வினைகள் தீர்க்கும் வேல்மாறல்!

தோகை மேல் உலவும் கந்தன்
சுடர்க் கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவ தெமக்கு வேலை

 - சைவ எல்லப்பநாவலர்
முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வேல் என்ற சொல் 'வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.
பாம்பன் சுவாமிகள் இதனை 'படை அரசு’ என்று போற்றுவார். 'படைநாயகம்’ என்றும் பெயருண்டு. வேலைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவை: அயில், ஆரணம், உடம்பிடி, எஃகம், எஃகு, குந்தம், சக்தி, ஞாங்கர், மதங்கு, வாகை, விட்டேறு.
முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். வேலுக்கென்றே தனிக்கோயில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள் நம் முன்னோர். அதற்கு 'வேற்கோட்டம்’ என்று பெயர். 'கோடு’ என்றால் மலை (கிளை என்றும் பொருள் உண்டு. பல கிளைகளால் அமைக்கப்பட்ட வழிபாட்டிடம் என்றும் கூறுவர்). அக்காலத்தில் மலைப் பகுதியில் அமைந்த கோயிலை கோட்டம் என்று அழைத்தனர்.
வேலூர் என்ற பெயருடன் அமைந்த தலங்கள் பல உள்ளன. அங்கு, வேற்கோட்டம் அமைந்திருத்தலால் அப்பெயர் பெற்றது என்பர். வேலூர்களில் மிகப் பழைமையானது (புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள) உப்புவேலூராகும். அதேபோன்று வேல் என்ற பெயரில் அமைந்த வேல் தீர்த்தம் திருச்செந்தூர், திருத்தணி, திருவேற்காடு, வள்ளிமலை, ஞானமலை ஆகிய தலங்களில் உள்ளன. கோயில்பட்டி, சொர்ணமலையில் அமைந்துள்ள திருக்கோயிலில் வேல் மட்டுமே மூலஸ்தானத்தில் உள்ளது.
சூரபத்மனுடன் போரிடுவதற்கு போர்க் கோலம் பூண்டுவந்த முருகனிடம், சிவபெருமான் பதினோரு ஆயுதங்களுடன் மிகவும் மகிமை பொருந்திய வேலாயுதத்தையும் அளித்தார் என்கிறது கந்தபுராணம். அருணகிரிநாதரும் சிவபிரான் வேல் அளித்த செய்தியை திருப்புகழில் காட்டுகிறார். எனினும், அம்பிகை பராசக்தி, முருகனுக்கு வேல் கொடுத்த செய்தியை மிகச் சிறப்பாக, 'எம் புதல்வா வாழி வாழி எனும்படி வீறான வேல்தர என்றும் உளானே மநோகர...’ என்று பாடுகிறார் அருணகிரிநாதர். இச் செய்தியை கல்லாடம் நூலிலும் காண முடிகிறது.
வேலாயுதப் பெருமானின் வேலானது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய 'பஞ்ச கிருத்தியம்’ (ஐந்து தொழில்களை) செய்யும் ஆற்றல் உடையது. பிரகாசத்தால் கதிரவன், கருணையால் குளிர்ந்த சந்திரன், பகைவர்களை அழிப்பதால் யமன், எளிதாக மிக நீண்ட தூரம் போய் உடனே மீண்டு வருவதால் மனம்... என வேலின் பெருமைகளைப் போற்றுகிறார் திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள். வீரக் கருணையையும் ஈரக் கருணையயும் உடையது வேல். அழிப்பதும் அளிப்பதும் அனைத்தும் வேலே!
சிவந்த நிறம் உடையது வேல். முருகனும் செம்மை நிறம் உடையவன். 'கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயில் ஏறிய சேவகனே’ என்று கந்தரநுபூதியில்  பாடுவார் அருணகிரியார். 'குங்கும வர்ணாய நம’ என்பது அவனது அஷ்டோத்திர நாமம். வேல் தொடர்பான புராணக் கதைகளும் இலக்கிய வரலாறுகளும் உள்ளன. திருவிளையாடற்் புராணத்தில் 'கடல் சுவற வேல் விட்ட படலத்தில்’ பாண்டிய மன்னன் கடல் கடந்து சென்று, தனது வேலால் பல நாடுகளை வென்று, அவற்றை அடிமைப்படுத்தினான் என்று காணப்படுகிறது. நல்லியக்கோடன் என்ற சிற்றரசனுக்கு முருகன் கனவில் தோன்றி அருளியவாறு, கேணியில் பூத்த பூக்களைப் பறித்து, அவன் பகைவர்கள்மீது எறிந்தபோது, அவை வேலாக மாறி அவர்களை அழித்தன என்பதை சிறுபாணாற்றுப்படை என்ற சங்க இலக்கியம் விவரிக்கிறது.
வேல் தத்துவம் பற்றி விவரிக்கும் ஆன்றோர்கள், பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும். வேலாயுதம் பஞ்சாட்சர மூலமந்திரம் ஆகும் என்றும் சிறப்பிப்பார்கள். சூரனை அழிக்க வேல் ஏவிய செய்தியைச் சொல்ல வந்த அருணகிரியார், 'சிவம் எனும் அஞ்செழுத்தை முந்த விடுவோனே’ என்று குறிப்பிடுவார். எனவே, வேலாயுதத்துக்கு மேலாயுதம் எங்கும் இருப்பதற்கில்லை.
மொத்தத்தில்... பரம்பொருளின் பேரருள், பேராற்றல், பேரறிவு ஆகிய மூன்றும் நிறைந்து, ஒன்றி நின்று சமைந்து, உயிர்களின் எளிய இயல்புக்கேற்ப இயங்கிப் பிறங்குவதே வேலின் உருவமாய் உள்ளது.
பெறுதற்கரிய பேறுகள் எல்லாவற்றிலும் தலையாயது அறிவுப் பேறு ஒன்றே! அறிவுக்கு மூன்று இலக்கணங்கள் உண்டு. அவை ஆழம், அகலம், கூர்மை என்பன. அறிவு ஆழமாக இருக்கும்; பரந்து விரிந்து விளங்கும்; கூர்மையாகத் திகழும். இப்போது வேலாயுதத்தை நினையுங்கள். வேலின் அடிப்பகுதி ஆழமாக அமைந்துள்ளது. இடைப்பகுதி விசாலமாக விளங்குகிறது. நுனிப் பகுதி கூர்மையாகத் திகழ்கிறது. நெல்லை மாவட்டத்தில் அறிவில்லாதவனை 'கூர் கெட்டவன்’ என்பார்கள். 'ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே’ என்று பாடுவார் மாணிக்கவாசகர். எனவே அறிவு, ஞானம், வேல் என்பன ஒரே பொருளைத் தரும் சொற்கள் (திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் குறிப்பு).
இத்தகு சிறப்புமிகு வேலாயுதத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு (வாங்குதல்செல்லுதல்), வேல்விருத்தம் ஆகியற்றைப் பாடியுள்ளார் அருணகிரியார். வேல் அலங்காரம் எனும் 100 பாடல்கள் கொண்ட நூல், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளியதாகும். கந்தபுராணத்திலும் வேலின் சிறப்பைக் கூறும் பல பாடல்கள் உள்ளன. மேலும், உடம்பிடித் தெய்வாஷ்டகம், வேல்பதிகம், சத்ரு சம்ஹார வேற் பதிகம், வேல் வணக்கம், வேற்பத்து, வேல்பாட்டு, வேல் தெய்வமாலை முதலான பல நூல்களும் வேலைப் புகழ்ந்து பாடுகின்றன.
அறிவே உருவானது கந்தன் திருவடி. அறிவை அறியச் செய்யும் அறிவின் உருவானது வேல். அதனால்தான் வேல் எப்போதும் கந்தனிடம் ஒன்றியே இருக்கும்.
இத்தகையை வேலாயுதத்தைச் சிறப்பிக்கும் வழிபாடுகளுள் ஒன்றுதான் வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாட்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.
அதாவது,  அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள திருவகுப்புகளுள் 'மணி, மந்திரம், ஔஷதம்’ என்று பெரியோர்கள் குறிப்பிடும் மூன்று வகுப்புகள் முதன்மையானவை. அவை: சீர்பாத வகுப்பு  - மணி வகுப்பு 2. தேவேந்திர சங்க வகுப்பு -  மந்திர வகுப்பு, 3. வேல் வகுப்பு -  ஔஷத (மருந்து) வகுப்பு. இவற்றுள் உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது 'வேல் வகுப்பு’ என்று வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார். அப்படியான மகத்துவம் வாய்ந்த வேல் வகுப்பின் பதினாறு அடிகளை மேலும் கீழுமாகவும், முன்னும் பின்னுமாகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, அதனை நான்கு மடங்காக (16x4 = 64) அறுபத்து நான்கு அடிகளாக அமைய வைத்து, அந்த பாராயண முறையை 'வேல்மாறல்’ என்று தொகுத்து அளித்தவர் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் ஆவார்.
வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச் சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.
வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். (வைத்தியர்கள் நோய்க்கு உரிய மருந்தை ஒரு மண்டலம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுவார்கள் அல்லவா? அம்முறையிலே வேல்மாறல் பாராயணத்தையும் தொடர்ந்து செய்ய வேண்டும்) இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை
அதிலும், சூரியதேவன் தெற்கு நோக்கி பயணிக்கும் தட்சிணாய புண்ணிய கால துவக்கமான ஆடிமாதத்தில் முருகப்பெருமானைத் தொழுவதும், அவன் கரத்தை அலங்கரிக்கும் வேலாயுதத்தை பூஜிப்பதும் மிகவும் விசேஷம்.
அதற்கேற்ப, ஆடி மாதம் 3-ம் நாள் அதாவது ஜூலை 19 - ஞாயிற்றுக் கிழமை அன்று திருப்பூரில் இருந்து சோமனூர் போகும் வழியில் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும், அருள்மிகு குழந்தை வேலாயுத ஸ்வாமி கோயில் அமைந்திருக்கும்
மலையடிவாரத்தில் உள்ள திருமணமண்டபத்தில் (மலைக்கோயில்), சக்தி விகடனும் குன்றுதோராடல் வழிபாட்டு குழு அமைப்பினரும் இணைந்து நடத்தும் வேல்மாறல் பாராயணம் பூஜை நிகழவுள்ளது. அன்பர்கள் இதில் கலந்துகொண்டு
முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுச் சிறக்கலாம்.

Comments

Post a Comment