அம்மனைக் கொண்டாடும் ஆடி!

‘ஆடி மாதம்’ என்றாலே, ‘அம்மன் மாதம்’ என்கிற அளவுக்குக் கிராமங்களில் காவல் காத்து வருகின்ற பெண் தெய்வங்களுக்குத் திருவிழாக்களும், திருவீதியுலாவும் திமிலோகப்படுவதை நாம் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறோம்.
ஆடி மாதம் பிறந்துவிட்டால் காவல் தெய்வங்கள் குடி இருக்கின்ற கோயில்களில் கோலாகலம் கூடும். அதுவரை பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாத காவல்தெய்வ ஆலயங்கள் புதுப் பூச்சு பூசிக் கொள்ளும். விழாப் பந்தல், சீரியல்செட் பல்பு அலங்காரம், வேப்பிலை தோரணங்கள் என்று களைகட்டி விடும்.
ஆடி மாதத்தில் பெண் தெய்வங்களின் ஆற்றல் கூடுகிறது என்பது பொதுவான நம்பிக்கை. ஆடி மாதத்தில் சூரியனைவிட சந்திரனுக்கு ஆற்றல் கூடி வருவதால், சக்தியின் ஆற்றல் இந்த ஆடி மாதத்தில் அதிகம் என்பது ஒரு கூற்று. சக்தி என்றாலே, பெண்தானே!
இதனால்தான் கிராமத்துக் காவல் தெய்வங்களுக்கே உரித்தான ஆட்டமும் பாட்டமும் ஆடியில் அமர்க்களப்படும். அலகு குத்தி நேர்த்திக் கடன், காவடி எடுப்பது, பால் குடம் சுமந்து வருவது, விளக்கு பூஜை வழிபாடுகள் என்று காவல் தெய்வங்களை ஊர்க்காரர்கள் குளுமைப்படுத்தி விடுவார்கள்.
இவை எல்லாவற்றையும்விட கூழ் வார்த்துப் படைக்கும் நேர்த்திக் கடன், கிராமத்து ஆலயங்கள் உட்பட பக்தர்களின் வீடுகளிலும் காண முடியும்.
மழைக் காலத்தின் துவக்கமாக விளங்கும் ஆடி மாதத்தில் இருந்து நல்ல மழை துவங்கும். மழைக் காலத்துக்கென்று சில நோய்களும் எங்கெங்கிருந்தோ முளைத்துப் பரவும். நம் முன்னோர்கள் காலத்தில் இன்றைக்கு இருப்பதுபோல் மருத்துவர்கள் இருந்தார்களா, என்ன? அப்போது எல்லோருக்கும் வைத்தியராகத் திகழ்வது அந்தந்த கிராமங்களில் விளங்கும் காவல் தெய்வங்கள்தான்!
காவல் தெய்வங்களின் ஆலயத்தில் காணப்படும் வேம்பும், எலுமிச்சையும் அருமருந்து. இந்த இரண்டும் சிறந்த கிருமி நாசினியும்கூட. கோயில் திருவிழாக்களில் அம்மனுக்கு வேம்பும், எலுமிச்சையும் அணிவிக்கப்பட்டுப் பிரசாதமாகத் தரப்பட்டன. இதனால் தொற்றுநோய்கள் விரட்டி அடிக்கப்பட்டன.
வெப்பம் குறைவான இந்த நாட்களில் உண்ணக் கூடிய உணவும் ஒரு பிரசாதம் ஆயிற்று. அதுதான், கூழ்!
எளிதில் செரிக்கக்கூடிய உணவான கூழை தயாரித்து காவல் தெய்வங்களுக்கு சமர்ப்பித்த பிறகு அனைவரும் உட்கொண்டார்கள். உடலுக்கு நல்லனவற்றைத் தரும் இந்த கூழைப் பற்றி ‘ஆடிக் கூழ் அமிர்தம்’ என்கிற ஒரு பழமொழியே உருவாயிற்று.
கூழ் வார்க்கின்ற முறை நமக்கு எப்போது வந்தது தெரியுமா?
சிறந்த தவ சீலரான ஜமதக்னி முனிவரை, கார்த்த வீர்யாஜுனனின் மகன்கள் கொன்ற கதையை நாம் அறிவோம். கணவரான ஜமதக்னி உயிர் நீத்த செய்தியைக் கேள்விப்பட்ட அவரது மனைவி ரேணுகாதேவி, தீயை மூட்டி அதற்குள் இறங்கி உயிர்விட முடிவு செய்தாள். காவல் தெய்வமாக இந்த ரேணுகாதேவி விளங்கி, என்றென்றும் நல்லருள் புரிய வேண்டும் என்று விரும்பிய இந்திரன், அப்போது ஒரு மழையைப் பொழிவித்து தீயை அணைத்தான்.
ரேணுகாதேவி சிறிய தீக்காயங்களுடனும், தீக் கொப்புளங்களுடனும் வெளியே வந்தாள். அவளது ஆடைகள் சேதமாகி இருந்தன. தீ பாதிப்பில் இருந்து தான் மீள வேண்டும் என்பதற்காக வேப்பமர இலைகளை ஆடையாக அணிந்து கொண்டாள்.
சோர்வு மேலிட ரேணுகாதேவி மெள்ள நடக்க ஆரம்பித்தாள். பசி ஏற்பட்டதால், அருகில் இருந்த குடிசை வீடுகளுக்குச் சென்று உணவு கேட்டாள். குடிசைவாசிகள் ரேணுகாதேவியின் நிலையைப் பார்த்து மனமிரங்கி அவளுக்குப் பச்சரிசி நொய்யையும், ஒரு சில காய்கறிகளையும் கொடுத்தனர். இளநீர்களையும் தந்தனர்.
பச்சரிசி நொய்யை வைத்து கஞ்சி தயாரித்துக் குடித்து பசியைப் போக்கிக் கொண்டாள். இளநீரைக் குடித்து சூட்டைத் தணித்துக் கொண்டாள்.
அப்போது சிவபெருமான் ரேணுகாதேவியின் முன் தோன்றி ‘நீ அணிந்த வேப்பிலை உன்னை வணங்க வரும் பக்தர்களின் பிணியைப் போக்கும். உன்னை நினைத்து கூழ் படைக்கும் பக்தர்களின் குடும்பம் குறைவிலா வளம் பெறும். உனக்கு இளநீரால் அபிஷேகம் செய்பவர்களின் குடும்பம் என்றென்றும் குளுமையாக இருக்கும்’ என்று ஆசிர்வதித்தாராம்.
ஆக - வேப்பிலை, கூழ், இளநீர் போன்ற இவற்றைத்தான் காவல் தெய்வங்களுக்கு நாம் சமர்ப்பித்து ஆசி பெறுகிறோம்.
நமது பாரம்பரியத்தில் உள்ள பல பண்டிகைகள், கிராம வளர்ச்சியை மனதில் வைத்து, உழவும் வாழ்வும் சிறக்க வேண்டும் என்பதற்காக வந்தவை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இதற்காக கிராமப்புற காவல் தெய்வங்கள்தான் அன்றைய நாளில் மிகவும் கோலோச்சி இருந்தன.
நதி தேவதைகளை ஆராதித்து வழிபாடு நிகழ்த்தும் ஆடிப் பதினெட்டு, ஆடித் தபசு, ஆடிப் பூரம் (வளையல் அணிவிப்பு) என்று எல்லா திருநாளுமே அம்மனை முன்னிலைப்படுத்தி இந்த மாதத்தில் நடத்தப்படும்.
நகரங்களில் உள்ள பிரபல ஆலயங்களில் ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அணிவிப்பு திருவிழா நடப்பது வழக்கம். அதுபோல் கிராமங்களில் உள்ள பெண் காவல் தெய்வங்களுக்கு ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வளைகாப்பு உத்ஸவம் மிக கோலாகலமாக நடத்தப்படும். இதற்காக பக்தர்கள் பலரும் கண்ணாடி வளையல்களை வாங்கி தாங்கள் வணங்கி வரும் காவல் (பெண்) தெய்வங்களுக்கு அணிவித்து அழகு பார்ப்பார்கள்.
குறிப்பிட்ட சில நாட்கள் வரை இந்த வளையல் அலங்காரத்திலேயே இருக்கும் தங்கள் காவல் தெய்வத்தைத் தரிசிக்க பக்தர்கள் தினமும் திரளுவர். ஒரு சில நாட்கள் கழிந்ததும் இந்த வளையல்களைக் கழற்றி, ஆலயத்துக்கு வரும் பெண் பக்தைகளுக்கு விநியோகிப்பார்கள் பூசாரிகள். கிடைத்தற்கு அரிய ஒரு பிரசாதமாக இதைப் பெற்று ஆனந்தப்படுவார்கள்.
திருமணம் தடைபட்டு வரும் கன்னிப் பெண்கள் இந்த வளையல்களை அணிந்து கொண்டால், காவல் தெய்வங்களின் அருளுடன் அவர்களுக்குத் திருமணம் விரைவிலேயே கூடி வரும்.
திருமணம் ஆகி குழந்தைப் பேறு தள்ளிப் போகும் சுமங்கலிகள் இதை அணிந்து கொண்டால், விரைவிலேயே அவர்கள் மணி வயிறு வாய்க்கப் பெறுவர். சிறுமிகள் இந்த வளையல்களை அணிந்து கொண்டால், கல்வியில் அவர்கள் தேர்ந்து விளங்குவார்கள்.
பெரியோர்கள் அணிந்து கொண்டால், அம்மனின் பரிபூரண அருள் அவர்களுக்கு இருக்கும் என்பதெல்லாம் தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை!
ஆடி மாதத்தில் காவல் தெய்வமாக விளங்கி வரும் அம்மனின் திருப்பாதம் தொழுது, அனைத்து நலன்களையும் பெறுவோம். அவளது ஆசி பரிபூரணமாகக் கிடைக்கும்.

Comments