மலர் விழுந்தால் மங்கலம்

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், கோஸ்தானி ஆற்றின் கரையில் தனுகு என்ற இடத்துக்கு அருகில், மண்டபாக்கா கிராமத்தில் அமைந்துள்ளது எல்லாரம்மா ஆலயம். வடக்கு எல்லை காவல் தேவதையாக இருப்பதால் எல்லையம்மா என்ற பெயர் எல்லாரம்மா என்று மருவியது என்றும், தன்னை வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் தாயாகத் திகழ்வதால் எல்லாரம்மா என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். ஆந்திர மக்கள் இத்தேவியை ‘எல்லாரிக்கும் அம்மா’ என்று போற்றி வழிபடுகின்றனர்.
முருகப் பெருமானால் வதம் செய்யப்பட்ட தாரகாசுரன் ஆட்சி செய்த இடமான இப்பிராந்தியம் அவன் பெயரால் ‘தாரகாபுரா’ என்று அழைக்கப்பட்டு அதுவே தனுகு என்று மருவியதாக தலபுராணம். தனுகு பகுதியைச் சுற்றியுள்ள பல இடங்களின் பெயர்கள் தாரகாசுரன், ஸ்ரீ சுப்பிரமண்யர் மற்றும் தாரகாசுர வதம் ஆகியவற்றை ஒட்டியே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனுகுவில் ஸ்ரீ சுப்ரமண்யர், மண்டலாம்பா, சூரியன், சித்தேஸ்வரர், ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், பாலங்கி சிவாலயம் போன்ற பல ஆலயங்கள் உள்ளன.
பசுக்களும் காளைகளும் மந்தை மந்தையாக இந்தப் பகுதியில் மேய்ந்தபடியால் இந்த ஊர் ‘மந்தைப் பாக்கம்’ எனப்பட்டு அதுவே நாளடைவில் ‘மண்டபாக்கா’ என்று மருவியிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அஷ்டாதச சக்தித் தலங்களில் உள்ள ரேணுகா, ஏகவீரா தேவி போன்ற தேவிகளின் அம்சமாக ஸ்ரீ எல்லா ரம்மா திகழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இப்பகுதியை 1083 முதல் 1323 வரை ஆண்ட காகதீய மன்னர்கள் தங்கள் குலதேவதையாக காகதம்மா என்ற பெயரில் பத்ரகாளி தேவியை வழிபட்டு வந்தனர். வாரங்கலில் உள்ள காகதம்மா தேவி என்ற பத்ரகாளி ஆலயக் கருவறையில் காகதம்மா தேவிக்குத் துணையாகக் எல்லாரம்மா பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறாள். இவளே தனுகு, மண்டபாக்கா தலத்தில் தனியே கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
ஆலய முகப்பில் நடுநாயகமாக தேவியின் சுதைச் சிற்பம் உள்ளது. இந்த சுதைச் சிற்பம் கருவறையில் உள்ள விக்கிரகம் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.
மாண்டவ்ய முனிவர் தவம் செய்ததாகக் கருதப்படும் இத்தலத்தின் கருவறையில் சாளக்ராம திருமேனியாக, ஸ்ரீ எல்லாரம்மா அமர்ந்த கோலத்தில் இடது காலை மடக்கி, வலக்காலை தொங்கவிட்டு, நான்கு கரங்களோடு காட்சி தருகிறாள். பின்னிரு கரங்களில் வலக்கரத்தை டமருகமும், இடக்கரத்தை திரிசூலமும் அலங்கரிக்கின்றன. முன் வலக்கரத்தில் குறுவாளையும், இடக்கரத்தில் குங்கும பரணியையும் ஏந்தி கழுத்தில் மங்கல சூத்ரம் மற்றும் ஆபரணங்களும், மலர்மாலைகளும் துலங்க காட்சி தருகிறாள். தேவியின் காலடியில் நரியின் புடைப்புச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மேலே ஒரு சந்தனக் கிண்ணத்துடன் கூடிய தங்க கிரீடத்தோடு எப்போதும் காட்சி தருகிறாள் ஸ்ரீ எல்லாரம்மா. அக்காலத்தில் இப்பகுதியை நிர்வகித்து வந்த நூஜவீடு ஜமீன்தாரின் மஞ்சள் தோட்டத்தில் ஸ்ரீ எல்லாரம்மா தேவி விக்கிரகம் கிடைத்ததாகவும் அவரே ஆலயத்தை எழுப்பி அபிவிருத்தி செய்ததாகவும் கூறுகின்றனர்.
ஸ்ரீ எல்லாரம்மா தேவியின் தங்க கிரீடத்தின் மேல் பாகத்தில் ஒரு சந்தனப் பேலா (கந்த பாத்ரம்) பொருத்தப்பட்டுள்ளது. இது வேறு எந்த தேவி ஆலயங்களிலும் காண முடியாத ஓர் அமைப்பாகும். பலவிதமான கோரிக்கைகளோடு ஆலயத்துக்கு வருகின்ற பக்தர்கள் அர்ச்சகரிடம் தாங்கள் கொண்டு வந்த ஏதாவது ஒரு மலரைக் கொடுக்கின்றனர். அதைப் பெறும் அர்ச்சகர், பக்தர் கூறும் பெயர், நட்சத்திரத்துக்கு சங்கல்பம் செய்து, அந்த மலர்களை தேவியின் கிரீடத்தின் மேல் உள்ள சந்தனக் கும்பாவில் சேர்க்கிறார்.
தேவிக்கு ஆரத்தி எடுக்கும்போது, அன்னையின் அருளால் சந்தனக் கும்பாவிலிருந்து மலர்கள் தானாகவே ஒவ்வொன்றாக விழத் துவங்குகின்றன. இவ்வாறு மலர் விழுந்தால் பக்தர்கள் தங்கள் கோரிக்கை பலித்ததற்கான உத்தரவை அன்னை அளித்ததாக எண்ணி புளகாங்கிதம் அடைகின்றனர்.
மண்டபாக்கா ஸ்ரீ எல்லாரம்மா தேவியின் ஆலய வளாகத்தில் தேவியின் சகோதரியாகக் கருதப்படும் ஸ்ரீ கப்பாலம்மா சன்னிதியோடு, ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ வெங்கடேசர், ஸ்ரீ விநாயகர் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் உள்ளன. தினமும் அதிகாலை நான்கு மணி அளவில் ஸ்ரீ எல்லாரம்மா தேவி மண்டபாக்கா கிராமத்துக்குள் சஞ்சாரம் செய்வதாகவும், அப்போது தேவியின் கால் சலங்கை சப்தம் கேட்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெரு நகரங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்-மே மாதத்தில் வசந்தோற்சவமும், ஐப்பசி மாதத்தில் நவராத்திரியும் மிகக் கோலாகலமாக நடைபெறுகின்றன. மேலும் சைத்ர (ஏப்ரல் - மே) சுக்லபட்ச சதுர்த்தசி அன்று கங்க உற்சவம். அதே மாதம் பௌர்ணமி தீர்த்தமாலை உற்சவம் போன்றவை நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமி உற்சவத்தின் போது பக்தர்கள் மூன்று நாட்கள் விரதம் அனுஷ்டித்து தேவியை வழிபடுகின்றனர். இந்தத் திருவிழாவின் போது நடைபெறும் எல்லாரம்மா ஜாத்ராவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
செல்லும்வழி:
ஏலூருவிலிருந்து சுமார் 70 கி.மீ., தனுகுவிலிருந்து 4 கி.மீ.,
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 12 வரை. மாலை 4 மணி முதல் 9 வரை.

Comments

  1. மிகவும் அருமையான பதிவு.
    நாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.
    தெரிந்து கொள்வோம்!!!! தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வோம் !!!

    ReplyDelete

Post a Comment