சிம்ம வாகினி

வன விலங்குகளில் அரசன் எனப் போற்றப்படுவது சிங்கம். வனங்களில் தனித்ததொரு புலியைக் கண்டு விடலாம். தனித்ததொரு சிங்கத்தைக் காண்பது அரிது. காரணம், அரசனும் குடிமக்களும் போலக் கூடிவாழும் இயல்புடையது சிங்கம். கூட்டமாகத்தான் அதனைக் காணலாம். தலைமைச் சிங்கம் தனது ஆற்றலால் தனது கூட்டத்தைக் காப்பது போல, அரசனும் தம் குடிமக்களைக் காக்கிறான் எனப்படுகிறது. அடர்ந்த பிடரியுடன் கம்பீரமாகத் தோற்றமளிப்பது சிங்கம். அதனால், அரசர்களைச் சிங்கத்தோடு ஒப்பிட்டுள்ளனர்.
அரசன் அமர்ந்திருக்கும் ஆசனமும் சிம்மாசனம் என்றே அழைக்கப்படுகிறது. சிறப்புக் கருதி அதனை வீரசிம்மாசனம் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு. அந்தப் பெயருக்கேற்ப அதன் உச்சியிலும் பக்கவாட்டிலும் சிங்கங்களின் உருவங்களை அமைத்துள்ளனர். பல்லவ மன்னர்கள் எடுப்பித்த ஆலயங்களில் இந்த சிம்ம வடிவத்தைக் காணலாம்.
இறைவன் - இறைவிக்கான வாகனங்களில் சிம்ம வாகனத்துக் கென்று தனிச் சிறப்பு. சிவபெருமானுக்குரிய பஞ்சாசனங்களில் மூன்றாவது ஆசனம் சிம்மாசனம். அது எட்டுச் சிங்கங்களால் தாங்கப்படுவதால், அஷ்டசிம்மாசனம் என்றழைக்கப்படுகிறது. அதனை எட்டுச் சிங்கங்கள் தாங்கு வதாகப் ‘பூஜாபத்ததி’ நூல்கள் கூறுகின்றன. அனைத்து சமய வழிபாடுகளிலும் சிங்கமும் அதன் உருவங்கள் பொறிக்கப்பட்ட சிம்மாசனமும் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளன.
கீர்த்தி என்பதற்குச் சிங்கம் என்றும் பொருள். ஆலயங்களில் அமையும் கோபுரங்களின் உச்சியில் இரு புறமும் பெரிய வட்டமான பிரபைகள் அமைந்திருக்க, அவற்றின் உச்சியில் விழித்த கண்களைக் கொண்ட சிங்கம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தச் சிங்க முகத்துக்குக் ‘கீர்த்தி முகம்’ என்பது பெயர்.
திருவிழாக் காலங்களில் தெய்வங்களைச் சிங்க வாகனத்தில் அமர்த்தி உலா வரச் செய்கின்றனர். இதற்கென ஆலயங்களில் மரத்தால் செய்து வண்ணங்கள் தீட்டிப் பொலிவுபடுத்தப்பட்ட சிங்க வாகனங்கள் உள்ளன. பெரிய திருக்கோயில்களில் வெள்ளியாலும் தங்கத் தாலும் செய்யப்பட்ட சிங்க வாகனங்கள் இருக்கின்றன. சிங்க வாகனங்களில் பாய்ந்து வரும் சிங்கம், பக்கவாட்டுச் சிங்கம், இருதலைச் சிங்கம், முத்தலைச் சிங்கம் என்று பல வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இருதலைச் சிங்கம் என்பது இரண்டு தலைகளையும், ஆறு கால்களையும் கொண்டது. மார்புக்கு மேலேயுள்ள உடலிலிருந்து இரண்டு கிளையாகப் பிரிந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. முத்தலைச் சிங்கம் தாவிப் பாயும் நிலையில் மூன்று தலைகள், மூன்று மார்புகளுடன் ஆறு முன்னங்கால்களையும், ஊன்றி நிற்கும் இரண்டு கால்களையும் கொண்டதாக எட்டுக் கால்களுடன் இருக்கின்றது. சென்னை, ஜார்ஜ் டவுனில் உள்ள கந்தக்கோட்டம் முருகன் ஆலயத்தில், இருதலைச் சிங்க வாகனம் உள்ளது. பொன் வண்ணத்துடன் பிரகாசிக்கிறது அந்த இருதலைச் சிங்க வாகனம்.
சிம்ம வாகனத்தில் உலா வரும் கோலத்தில் தெய்வங்களை தரிசித்து வணங்குவதன் மூலம், பகை நீக்கம், எதிர்ப்புகள் விலகல், தடைகள் மறைதல் என்றான நன்மைகள் விளைகின்றன என்கிறார்கள் பெரியோர்கள். அம்பிகை ஆலயங்களில் சிம்ம வாகனம் பக்க வாட்டில் நிற்பதாக அமைகிறது. இதிலும் பின்னங் கால்களை ஊன்றித் தாவி முன்னங்கால்களில் வலிய பூங்கொடியைப் பற்றிக் கொண்டிருப்பது போல் அமைக்கப்படுகிறது. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் தனிசன்னிதி கொண்டிருக்கும் துர்கை, கருவறையில் இடப்புறமாக திரும்பி நிற்கும் சிம்மத்தின் முன்பாக நின்ற திருக்கோலத்தில் சிம்ம வாகினியாக எழுந்தருளியிருக்கிறாள்.
காமதேனுவின் நான்கு மகள்களில் முதல் மகளான பட்டி, தானே பால் சுரந்து பாலபிஷேகத்துக்கு வழி வகுத்தாள். இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பட்டீஸ்வரன் என்கிற திருநாமம் ஏற்று இத்திருத் தலத்தில் அருள்பாலிக்கத் தொடங்கினான். அது முதல் இத்திருத் தலத்துக்கு பட்டீஸ் வரம் என்கிற ஊர்ப்பெயர் நிலைத்து விட்டது. அந்த ஈசனின் ஆலயத்தில்தான் தனிச் சன்னிதி கொண்டிருக்கிறாள்.
சோழ மன்னர்களால் வழிபடப்பட்ட இந்த அம்பிகை, பிற்காலத்தில் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் நிறுவப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
வடதிசை நோக்கி, ஆறடி உயரத்தில் அழகாக புடைவையுடுத்தி எலுமிச்சை மற்றும் ரோஜா மாலையணிந்து காட்சியளிக்கிறாள். மூன்று திருக் கண்கள், எட்டுத் திருக்கரங்கள். மகிடன் தலை (எருமையின் தலை)யினைக் கால்களால் மிதித்து, பின்புறமாக சிம்மம் நிற்கப் பெற்று நிமிர்ந்து நிற்கும் திருக்கோலம்.
தலை - இடுப்பு - பாதம் என மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையப் பெற்றிருக்கும் திரிபங்க ரூபமாக நிற்கின்றாள். சற்றே அடக்கமான பாவனையுடன், துர்கையின் பின்னே நிற்கிறது சிம்மம் அதுவும் தன் முகத்தினை இடப்புறமாகத் திருப்பிய வாறு. இது வித்தியாசமான அமைப்பு எனப்படுகிறது. வலது முதல் திருக்கரத்தில் அபயஹஸ்தம். இடது முதல் திருக்கரத்தில் பச்சைக்கிளி. அதாவது, அம்பிகையின் இடைமீது அத்திருக்கரம் படர்ந்திருக்க, அதன் மீது பச்சைக் கிளி அமர்ந்திருக்கிறது. சாத்வீக குணம் கொண்ட பச்சைக்கிளி, அசுர குணங்களை இழந்து தாமச குணம் ஏற்றிருக்கும் மகிடன், ராட்சஸ குணம் கொண்ட சிம்மம், இடப்புறமாக முகம் காட்டி நின்றபடி அமைந்துள்ளது.
வைகாசி விசாகப் பெரு விழாவின்போது, தேனுபுரீஸ்வரர் திருக்கல்யாணத்தன்று துர்கை சிம்மவாகனத்தில் வீதியுலா வருகிறாள். வலது கரங்களில் அபயஹஸ்தம், சக்கரம், அம்பு, கத்தி. இடது கரங்களில் பச்சைக்கிளி, சங்கு, வில், கேடயம். மகிடனின் தலை (எருமைத் தலை) மீது பதிந்திருக்கும் துர்கையின் இரு பாதங்களில், வலது பாதம் சற்று முன்னே எடுத்து வைத்தாற் போலிருக்கும். ஏனிந்த பாவனை? பக்தர்களின் துன்பங்களை அகற்றிட இதோ நான் உடனே கிளம்பி வருகிறேன் என்பதாக அந்த பாவனை அமைந்துள்ளது.
பட்டீஸ்வரம் துர்கை சன்னிதி முன்பாக ஒருபுறம் நின்று துர்கையை நோக்கினால், ‘உனக்கு என்ன வேண்டும்?’ எனக் கேட்பது போலிருக்கும். மறுபுறம் நின்று துர்கையை நோக்கினால், ‘கொஞ்சம் பொறு. நீ கேட்டதைத் தருகிறேன்’ எனச் சொல்வது போலிருக்கும். கேட்டவர்க்குக் கேட்ட வரமளிக்கும் சாந்த சொரூபியாக பட்டீஸ்வரத்தில் காட்சியளிக்கிறாள் சிம்ம வாகினியான துர்கை. இத்திருத்தலத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலம் துர்கை வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. உரிய பலன் தர வல்லது. அமாவாசை, பௌர்ணமி, வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் இங்கு மிகவும் விசேஷம். கும்பகோணத்திலிருந்து தென்மேற்கே எட்டு கி.மீ. தூரத்தில் உள்ளது பட்டீஸ்வரம். இத்திருத்தல துர்கையிடம் வழிபட்டால் ஆண் - பெண் திருமணத் தடை விலகும். தொழில் - வியாபாரம் மேம்படும். எதிர்ப்புகள் குறைந்து நாளடைவில் மறைந்து போகும். துயரங்கள் அனைத்தும் தீரும்!" எனக் குறிப்பிடுகிறார் பட்டீஸ்வரம் துர்கையம்மன் சன்னிதியின் அர்ச்சகர் வெ.குருமூர்த்தி சிவம்.

Comments