5 செவ்வாய்க்கிழமை விரதம்

“ஆசை அறுமின்... ஆசை அறுமின்... ஈசனோடாயினும் ஆசை அறுமின்’ என்றார் திருமூலர். ஆனால், அன்னை சக்தியின் வடிவான ஆ ஷாபுரா தேவியோ ‘ஆசைப்படு. உன் நியாயமான ஆசையை நான் நிறை-வேற்றி வைக்கிறேன்’ என்று நம்பிக்கையூட்டி, நம் வாழ்வை மேன்மைப்படுத்துகிறாள்.
‘எந்த ஆண் மகனாலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது’ என்ற வரம் பெற்றான் மகிஷாசுரன். அந்த அகந்தையினால் அவன் தேவர்களை துன்புறுத்த, இந்திராதி தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். அவர் ஆதிசக்தியிடம் வேண்டும்படி கூறினார். இந்திராதி தேவர்கள் ஆதிசக்தியை துதித்து வேண்ட, தேவி மனமிரங்கி மகிஷாசுரனுடன் போர் செய்தாள். இருவருக்குமிடையே போர் நடந்த இடமே குஜராத் மாநிலம் ‘கட்ச்’ அருகிலுள்ள ‘மட்’ என்ற இடம். அங்குதான் தேவி அசுரனை வதம் செய்தாள்.
கருணை வடிவான தேவி, அசுரன் இறக்குமுன் “உன் ஆசை என்ன?” என்று கேட்க, மகிஷனும் மனம் திருந்தி “என்றும் தங்கள் திருவடியின் கீழ் சாம்பலாக இருக்க வேண்டும்” என்று கேட்டான். இன்றும் ‘மட்’ ஆலயத்தின் அருகில் அச்சாம்பல் காணப்படுவதாகவும், அதனருகிலுள்ள குளத்தில் ஸ்நானம் செய்வதால் சகல ஜன்ம பாபங்களும் தீரும் என்றும் கூறப்படுகிறது. மகிஷனை வதம் செய்த தேவியைத் துதித்த தேவர்களிடம் தேவி, “என்ன வரம் வேண்டும்?” எனக்கேட்க, தேவர்கள் “மங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமையில் மகிஷனை வதம் செய்து எங்கள் ஆசையைப் பூர்த்தி செய்ததுபோல், ‘ஆ ஷாபுராமா’ என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டு, பக்தியுடன் வழிபடும் அடியவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என வேண்ட, தேவியும் அங்கு குடிகொண்டாள்.
குஜராத் மாநிலம், ‘மட்’ பகுதியில் ஆலயம் கொண்ட ஆ ஷாபுரா தேவிக்கு, மும்பை தானாவில் காபூர்பாவடி என்ற இடத்திலும் ஆலயம் அமைந்துள்ளது. சௌராஷ்டிரத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜம்னாகிரி கோசுவாமி என்ற துறவி வசை என்ற இடத்திலுள்ள சிவாலயத்தில் வசித்தார். அவர் பாத யாத்திரை சென்றபோது காடாக இருந்த காபூர்பாவடியில் தங்கியிருந்தார். அச்சமயம் ஆ ஷாபுராதேவியின் உருவம் அடிக்கடி கனவில் வர, அங்கு ஏதோ இருக்க வேண்டும் என நினைத்த சுவாமிஜி, அவ்விடத்தைத் தோண்டும்போது கண்ணைக் கூசச் செய்யும் ஆ ஷாபுரா தேவியின் விக்ரகம் கிடைத்தது. 1951ஆம் ஆண்டு அங்கு ஒரு சிறிய ஆலயம் கட்டினார். நாளடைவில் காடு மறைந்து, போக்குவரத்து அதிகரிக்க, அவ்வாலயமும் சிறிது சிறிதாக வளர்ந்து இன்று மும்பையின் மிக முக்கிய கோயில்களில் ஒன்றாகக் காட்சி தருகிறது. அன்னையின் அருள் விரைவில் அனைவருக்கும் தெரியவர, இங்கு வழிபட வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
கர்ப்பக்கிரகத்தின் இருபுறமும் மாருதியும், கணபதியும் சுயம்பு மூர்த்தமாகக் காட்சி தருகின்றனர். சிம்ம வாகனத்தின் எதிரில் அன்னைக்கு சிறிய கருவறை. பளிங்கினால் கட்டப்பட்ட மண்டபம் போன்ற கர்ப்பக்கிரகம், பொன் நிறத்தில், வேலைப்பாடுகளுடன் பிரகாசிக்கிறது. நடுநாயகமாக விளங்கும் செந்தூர வண்ண தேவியின் சாந்தம் தவழும் முகம், பொற்கிரீடம் தாங்கிய சிரம், முழுமை பெறாத தேவியின் உருவம், வலப் பக்கம் சூலாயுதத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அன்னையின் தீட்சண்யமான கண்கள் நம்மைக் கருணையுடன் நோக்கி, ‘உன் ஆசை என்ன, சொல்?’ என்று கேட்பதுபோல் உள்ளது. தேவியின் சுயம்பு ரூபத்தில் ஒரு ஈர்ப்பு சக்தியை உணர்ந்து மனம் பரவச நிலையை அடைகிறது. சுற்றுப் பிராகாரத்தில் சிவலிங்கம், சந்தோஷிமாதா, துர்கா தேவி, சீதளாதேவி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
ஆலயத்தில் உள்ள ஆல மரத்தைச் சுற்றி செவ்வண்ண ரிப்பன்களால் சுற்றப்பட்டிருக்கிறது. வேண்டுதலை நினைத்து ஆலயத்தில் விற்கும் ஒரு ரிப்பனை வாங்கி அம்மரத்தில் கட்ட வேண்டும். இவ்வாறு கட்ட, நமது நியாயமான ஆசை வெகு விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். கோரிக்கை நிறைவேறியபின் ஆலயம் சென்று ஏதாவதொரு ரிப்பனை அவிழ்த்து நீரில் விசர்ஜனம் செய்து, அன்னதானம் செய்ய வேண்டும்.
தேவிக்கு செவ்வாய்க்கிழமை விசேஷ நாள் என்பதால் அன்று இவ்வாலயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசிப்பர். தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் விரதமிருந்து, பாத யாத்திரையாக இந்த அன்னையை தரிசிப்போரின் விருப்பங்கள் உடனே நிறைவேறுகிறது. திருமணம், பிள்ளைப்பேறு, வேலை, சொந்த வீடு என்று அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் அன்னை ஆ ஷாபுரா தேவிக்கு பக்தர்கள் புடவை சாத்துவதும், அபிஷேகம் செய்வதும் இங்கு முக்கிய வேண்டுதல்கள்.
இவளே நவராத்திரி நாயகி என்பதால் நவராத்திரி ஒன்பது நாட்களும் ஹோமம், விசேஷ அலங்காரம், பூஜை என்று காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அஷ்டமி அன்று மிக விமரிசையாக அன்னை காட்சி தருவாள். மும்பை வரும் மக்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் ஆ ஷாபுராமா ஆலயம்.
செல்லும் வழி:
மும்பை தானாவிலுள்ள மாஜி வாடாவில், காபூர்பாவடி ஜங்ஷனிலேயே அமைந்துள்ளது.
தரிசன நேரம்: செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதல் இரவு 11.30 வரை. மற்ற நாட்களில் காலை 6.30 முதல்1 வரை. மாலை 4 மணி முதல் 10.30 வரை.

தொடர்புக்கு: 09322298355, 022-25380192, 25395904

Comments