சங்கல்பம், மகாசங்கல்பம் விளக்கம் என்ன?

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், செவ்வாய் தோஷம் உள்ள பெண்களைத்தான் மணம் செய்ய வேண்டுமா?


 
மற்ற கிரகங்களை விட செவ்வாய் கிரகத்துக்கு ஜோதிடத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. குறிப்பாக, ஆண் - பெண் இருவரது ஜாதகத்தையும் இணைத்து வைத்து திருமணத்துக்காக பொருத்தம் பார்ப்பதில் செவ்வாய் கிரகத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ஏனென்றால், செவ்வாய் கிரகம் மூலம் ஒருவரின் உடலில் ஓடும் ரத்தத்தைப் பற்றிய விபரங்களை துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், அதிக வெப்பமுடைய கிரகமான பூமிக்கு அதிபதியான செவ்வாய் கிரகம் மூலம் ஒருவர் இந்த பூமியில் எவ்வாறு வாழ்க்கையை நடத்துவார், எங்கு வாழ்வார், எப்படி வாழ்வார்? என்பதையும், மன வலிமை, உடல் வலிமை உண்டா? இல்லையா? என்பதையும் துல்லியமாகக் கணக்கிட்டு அறிந்து கொள்ள முடியும். ஆகவே, ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தை பரிசீலித்து திருமணப் பொருத்தம் பார்ப்பது முக்கியமானது.
இவ்வாறு பரிசீலிக்கப்பட்ட ஜாதகத்தில் செவ்வாய் கடக ராசியில் நீசம், லக்னத்திலிருந்து 8, 12ஆமிடத்தில் மறைதல் போன்றவற்றால் தோஷமுள்ளதாக இருந்தால் - பொதுவாக, அது செவ்வாய் தோஷம் எனப்படும். இவ்வாறு செவ்வாய் தோஷ முள்ளவர்கள் அதற்கான பரிகாரத்தை செய்தாலும்கூட மிகக் குறைவான அளவாவது செவ்வாய் தோஷம் இருக்கத்தான் செய்யும். ஆகவே, அதேபோல் செவ்வாய் தோஷமுடைய மற்றொரு ஜாதகத்துடன் இணைத்து திருமணம் நடத்தினால் அந்த செவ்வாய் தோஷம் விலகி நன்மை கிட்டும். இது செவ்வாய் தோஷத்துக்கு மட்டுமல்ல; குழந்தை பாக்கியத்தைத் தரும் குரு, ஆயுளைத் தரும் சனி முதலான அனைத்து கிரகத்துக்கும்தான்.
நெகடிவ் + நெகடிவ் = பாஸிட்டிவ் என்னும் ஃபார்முலாவுக்கு ஏற்ப, ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகம் தோஷமுள்ளதாக இருந்தால் அதே கிரக தோஷமுள்ள ஜாதகத்துடன் இணைத்து திருமணம் செய்து வைத்தால் கருத்தொற்றுமை ஏற்பட்டு வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

சங்கல்பம், மகாசங்கல்பம் விளக்கம் என்ன?

அபிஷேகம், அர்ச்சனை, மந்திர ஜபம், ஹோமம், புண்ணிய நதிகளில் ஸ்நானம் போன்ற எந்த ஒரு (ஆன்மிகச்)செயலையும் செய்ய ஆரம்பிக்கும் முன்பாக, ‘இந்தச் செயலை குறிப்பிட்ட இந்த இடத்தில் வசிக்கும் நான், இந்தக் காலத்தில், இன்ன பலனைக் குறித்து, இந்த மகரிஷி அல்லது புஸ்தகத்தில் சொன்னபடி, இந்த வழிமுறையை ஒட்டி செய்யப் போகிறேன்’ என்று மனதால் தீர்மானித்துக் கொண்டு அதை வாயால் சொல்வதே சங்கல்பம் எனப்படுகிறது.
இவ்வாறு சங்கல்பம் செய்துகொள்ளும் நபரே செய்யப்போகும் பூஜை, ஜபம், அர்ச்சனை, ஹோமம் போன்ற கர்மாக்களுக்கு யஜமானர் எனப்படுகிறார். செய்யும் கர்மாக்களின் பலன் இவ்வாறு சங்கல்பம் செய்து கொள்பவருக்குத்தான் சென்றடையும்.
ஆகவே, சாஸ்திரத்தில், மகரிஷிகளின் வாக்யத்தில் நம்பிக்கை வைத்து, முன்னோர்களின் வழக்கத்தை ஒட்டி நாம் செய்யும் பூஜை, மந்திர ஜபம், ஆலய அர்ச்சனை, அபிஷேகம், ஹோமங்கள் மற்றும் வீட்டில் செய்யும் திருமணம் கிருஹப்பிரவேசம் சீமந்தம், உபநயனம் போன்ற அனைத்து மங்கள நிகழ்ச்சிகள் என்று அனைத்து கர்மாக்களிலுமே சங்கல்பம் என்பது உண்டு.
இந்த சங்கல்பத்தையே சற்று விரிவான முறையில், அதாவது நாம் வசிக்கும் ஊர், இவ்வுலகத்தில் எங்கு அமைந்துள்ளது, என்னென்ன நதிகள், மலைகள், புண்ணிய க்ஷேத்ரங்களின் நடுவில் அமைந்துள்ளது போன்ற விபரங்களையும், அத்துடன் எதற்காக அந்த கர்மாவை செய்கிறோம் என்னும் நமது விருப்பங்களையும், எந்த பாபங்களைப் போக்கிக் கொள்ள இந்த கர்மா செய்யப்படுகிறது என்று பாபங்களின் பிரிவுகளையும் விரிவாக எடுத்துச் சொல்வதே மகாசங்கல்பம் எனப்படும்.
குறிப்பாக, காசி, ராமேஸ்வரம் போன்ற க்ஷேத்ரங்களில், கங்கை, சமுத்திரம், காவேரி, தாமிரபரணி, கோதாவரி போன்ற புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்யும் முன்பாக, அந்த நதியின் கரையில் அமர்ந்து, இவ்வாறு மகாசங்கல்பம் செய்து கொண்டு அதன் பின்னர் ஸ்நானம் செய்வது வழக்கமாக உள்ளது.
ஆகவே, சங்கல்பம், மகாசங்கல்பம் என்னும் இரண்டுக்கும் சுருக்கம் - விரிவு என்பதைத் தவிர, மற்ற எந்த வேறுபாடும் கிடையாது. இரண்டுக்கும் பலன்கள் ஒரே மாதிரியாகத்தான் கிட்டும்.

எந்த செய்வினைக்கு எந்த கடவுளர்களை வணங்க வேண்டும்?

எந்தெந்த நோய்க்கு, என்னென்ன மருந்துகள் சாப்பிட வேண்டும்? எத்தனை நாள் சாப்பிட வேண்டும்? என்ன பத்தியம் இருக்க வேண்டும்? என்று ஓர் மருத்துவரிடம் கேட்டால், அவர் அதற்கு பதில் சொல்லாமல், ‘அப்படி அனைத்தையும் பட்டியலிட்டு சொல்ல முடியாது. குறிப்பிட்ட ஓர் வியாதியைச் சொன்னால் அதற்கான மருந்தை, பத்தியத்தைச் சொல்கிறேன்’ என்பார். அதுபோல்தான் இந்தக் கேள்வியும். செய்வினை என்பது மற்றவர் மூலம் நமக்கு ஏற்படும் துன்பம். மற்றவரின் துஷ்ட தெய்வ வழிபாடுகள், மந்திர பிரயோகங்கள், மனதிலுள்ள பொறாமை, அஸூயை போன்ற எண்ணங்கள். ஏன்? கெட்ட பார்வை போன்ற பலவும் பலவகையில் நம்மை பாதிக்கச் செய்யும். ஆகவே, என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தக்க, தெய்வ வழிபாடு போன்ற பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால், வியாதி வரும் முன்பாகவே, நேர்மையான வாழ்க்கை, தடுப்பு மருந்துகள் உபயோகித்தல் போன்றவை மூலம் வியாதிகள் வராமல் தடுக்க முயற்சிக்கலாம் அல்லவா? அதைப் போலவே நேர்மையாக சாஸ்திரம் கூறும் வாழ்க்கை, குறைவான ஆசை, நிறைவான செயல், தூய்மையான, நேர்மையான சிந்தனை, மந்திரம் ஜபம், பாராயணம் என தீவிரமான தெய்வ வழிபாடு, ஏழைகளுக்கு தானம் போன்றவற்றைச் செய்தால் எப்படிப்பட்ட செய்வினையும் நம்மை பாதிக்காது. ஆகவே, செய்வினை ஏற்பட்டிருக்குமோ என்னும் பயத்தை விலக்கி, நாம் நேர்மையாக வாழ்கிறோம், தெய்வத் தொடர்புடன் வாழ்கிறோம், நம்மை செய்வினைகள் ஒன்றும் செய்யாது என்னும் தன்னம்பிக்கையுடன் வாழ முயற்சிக்க வேண்டும்.

Comments

Post a Comment