவதால், பெற்றுக்கொள்பவருக்கு எந்த ஒரு தோஷமும் பாதிப்பும் ஏற்படாது.

 

Comments