நவசக்தி நாயகிகளின் நாமங்கள்!

இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி, ஆதிசக்தி, பராசக்தி, குடிலாசக்தி என்ற ஆறு குணங்களைக் கொண்ட அம்பாள் ஒரே ரூபத்தில் அனைத்து குணங்களையும் ஒடுக்கிக் கொண்டு கருவறையில் வீற்றிருக்கும் ஒன்பது சக்தி தேவி (நவசக்தி) ஆலயங்கள் நம் நாட்டில் உள்ளன. தினசரி காலையில் நவசக்தி நாமங்களை மனதில் இருத்தி வணங்கினாலே போதும், சர்வ மங்களமும் பெறலாம்.
மகாசக்தியாக காஞ்சிபுரத்தில் காமாட்சி தேவி, ஸ்ரீ சைலத்தில் பிரம்மராம்பா தேவி, கோல்ஹாபூரில் மகாலக்ஷ்மி தேவி, உஜ்ஜயினியில் காளிகா (ஹரசித்தி) தேவி, அலகாபாத்தில் லலிதா (அலோபி) தேவி, விந்தியாச்சலில் விந்தியா வாசினி தேவி, காசி எனப்படும் வாரணாசி கே்ஷத்ரத்தில் விசாலாட்சி தேவி, காட்மண்டில் குஹ்யகேஷ்வரி தேவி, கயா தலத்தில் மங்கள தேவி என்ற திருநாமங்களுடன் அருளாட்சி செய்கிறாள். அனுதினமும் அன்னையின் பாதம் பணிவதுடன், நவராத்திரி நாட்களிலும் வணங்கி நவசக்தி அருளைப் பெற்று நலம் பெறுவோம்.
ரவேஸ்ஜி (சக்தி பீடம்)
குஜராத் மாநிலத்தில் உள்ளது இந்த சக்தி பீடம்.
பாண்டவர்கள் வழிபட்ட புராதனமான ஸ்தலம் இது. இங்குள்ள புனிதகுளம் தேவீசர்சரோவர் எனப் படுகிறது. மிகச் சிறிய இக்கோயிலில் ஒரே கருவறைக்குள் ஒரே பீடத்தில் வரிசையாக அம்பேமா, ரவேஸ்ஜிமா, மோமாயிமா, கோடி யார்மா, ஆஷாபுராமா என்று ஐந்து அம்பிகைகள் செதுக்கி வைத்தாற்போல சுயம்பு ரூபத்தில் அழகாக தரிசனம் தருவதைக் காண கண்கோடி வேண்டும்.
நவராத்திரியில் சொல்ல வேண்டிய ஸ்ரீதுர்கா, ஸ்ரீலஷ்மி, சரஸ்வதி துதி
நமோஸ்து தேவ்யை சர்வஜீவ சரண்யை!
நமோஸ்து மாதா துர்கே பவானி!
நமோஸ்து லக்ஷ்மி ஸர்வசுப காரணி!
நமோஸ்து வாணீ சகலகலா மாதா!


காலமெல்லாம் காத்திடும் காமாக்ஷி!

 
சொர்ண விக்கிரகத் திருமேனியில் திருக்காட்சி நல்கும் ஸ்ரீ பங்காரு காமாட்சி, தன்னை நாடிவரும் அடியார்களுக்கெல்லாம் பொன்னையும் பொருளையும் வரமாகத் தந்தருள்கிறாள்.
தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ளது ஸ்ரீ பங்காரு காமாக்ஷி அம்மன் ஆலயம். காஞ்சி மகா பெரியவரின் அருளாசியால் எழுப்பப்பட்ட இத்திருக்கோயிலில், நவராத்திரி மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒன்பது நாட்களும் அம்மனுக்குச் சிறப்பு அலங் காரங்களும், பூஜைகளும் அமர்க்களப்படும்.
ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் துவங்குகிறயாக பூஜையில், அம்மனின் நாம பாராயணம், ஸ்ரீ சண்டி ஹோமம், வேத பாராயணம் என விமரிசையாக நடைபெறும். நவராத்திரி விழாவில், அம்மனுக்குத் திருமஞ்சனம், நவாவரண பூஜை ஆகியவையும் விசேஷம். 9-ஆம் நாளன்று, யாக பூஜை நிறைவுற்று கலச நீரால் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். மாலையில் சரஸ்வதி பூஜை நடைபெறும். அன்றைய தினம் விடிய விடிய ஆலயம் திறந்திருக்கும். (நடுநிசிக்குப் பிறகு) சிறிது நேரம் நடை சாத்தப்படும். பிரம்ம முகூர்த்த வேளையில் நடை திறக்கப்படும். விடிந்ததும் விஜயதசமி பூஜைகள் நடைபெறும்.
சொர்ணத்தால் ஆன திருமேனியில், கிழக்குப் பார்த்தபடி அருள்பாலிக்கிறாள் ஸ்ரீ பங்காரு காமாட்சி. அருகிலேயே ஸ்ரீ காமகோடி அம்மனும் சன்னிதி கொண்டுள்ளாள். நவராத்திரி தினங்களில், அம்மனுக்கு புனுகு சார்த்தி வழிபடுவது சிறப்பு.

Comments