பக்தர்களுக்காகக் காத்திருக்கும் பாண்டுரங்கன்

கடந்த வாரம் பாரத் கலாச்சாரில் சிந்துஜா நிகழ்த்திய பாண்டுரங்கவைபம் பற்றிய சொற்பொழிவில் அபங்கங்களை எழுதிய தாசர்களைப் பற்றியும் அபங்கங்களைப் பற்றியும் பல அரிய செய்திகளை பக்தி மழையாய்ப் பொழிந்தார். அதிலிருந்து சில துளிகள்:
சந்த்களுக்குப் படிப்பறிவு கிடையாது. அவர்கள் கொடுத்ததுதான் அபங்கங்கள். அ - பங்கம். எந்தப் பாட்டில் குற்றம் குறை காணமுடியாதோ, அது அபங் என்கின்றனரா.
நாமசங்கீர்த்தனத்தின் பெருமை
ஞானேஸ்வர் சுவாமிகள் சாட்சாத் நாராயணனின் அவதாரம்தான். அதனால்தான் அவரை முழுமுதலாக ஞானேஸ்வர மகராஜ்கி ஜே… என்று அபங்கம் பாட தொடங்குவதற்கு முன்பாகச் சொல்லி ஆரம்பிப்பார்கள். குழந்தைக்குத் தேவையானதை தாயால்தான் அளிக்க முடியும். அதுபோல விஸ்வவாரகரி சம்பிரதாயத்துக்கு ஞானேஸ்வர மகராஜ்தான் அஸ்திவாரம்.
ஏக்நாத் மகராஜ் எழுதிய பாகவதத்தைப் படிக்க, நாராயணனே இவரின் வீட்டில் சிறுவன் கன்யா கிருஷ்ணனாக வளர்ந்தானாம். ஒருநாள் ஒரு மகா பண்டிதர் பண்டரிபுரம் போகிறார். அங்கே பாண்டுரங்கன் இல்லை என்பது தெரிந்துவிடுகிறது. அசரீரியாக பாண்டுரங்கனே தான் இருக்கும் இடத்தைச் சொல்கிறார். ஏக்நாத்தின் வீட்டுக்கு வந்து கிருஷ்ணன் இருக்கிறாரா என்று கேட்கிறார் அந்த பண்டிதர்.
ஏக்நாத் மகராஜ், “தண்ணி எடுக்க போயிருக்கான் வருவான் பாருங்கோ” என்கிறார்.
கன்யா கிருஷ்ணன் தனக்கு செய்த சேவைகளை அந்தப் பண்டிதருக்கு சொல்கிறார் ஏக்நாத் மகராஜ். ஆச்சரியப்பட்ட அந்தப் பண்டிதர், எட்டு வருசமாக உங்களுக்கு சேவை செய்தது அந்தப் பாண்டுரங்கன்தான் என்கிறார். ஏக்நாத் மகராஜ் மெய்சிலிர்த்துப் போகிறார். இந்த ஏக்நாத் மகராஜ்தான், விஸ்வவாரகரி சம்பிரதாயம் என்னும் கோயிலுக்கு த்வஜஸ்தம்பம்.
துக்காராம் மகராஜ்தான் கோபுர கலசம். அவர் உலகத்துக்கு கொடுத்த அபங்கங்களின் எண்ணிக்கை 4 கோடியே ஒரு லட்சத்து 34 ஆயிரம் பாடல்களாம்! அதனால்தான் அவரை கோபுரக் கலசம் என்கிறாள் ஒரு அபங்கத்தில் பஹினி பாய். ஞானேஸ்வரர் விஷ்ணு அம்சம் என்கிறார் பஷினி பாய்.
நவநாதர் பரம்பரை
நவநாதர்கள் பரம்பரையை ஆரம்பித்தவர் பரமேஸ்வரன். அவர் ஆதிநாதர். எட்டு நாதர்கள் வரை, ஒரு மகா மந்திரத்தை ரகசியமாக சொல்லிவருகின்றனர். மகாவிஷ்ணுதான் ஒன்பதாவது நாதரான ஞானி நாதர். அவர் அந்த ரகசிய மந்திரத்தை உலகம் அறிய சொல்கிறார். ராமானுஜர் மாதிரி. அம்மா குழந்தைக்குக் கொடுப்பது போல கொடுக்கிறார். அதுதான் `ராமகிருஷ்ண அரி’. அதனால் அவரை மாஉலி (அம்மா) என்று அழைக்கின்றனர். `ராதே கிருஷ்ணா’ மந்திரத்தை கிளிக்கு சொல்லிக்கொடுத்தாளாம் (கானா காவே துத்தி பானி பீவே) பக்த மீரா.
பக்தர்களுக்காகக் காத்திருக்கும் இறைவன்
வைகுண்டத்தில் கிருஷ்ணனைப் பார்க்க பலரும் வந்து போய்க்கொண்டிருந்தனர். சலித்துப் போன கிருஷ்ணன், நாரதரிடம், எல்லோரும் என்னை வந்து பார்க்கிறார்களே, நான் போய் பார்க்கும் அளவுக்கு ஒரு பக்தன் பூமியில் இருக்கிறானா என்றார்.
“இருக்கிறானே… புண்டலீகன் என்பவன் இருக்கிறான். அவனுடைய தாய், தந்தையைத் தன் கண்ணைப் போல் பராமரித்து வருபவன்” என்றார் நாரதர்.
உடனே புண்டலீகன் இருக்கும் எளிய குடிசையின் முன் தோன்றினான் பாண்டுரங்கன். குடிசைக்கு வெளியே மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. வெளியே நின்றபடி பாண்டுரங்கன் புண்டலீகா… புண்டலீகா…. என்று குரல் கொடுத்தான்.
யார் அது, யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். என்னுடைய தாயும், தந்தையும் அசதியாக இருக்கிறார்கள். அவர்கள் தூங்கிய பிறகு வருகிறேன் என்று அவர்களின் காலை வலது கையால் பிடித்துவிட்டபடி, இடது கையால் ஒரு செங்கல்லை வெளியே எடுத்துப் போட்டான் புண்டலீகன்.
அந்தக் கல்லின்மீது கொஞ்சநேரம் நில்லுங்கள். என் பெற்றோர் உறங்கியவுடன் வருகிறேன் என்றான்.
அவ்வளவுதான் அந்த செங்கல்லின் மீது ஜம்மென்று இடுப்பில் கைவைத்தபடி பாண்டுரங்கன் நின்றுவிட்டான்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த புண்டலீகன், “ஹே பாண்டுரங்கா.. நீயா” என்று புளங்காகிதம் அடைந்தான்…
“இரு இரு உணர்ச்சிவசப்படாதே… நான் உன்னைக் கண்டதில் சந்தோசமாக இருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றான் பாண்டுரங்கன்.
“என்னுடைய பெற்றோர் அன்றாட சிரம பரிகாரங்களைச் செய்வதற்கு நதிக்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அந்த பீமா நதியின் பாதையை இந்த குடிசைக்கு அருகில் ஓட விட்டால் நன்றாக இருக்கும்” என்றான் புண்டலீகன்.
“நான் உனக்குக் கொடுக்க நினைத்த வரத்தை, உன்னுடைய பெற்றோருக்காகவே கேட்டுவிட்டாய். பரவாயில்லை. உனக்கு வேண்டியதைக் கேள்” என்றான் பாண்டுரங்கன்.
“என்னைப் போன்ற எளியவனை நாடி நீ வந்திருக்கிறாயே இதே போலே, படித்தவர், பாமரர் வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும் எனக்குக் கொடுத்தது போலவே காட்சி கொடுப்பாயா பாண்டுரங்கா?” என்றான் வெள்ளந்தியாக புண்டலீகன்.
நம் எல்லோரின் சார்பாகவும் புண்டலீகன் அன்று கேட்ட வரத்தை நிறைவேற்றுவதற்கே தன் இடுப்பில் கைவைத்தபடி இன்றைக்கும் பக்தர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்

Comments