இசையால் இறையருள்

கலியுகத்தில் இறையருளைப் பெற எளிய வழி நாமசங்கீர்த்தனம்தான்! ‘நாமியான கடவுள் கட்டித் தங்கம் போலே; நாமம் ஆபரணப் பொன்போலே’ என்றார்கள் பெரியவர்கள். இராமன் என்ற அவதார புருஷன் மலையால் அணைகட்டி மறுகரை ஏறி இலங்கை சென்றான். ஆனால், ராம பக்த அனுமானோ, ராமநாமத்தைச் சொல்லியே கடல் கடந்தானே! ஆகவே, நாம சங்கீர்த்தனம் செய்து உய்யுங்கள் என வழிகாட்ட வந்தவர் சதாசிவப்ரம்மேந்திராள். சாமா ராகத்தில்
‘மானஸ ஸஞ்சரரே - பிரம்மனி
மானஸ ஸஞ்சரரே!
மத ஸிகி பிஞ்சாலங்க்ருத சிகுரே
மஹனீய கபோல ஜித முகுரே!
ஸ்ரீ ரமணீகுச துர்க விஹாரே
சேவக ஜன மந்திர மந்தாரே
பரம ஹம்ஸ முக சந்த்ர சகோரே
பரிபூரித முரளீ அவதாரே’

என்ற பாடல் பிரபலமானது. சதாசிவப்ரம் மேந்திராள் அருளிய பாடலிது.
தமிழகத்தில் மதுரை அருகே, சோமநாத அவதானி பார்வதி அம்மாள் செய்த தவம் சிவராம கிருஷ்ணனாக வந்து அவதரித்தார்! ஆம்; பெற்றோரிட்ட பெயர் அது. பரமசிவேந்திரர் என்ற யோகி, மந்திரம், யோகம் எல்லாம் கற்றுத் தந்து சதாசிவம் என்ற தீட்சா நாமமும் தந்தார்.
குருவிடம் எதையோ கேட்ட சீடனைப் பார்த்து, சதாசிவா! வாயை மூட மாட்டாயா?" என்றார். அப்படியே மௌனமானவர்தான்! பேச்சு நின்றது. ஆற்றல், தவம், சித்தி பெருகின. அவதூதராக (ஆடையில்லாத மிக உயர்ந்த தவ நிலை) உலகில் பல இடங்களில் சஞ்சரித்தார். தவம் செய்தார். பாடல்களைப் பாடினார்.
புன்னை நல்லூர் மாரியம்மன்:
தஞ்சாவூருக்கருகே புன்னை வனக் காட்டில் சதா சிவம் யோக நிஷ்டையிலிருந்தார். தஞ்சை மராட்டிய அரச வம்சத்தைச் சேர்ந்த சஹாஜியின் பெண் குழந்தை கண்ணில் இரத்தம் வழிந்தது. பல வைத்தியர்கள் வந்து பார்த்தும் குணமாகவில்லை. சமயபுரம் மாரியம் மனுக்குத் தங்கக் கண்மலர்கள் செய்து வைப்பதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார். அன்றிரவு அவரது கனவில் ஒரு பெண் குரல், நான் உன் எல்லையிலிருக்கிறேன். சமயபுரத்துக்கு நீ அலைய வேண்டாம்" என்றது. மறுநாள் மந்திரி, பிரதானிகளுடன் தானும், ‘எங்கே மாரியம்மன்?’ என்று தேட முற்பட்டான்.
ஒரு புற்றுக்கு வேப்பிலை மாலை போட்டுச் சிறு பெண்கள் ‘மாரியம்மா’ என்று பாடி, கும்மியடித்து வழிபடுவதைக் கண்ட மன்னன், விக்ரகமோ, கோயிலோ இல்லையே என யோசித்தான். ஒரு புன்னை மரத்தடியில் யோக நிஷ்டையிலிருந்த சதா சிவ பிரம்மேந்திராளிடம், சாமி, புற்றுத்தான் இருக்கு - மாரியாத்தா கோயில் எங்கே?" என்று பணிவுடன் கேட்டான். புனுகு, சந்தனம், ஜவ்வாது கொண்டுவா" என்றார். புற்றுமண்ணுடன் இவற்றை ஒன்றாகக் கலந்து உரு சமைத்து, மாரியம்மன் (சிலை போலவே) செய்து ஜன ஆகர்ஷண யந்திரமும் செய்து வைத்தார். கோயில் உருவானது; கண்களும் பூரண நலம் பெற்றன.
எப்போதும் கடவுள் நாமம் சொல்
1. ப்ருஹி முகுந்தேதி - ரஸனே
ப்ரூஹி முகுந்தேதி -
2. கேசவ மாதவ கோவிந்தேதி
கிருஷ்ணானந்த சதானந்தேதி
3. ராதா ரமண ஹரே ராமேதி
ராஜீவாக்ஷ கன ஸ்யாமேதி

இந்தப் பாடலையும் நிறையக் கேட்டிருக்கிறோம்.
புதுக்கோட்டை மன்னர்
புதுக்கோட்டைத் தொண்டைமான் வம்சாவளியில் விஜய ரகுநாதத் தொண்டைமான் சாஸ்திரங்கள் சமயாசாரங்கள் இவற்றில் பிடிப்பும், பெரியோர் சாது சன்யாசிகளிடம் பக்தியும் கொண்டிருந்தார்.
‘பஜரே கோபாலம் - மானஸ
பஜரே கோபாலம்!
ஆகம ஸாரம், யோக விசாரம்
போக ஸரீரம், புவனாதாரம்’

என்ற பாடலைக் கேட்டு, அதை அருளியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்றறிந்து, தன் நாட்டுக்கு அந்த மகானை அழைத்து வர, ஒரு பல்லக்குடன் புறப்பட்டார். அவதூதரான பிரம்மேந்திராள் அரண்மனைச் சுவர்களுக்குள் கட்டுப்படுவாரா? காடே திரிந்து, காற்றே புசித்து, உலவி வரப் பிறந்தவராயிற்றே! நிஷ்டையிலிருந்த சுவாமியைக் கெஞ்சி அழைத்தார். அவர் பேசாமல் அகன்றுவிட, பின் தொடர்ந்து சென்று, என்னைச் சீடனாக ஏற்றருள்க" எனப் பணிந்த மன்னனை அருட்பார்வை பார்த்து, மண்ணில் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக்காட்டினார். பக்தியுடன் அந்த மந்திர மண்ணைத் துண்டில் ஏற்று மன்னன் தங்கப் பேழையில் அரண்னையில் வைத்து நித்தமும் பூஜை செய்து வரலானான். இன்றும் அந்த தட்சிணாமூர்த்தி வழிபாடு நடக்கிறது.
பலப்பல வடிவங்களில்
பிறர் கண்ணில் புலப்படாதிருக்குமாறு பல்வேறு மிருக வடிவில் கூட உலவினாராம் பிரம்மேந்திரர். ஆங்கிலேய துரை ஒருவர் இது குறித்துப் பதிவு செய்துள்ளார்:
நான் நெல்லையில் அதிகாரியாயிருந்தபோது, (கி.பி.1744) என் குடும்பத்துடன் குற்றால அருவியில் குளிக்கப் போனேன். குற்றாலத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருந்தன. ஒரு பெரிய பாறையில் நிர்வாண நிலையில் ஒரு மனிதன் உலவிக் கொண்டிருந்தான். காட்டுவாசி என்றெண்ணிக் கரைக்கு வந்து, என் துப்பாக்கியை எடுத்துக் குறிபார்த்துச் சுடப் போனேன். அந்த மனிதன் நின்ற இடத்தில் பெரிய புலி இருந்தது. பின்னர், அந்தப் பகுதி மக்கள், ‘அவர் ஒரு யோகி, தவம் செய்வார், தெய்வீகமானவர், நிர்வாணர்’ என்றெல்லாம் சொன்னார்கள். சதாசிவ பிரம்மேந்திரர் அவர் என்று பின்னர் அறிந்தேன்.’
நெரூரில் சின்னப் பிள்ளைகளுடன் விளையாடி ஆற்று மணலில் அமர்ந்து, ‘என்னை மணலால் மூடுங்கள்’ என்பாராம். பிள்ளைகளும் அவ்வாறே செய்ய, அந்த இடத்தில் இனிய நாதம் (நாமம்) கேட்டு மகிழ்வாராம். ஒரு நாள் அப்படிச் செய்துவிட்டு ஊரில் வந்து சொல்ல, ஊர் மக்கள் பதறி ஓடி வந்து தோண்டிப் பார்க்க, அங்கு அவருடைய ஸ்தூல சரீரம் இல்லையாம்.
நெரூரிலும், மானாமதுரையிலும் ஜீவசமாதி கொண்டுள்ள மகான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் இன்றும் பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றி வருகிறார். ஞானிகள், சித்தர்கள் புதைக்கப் படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அந்த ஜீவ சமாதிகளில் அவர்களின் அருளாட்சி நடந்து கொண்டே இருக்கும்.
1. பிபரே ராமரஸம் -
ராம ரஸம் பிபரே!
(ராம நாம ரஸத்தைப் பருகு)
2. ஜனன மரண பய ஸோக விதூரம்
ஸகல ஸாஸ்த்ர நிகமாகம ஸாரம்.
(பிறவி, மரணம் என்ற பயத்தைப் போக்குவது. ஆக, சாஸ்திரங்களின் சாரமாக விளங்குவது ராம நாமம்.)
3. ஸித்த பரம பரமாஸ்ரம கீதம்.
சுக சௌனக கௌசிக முகபீதம்.
சகல ஸித்தி தருவது, சுகர், சௌனகர், கௌசிகர் போன்ற முனிவர்கள் அறிந்து, பருகி (சொல்லி), மகிழ்ந்தது ராம நாமம்.
சதா, காசியில் சிவன் சொல்லும் நாமம் ராமநாமம். நாமும் சொல்லி உய்வோமே!

பஞ்சகவ்யம்: கோமயம், கோஜலம், பால், தயிர், நெய் இவை ஐந்தும் சேர்த்து தயாரிக்கப்படுவது. இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவது. விதைகளுக்கு வீரியம் அளிப்பது என்கிறார்கள் இப்போது.

 

Comments