ஜோகுளாம்பாள்

சக்தி பீடங்கள் 108 என்றும் 51 என்றும் பேதங்களுடன் சொல்லப்படுவது போன்றே, 18 என்றும் ஒரு கணக்கு உண்டு. அதுபற்றி ‘அஷ்டாதச சக்தி பீடங்கள் ஸ்துதி’ என்றொரு தோத்திரமும் உண்டு. ஸ்ரீநகர் முதல் திரிகோணமலை வரை உள்ளதாகச் சொல்லப்படும் அந்த 18 சக்தி பீடங்களில் ஆந்திரத்தில் உள்ளவை நான்கு. அவற்றில் ஒன்றுதான் இன்றைய தெலுங்கானா மாநிலம், மஹபூப் நகர் மாவட்டம், அலம்பூரில் உள்ள ஜோகுளாம்பா தேவி ஆலயம்! (மற்ற மூன்று: ஸ்ரீசைலம், பிட்டாபுரம் மற்றும் திராக்ஷாராமம்)
அன்னை சக்தியின் வாய், மேல் தாடை பற்களோடு விழுந்த இடமாகப் போற்றப்படுகிறது இத்தலம். துங்கபத்ரா நதியும் கிருஷ்ணா நதியும் இங்கே ஒன்றாகக் கலப்பதால் இத்தலம் ‘தக்ஷிண காசி’ என்று பெருமை பெறுகிறது. மேலும், ‘நவபிரம்மேஸ்வர தீர்த்தம்’ என்றும் போற்றப்படுகிறது. ஜோகுளாம்பா தேவியும் பாலபிரம்மேஸ்வர சுவாமியும் அலம்பூரின் முக்கிய தெய்வங்கள்.
நாகார்ஜுன மலைகளை ஆண்ட சாதவாகனர்கள், பாதாமி சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கல்யாணி சாளுக்கியர்கள், காகதீயர்கள், விஜயநகர மன்னர்கள், கோல்கொண்டாவை ஆண்ட குதுப் சாஹி மன்னர்கள் போன்றோரால் இத்தலம் பல காலமாக ஆளப்பட்டு வந்துள்ளது.
பிரம்ம தேவர் இவ்விடத்தில் தவம் செய்து சிவலிங்க பிரதிஷ்டை செய்ததால் இங்குள்ள சிவனுக்கு பிரம்மேஸ்வரர் என்று பெயர் வந்தது. இங்கு பிரம்ம தேவருக்கும் சிலைகள் உள்ளன. 14ஆம் நூற்றாண்டில் 1390இல் பாமினி சுல்தான்களால் புராதன ஜோகுளாம் பாளின் கோயில் அழிக்கப்பட்டபோது, தேவி விக்ரஹம் மற்றும் உபதேவிகளான சண்டி, முண்டி விக்ரகங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு பாலபிரம்மேஸ்வர சுவாமி கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
பின் 2005ல், அம்மன் கோயில் இருந்த பழைய இடத்திலேயே - 615 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘ரச ரத்னாகரம்’ என்ற நூலில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ரச சித்தர்’ என்ற சித்தர் விவரித்திருந்தபடியே ஜோகுளாம்பாள் ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது. அம்மன் விக்ரஹம் பால பிரம்மேஸ்வர சுவாமி ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய சண்டி, முண்டி விக்ரகங்களை சுவாமி கோயிலிலேயே இருக்கச் செய்து, புதிய சிலைகள் செய்து அம்மன் கோயிலில் ஸ்தாபித்துள்ளார்கள்.
ஜோகுளாம்பாள் தேவி மிகச் சக்தி வாய்ந்தவளாக உக்ர ரூபத்தில் இருப்பதால் அம்மனின் கருவறையைச் சுற்றி அகழிபோல் நீர்த் தேக்கம் அமைத்து குளிரச் செய்துள்ளனர். அம்மன் கரிய பெரிய கற்சிலையாக, யோகாம்பிகையாக அமர்ந்த நிலையில் தரிசனமளிக்கிறாள். எங்கும் காணாத விதமாக தலைப் பகுதியில் அடர்ந்த முடிகொண்ட கொண்டையில் பல்லி, தேள், வௌவால் மற்றும் மனித மண்டை ஓடு ஆகியவை காணப்படுகின்றன.
‘கிருக சண்டி’யாக வழிபடப்படும் இந்த அம்பிகையை ஜீவகளை இழந்த இல்லங்களில் துர்பிக்ஷம் நீங்கி சுபிக்ஷம் பெருகவும், வாஸ்து தோஷ நிவாரணத்துக்கும் வழிபட்டு பக்தர்கள் பாதுகாப்பு பெறுகின்றனர்.
சப்த மாதாக்கள், விக்னேஸ்வரர், வீணாபாணி வீரபத்ரர் விக்ரகங்களும் இக்கோயிலில் சிறப்பான சிற்பக் கலை அம்சங்களோடு தரிசனமளிக்கின்றன.
அலம்பூர்‘கோயில் நகர்’ என்று போற்றும்படியாக சிற்பக் கலைக்குப் பெயர் பெற்ற கோயில் வளாகங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் நவபிரம்மேஸ்வரர் கோயில்களும், காஞ்சி காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் கோயில்களும், ரேணுகா தேவி கோயிலும் பிரசித்த மானவை.
நவ பிரம்மேஸ்வரர்களின் பெயர்கள்: பால பிரம்மேஸ்வரர், குமார பிரம்மேஸ்வரர், அர்க்க பிரம்மேஸ்வரர், வீரபிரம்மேஸ்வரர், விஸ்வ பிரம்மேஸ்வரர், தாரக பிரம்மேஸ்வரர், கருட பிரம்மேஸ்வரர், சுவர்க்க பிரம்மேஸ்வரர், பத்ம பிரம்மேஸ்வரர். இந்த ஒன்பது ஆலயங்களும் சிவன் கோயில்களாகும். இவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. பாதாமி சாளுக்கியர்களால் கட்டப்பட்டவை. பல நூற்றாண்டு காலங்களுக்குப் பின்னரும் இன்றும் பாரதத்தின் சிறந்த சிற்பக் கலைச் செல்வத்தை உலகுக்குப் பறை சாற்றும் விதமாக உறுதியாக நிற்கின்றன.
ஒவ்வொரு பிரம்மேஸ்வரருக்கும் ஒவ்வொரு திவ்யமான சிற்ப அழகு கொஞ்சும் ஆலயங்களை சாளுக்கியர்கள் நிர்மாணித்தனர். கோயில் வளாகத்தின் இரண்டாவது வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் பிரதட்சிணமாக பாலபிரம்மேஸ்வரர் ஆலயத்தின் நடு மண்டபம் மற்றும் ரதத்தின் வடிவில் கட்டப்பட்டுள்ள கர்பகிருகம் இவற்றை தரிசிக்கலாம். கர்பகிருகத்தின் இரு புறமும் சண்டி, முண்டிகளின் விக்ரகங்கள் உள்ளன. இவை இரண்டும் அனைத்து விதத்திலும் ஜோகுளாம்பாளையே ஒத்திருக்கின்றன. சிவாலயத்தில் பிரமத கணங்களே துவார பாலகர்களாக இருப்பார். இங்கு பெண் மூர்த்திகளைக் காணும்போது வியப்பு ஏற்படுகிறது.
கர்ப கிருகத்தில் நான்கு ஸ்தம்பங்களின் மத்தியில் சிவலிங்கம் உள்ளது. இந்த ஸ்வாமியே பால பிரம்மேஸ்வரர், ஸ்தல புராணத்தில் இவர் ‘ஜ்யோதிர் ஜ்வாலா மயம் சிவம்’ என்று போற்றப்படுகிறார். ‘ரச சித்தர்’ என்ற மகா யோகாசாரியாரால் வணங்கப்பெற்ற இந்த சுவாமி பிரசித்தியான த்வாதச ஜோதிர் லிங்கங்களில் சேராவிட்டாலும், கே்ஷத்ர மகாத்மியத்தில் ஜோதிர்லிங்கம் என்றே குறிப்பிடப்படுகிறார். லிங்கத்தின் தலை பாகம் உள்ளங்கை போல் பள்ளமாக உள்ளது. சிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஒரு காலத்தில் இந்த அலம்பூர் ஜமதக்னி மகரிஷியின் ஆஸ்ரம பிரதேசமாக விளங்கியது. பாலபிரம் மேஸ்வரரையும் ஜோகுளாம்பாளையும் ஜமதக்னி முனிவரும் அவரது பத்தினி ரேணுகா தேவியும் வழிபட்டு வந்தனர்.
பலரும் அறிந்த ரேணுகாதேவியின் வரலாறு சிறு வித்தியாசத்துடன் இங்கு விவரிக்கப்படுகிறது. தந்தையின் ஆணைப்படி பரசுராமன் தாயின் தலையை துண்டிக்கிறான். துண்டிக்கப்பட்ட தலை உடலை விட்டு வெகு தொலைவில் சென்று விழுந்து விடுகிறது. அதனால், மீண்டும் பொருத்த முடியவில்லை. அத்தலையே அலம்பூரில் ‘எல்லம்மா’ என்ற கிராம தேவதையாக வழிபாட்டினை ஏற்று வருகிறது. தலையற்ற உடல் பகுதி ‘பூமா தேவி’யாக நவபிரம்மா ஆலய வளாகத்திலேயே சிறு சன்னிதியில் வழிபடப்படுகிறது. இந்த பூமா தேவியை மகளிர் மட்டுமே சென்று வழிபட அனுமதிக்கப்படுகிறது. இன்றைக்கும் பிள்ளைப் பேறு வேண்டி வெண்ணெய் தடவி மகளிர் பூஜித்து பலன் பெற்று வருகின்றனர்.
செல்லும் வழி:
கர்னூலிலிருந்து 27 கி.மீ., மஹபூப் நகரிலிருந்து 90 கி.மீ., ஹைதராபாத்திலிருந்து 220கி.மீ.
தரிசன நேரம் : காலை 7 மணி முதல் 1 மணி வரை. மாலை 2 மணி முதல் 8.30 வரை.

தொடர்புக்கு: 085022 41327

Comments