நீதியை நிலைநாட்டும் கொங்கலம்மன் !

கொங்கு மண்டலத்துக்கே காவல் தெய்வமாகத் திகழ்பவள் கொங்கலம்மன். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில், மணிக்கூண்டு பகுதிக்கு அருகில் அமைந்துள்ள இந்தக் கோயில், மிகவும் பழைமை வாய்ந்தது. அதற்கு ஆதாரமாக பல கல்வெட்டுகளும் கோயிலில் உள்ளன. தை மாதம் தேர்த் திருவிழாவின் போது, முதலில் ஆனங்கூரில் உள்ள ஆதி கொங்கலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட பிறகே, இங்கே தேர்த்திருவிழா நடைபெறும். அதன் பின்னணியில் ஒரு சம்பவம் நடைபெற்றதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக சில கொள்ளையர்கள் இந்தக் கோயிலில் இருந்த கொங்கலம்மன் சிலையைத் திருடிச் சென்றனர். அவர்கள் ஆனங்கூர் என்ற இடத்துக்கு அருகில் வந்தபோது, வண்டியின் அச்சு முறிந்துவிட்டது. முறிந்த அச்சை சரிசெய்து கொண்டு
இருந்தபோது, 'என்னைத் திருடிச் சென்றால், உங்களுக்கு ஆபத்து ஏற்படும்’ என்று அசரீரி ஒலிக்கவே, கொள்ளையர்கள் பயந்துபோய் அம்மன் சிலையை அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் தங்கள் ஊரில் அம்மன் சிலையைக் கண்ட ஆனங்கூர் மக்கள் ஒரு கோயிலைக் கட்டி அங்கே அம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.
கொங்கலம்மன் ஆனங்கூரில் கோயில் கொண்டு விட்டபடியால், ஈரோடு மக்கள் புதியதாக ஒரு அம்மன் விக்கிரஹத்தை இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அதில் இருந்துதான் ஈரோடு கொங்கலம்மன் தேர்த் திருவிழாவுக்கு முன்னதாக ஆனங்கூர் ஆதி கொங்கலம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பகுதியில் காளிங்கராயன் கால்வாய் என்று ஒரு கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் கொங்கலம்மனின் அருள்வாக்கின் படித்தான் கட்டப்பட்டது.
13ம் நூற்றாண்டில் காளிங்கராயன் கால்வாயைக் கட்டுவது தொடர்பாக ஊர்க் கூட்டம் ஒன்று இந்தக் கோயிலில் நடைபெற்றது. அப்போது அவர்களுக்குள் சண்டை ஏற்பட்ட நிலையில், கொங்கலம்மன் கால்வாயைக் கட்டும்படியாக அருள் வாக்குக் கொடுத்தாள். அதன்படியே கால்வாய் கட்டப்பட்டது. இது தொடர்பான ஒரு கல்வெட்டு ஆலயத்தில் உள்ளது. அதன் அடிப்படையில் இன்றும் இந்த ஆலயத்தில் சீட்டு எழுதியும், பூ போட்டும் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் நிலவி வருகிறது.
இங்கு வந்து கொங்கலம்மனை வழிபட்டால், எந்த ஒரு பிரச்னைக்கும் சரியான நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தைக் கட்டி, திருப்பணிகள் செய்துள்ளனர். இவர் களை அடுத்து ஆண்ட எல்லா மன்னர்களும், கொங்கலம்மனை தங்கள் காவல் தெய்வமாகவே வணங்கி வந்ததாகவும் ஆலயத்தின் தல வரலாறு கூறுகிறது. கோயிலில் உள்ள மகா மண்டபத்தில் 6 அழகிய கல் தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன. மகாமண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபமும், அடுத்து கருவறையும் அமைந்துள் ளது. கருவறையில், வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை அருளும் கருணை நாயகியாக எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள் கொங்கலம்மன்.
ஈரோடு நகரில் உள்ள கோயில்களுக்கு காவிரி யில் இருந்து தீர்த்தம் எடுத்துச் செல்லும்போது முதலில் கொங்கலம்மனுக்கு முதல் தீர்த்தம் செலுத்திய பிறகுதான் மற்ற கோயில்களுக்கு தீர்த்தத்தை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
இந்த ஆலயத்தில் பிரத்தியங்கிரா தேவி சந்நிதியும் உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் பிரத்தியங்கிரா தேவிக்குப் பச்சை மிளகாயால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த ஆலயத்தின் பிரதான தல விருட்சமாகத் திகழும் அரச மரத் துடன், பிரத்தியங்கராதேவியின் சந்நிதியைச் சுற்றி, ஈசான மூலையில் மலங்கிழுவை மரம், அக்னி மூலையில் வில்வ மரம், நைருதி மூலையில் மின்ன மரம், வாயு மூலையில் அத்தி மரம் ஆகிய தெய்விக மரங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தக் கோயிலில் ஐந்து தல விருட்சங்கள் அமைந்திருப்பது விசேஷம் என்கிறார்கள்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு, இந்த ஆலயத் தில் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆலயத்தின் ஈசான்ய மூலையில் ராகு  கேதுவுக் குத் தனிச் சந்நிதி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ராகுகால வேளையில், ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஆலயத்தில் மகிஷாசுரமர்த்தினி, மதுரை வீரன், கருப்பண்ணசாமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, கௌமாரி, சப்த கன்னிமார் மற்றும் பேச்சியம்மன் ஆகியோருக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. ஆலயத்தில் வருடம்தோறும் தைப்பூசத் தேர்த் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெறுகின்றன.
அற்புதம் நிறைந்த இந்த ஆடி மாதத்தில், நாமும் கொங்கலம்மனைத் தரிசித்து, அவளருளால் நம் வாழ்வில் மங்கலம் பொங்க வரம் பெற்று வருவோம்.

Comments