அண்ணாமலையும் அருள்மாமலையும்!

‘மலை மருந்திட நீ மலைத்திடவோ அருள்
மலை மருந்தாய் ஒளிர் அருணாசலா’

- அருணாசல அட்ச ரமணமாலை
"இவ்வுடலை ‘நான்’ என்று மயங்கும் மலைப்புக்கு மருந்து தர நீ மலைக்கலாமா? நீதான் அருள் மருந்து மலையாக இருக்கின்றாயே"
நம் பிறவிப் பிணி தீர்க்கும் மாமருந்தாய் மலை வடிவில் ஈசன் வீற்றிருக்கும் திருத்தலம் திருவண்ணாமலை! அதனுள் அருட்சுடராய் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி கலந்திருப்பது, அருணாசலமும், அருள்மலையும் ஓருருவாய் என்றும் நம்மை காத்துக்கொண்டிருக்கவோ?
கார்த்திகை தீபத்துக்குப் பெயர் பெற்ற இம்மலை மீது பகவான் ரமணர் கொண்டிருந்த அன்பும், பக்தியும் அளவிட முடியாதது. திருவண்ணாமலை வெறும் மலை அல்ல; திருஞான சம்பந்தர் ‘ஞானத்தின் உரு’ என்று கூறியபடி, ஞானமே உருவான புனிதமலை’ என்கிறார் பகவான். ஆத்ம விசாரத்துக்கு அடுத்தபடியாக அவர் நமக்குப் பரிந்துரை செய்வது உடலுக்கு ஆரோக்யத்தையும், உள்ளத்துக்கு ஆத்ம சாந்தியையும் அளிக்கும் ‘கிரிவலம்’தான்.
இங்கு தவம் செய்துகொண்டிருந்த பார்வதி தேவிக்கே திருக்கார்த்திகை தினத்தன்று, பிரதோஷ காலத்தில் கிரிவலம் வந்த பிறகுதான் தீப தரிசனம் கிடைத்ததாம்.
அருணாசலேஸ்வரர் நந்திகேஸ்வரருக்கு கிரி பிரதக்ஷிண மகிமையைப் பற்றிக் கூறியதை ஸ்ரீரமணரும் தன் பக்தர்களுக்கு
‘பிர... நம் எல்லாப் பாவங்களையும் போக்கும்
த...நம் விருப்பங்களை நிறைவேற்றும்
க்ஷி... மறுபிறவியை ஒழிக்கும்
ணம்... ஞானத்தையும் முக்தியையும் அளிக்கும்’

என்று எடுத்துக் கூறுகிறார். மேலும் இம்மலையை வலம் வர ஒரு அடி எடுத்து வைத்தால் யாகம் செய்த பலனும், இரண்டு அடி எடுத்து வைத்தார்க்கு இராஜ சூய யாகம் செய்த பலனும், மூன்றடி வைத்தவர்களுக்கு அசுவமேத யாகம் செய்த பலனும், நான்கடி வைத்தவர்களுக்கு எல்லா யாகத்தின் பலனும் கிடைக்கும்.
கிரிவலத்தின்போது சித்தர்களும் யோகிகளும் சூட்சும சரீரத்தில் வலம் வந்துகொண்டிருப்பதை பகவானே பார்த்திருக்கிறார்! அவர்களுக்கு இடையூறு இல்லாது சாலையின் இடப்பக்கமாகவே பிரதக்ஷிணம் செய்தால் அவர்களையும் சேர்த்து வலம் வந்த பலன் நமக்குக் கிடைக்கும்.
ஒருமுறை கிரிவலம் சென்றுவிட்டால், மறுபடி, மறுபடி செல்ல வேண்டும் என்றே தோன்றும்! ‘நம்மால் முடியாது’ என்று நினைப்பவர்களைக்கூட தன் பேரருளினால் நடக்க வைத்துவிடுவார் அண்ணாமலையார்!
ஸ்ரீரமணர் தன் பக்தர்களுடன் கிரிவலம் வரும்போது சில சமயங்களில் - வழியில் உள்ள தீர்த்தங்கள், ஆஸ்ரமங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதுடன், சற்று ஓய்வெடுத்துக்கொண்டு கிரிவலத்தைத் தொடர மூன்று நாட்கள்கூட ஆகிவிடுமாம்.
பாலயோகியாக திருவண்ணாமலைக்கு வந்த நாளிலிருந்து ஜீவசமாதியாகும்வரை எங்கும் செல்லாது, அசையா மாமலையாக இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மோனச்சுடராக ஒளிர்ந்துகொண்டிருக்கும் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகளையும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையையும் தரிசித்து நலம் பெறுவோம்!
கிரிவல ஆசை!
ஒரு சமயம் டி.எஸ். சாஸ்திரி என்பவர், தமது துணைவியாருடன் பகவானைக் காண வந்தார். சாஸ்திரியின் மனைவி, உடல் பருமனால் சாதாரணமாகக்கூட நடக்க இயலாதவர். அதனால் கிரிவலம் செய்ய வேண்டுமென்ற அவரது ஆசை நிராசையாகவே இருந்தது. இதை உணர்ந்த பகவான், சாஸ்திரிகளிடம் உங்கள் மனைவியைக் கிரிவலம் செய்ய அழைத்துப் போங்கள்" என்று கூற, எப்படி பகவானே, அவளால் முடியாது" என்று மறுத்தார் சாஸ்திரி. முடியும், கூட்டிப் போங்கள்" என்றார் பகவான். அப் பொழுதும் நம்பிக்கை இல்லாமல் தன் பின்னால் ஒரு வாடகை வண்டியை அமர்த்தி பின்தொடர ஏற்பாடு செய்து விட்டு மனைவியை கிரிவலத்துக்கு அழைத்துச் சென்றார். என்ன ஆச்சர்யம்! எந்த சிரமமும் இல்லாது அவர் மனைவி நடந்து கிரிவலத்தை முடித்து வந்ததை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இது பகவானின் பேரருள் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

 

Comments