தீபத் துளிகள்

விளக்கு ஏற்றும் நேரம்!
‘ஊருக்கு முன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும்’ என்பது பழமொழி. சூரிய உதயத்துக்கு முன் பிரம்ம முகூர்த்த வேளையான காலை 4.30 முதல் 6 மணி அளவில் விளக்கு ஏற்றினால் பெரும் புண்ணியம். இதனால், முன் வினை பாவம் போகும். மாலை 4.30 முதல் 6.00 பிரதோஷ வேளை. அது, சிவபெருமானுக்கும், நரசிம்மருக்கும் உகந்த வேளை. அப்போது தீபம் ஏற்றினால் திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும் என்பர். இருப்பினும், மாலை 6.30க்கு அவசியம் விளக்கு ஏற்ற வேண்டும். இது அனைவருக்கும் ஏற்ற நேரம். விளக்கை கைகளால் வீசிஅணைக்கக் கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக திரியை பின்னிழுத்து அழுத்தலாம்.
கார்த்திகை விளக்கு !
பொதுவாக, எல்லா நாட்களிலும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். இருந்தாலும் கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் விளக்கேற்றுவதும் மங்களங்களைத் தருவதுடன், வாழ்வை ஒளிமயமாக்கும். மேலும், அக்னியின் வாயிலாக பகவானுக்கு அவிர்பாகம் அளித்துச் செய்யும் யாகத்துக்கு நிகரான பலனைத் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலவில்லை எனில், துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய தினங்களிலாவது தீபம் ஏற்ற வேண்டும்.
மாவலியோ மாவலி...
மஹாபலி சக்ரவர்த்தி முற்பிறவியில் எலியாக இருந்தார். சிவாலயத்தில் கார்த்திகை பௌர்ணமியன்று லேசாக எரிந்துகொண்டிருந்த தீபத் திரியைச் சற்று இழுத்ததால் தீபம் அதிக ஜோதியுடன் பிரகாசித்தது. எலி பயந்தோடியது. அறியாமலேனும் தீபத்தை பிரகாசமாக எரியவைத்த புண்ணியத்தால் அந்த எலி மறு ஜன்மத்தில் மஹாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தது. பூர்வ ஜன்ம நினைவும் அடைந்தது. அந்த மஹாபலி தன் ஆட்சியில் கார்த்திகை தீப உற்ஸவத்தை அளவுகடந்த சிரத்தையுடன் அனுஷ்டித்து வந்தார். தான் பரமபதத்தை அடையும் காலத்தில் பகவானிடம் பிரார்த்தித்தார்: ‘உலக மக்கள் எல்லோரும் இக்கார்த்திகை தீப உற்ஸவத்தை கடைப்பிடித்து நன்மை பெற வேண்டும்’ என்று! அதனால் கார்த்திகை தீப உற்ஸவம் செய்யும் மக்களுக்கு இரு மடங்கு நன்மை உண்டானது. அவரிடம் காட்டும் நன்றியே சிறுவர்கள் கூவும் ‘மாவலியோ மாவலி’.
தீப மந்திரம்!
திருக்கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றும்போது சொல்ல வேண்டிய மந்திரம் இது.
கீடா: பதங்கா: மசகா: ச வ்ருஷா:
ஜல ஸ்தாலே யே விசரந்தி ஜீவா:
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகின:
பவந்து நித்யம் ச்வபசாஹி விப்ரா:

பொருள்: புழு, பட்சி, கொசு, மரங்கள், நாடோடி, மனிதர்கள், தரையிலும் நீரிலும் சஞ்சரிக்கின்ற சகல உயிரினங்களாயினும் சரி, இந்த தீபத்தைப் பார்த்த மாத்திரத்தில் அடுத்த பிறவி என்று இல்லாமல், நித்தியத் தன்மை அடைந்தவராகிறார்கள்.
கார்த்திகை வழிபாடு!
கார்த்திகையில் தினமும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலனை அடைவர். இம்மாதத்தில், விஷ்ணுக்கு பூக்களால் அர்ச்சித்து பூஜை செய்தால், தேவர்களும் அடைவதற்கு அரிதான மோட்ச நிலையை அடைவர். துளசியால் அர்ச்சித்தால், சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைக்கும் ஒவ்வொரு அசுவமேத யாகப் பலனை பெறுவர்.
மது, மாமிசம் நீக்கி, விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவர். மாமிச உணவைக் கைவிடாதவர் புழு, பூச்சிகளாய்ப் பிறவி எடுப்பர் என்கிறது பத்மபுராணம்.
 
தீபம் ஏற்றும் திசைகள்!
தீபம் ஏற்றும்போது, கிழக்கு நோக்கி ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்கும். மக்களிடையே நன்மதிப்பு கிட்டும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் சகோதர ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லை நீங்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றினால், சர்வ மங்களமும் உண்டாகும். செல்வ வளம் சேரும். தெற்கு திசை நோக்கி ஏற்றக் கூடாது. ஏற்றினால், எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் ஏற்படும்.

Comments